By dn, சென்னை
First Published : 09 February 2013 03:18 AM IST
கிராமப்புறங்களில் மாணவர்களின் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளது.
ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்தை 5-ம் வகுப்பு மாணவர்கள்கூட வாசிக்கத் திணறுகின்றனர். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் வித்தியாசம் இன்றி மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக "ஏசர்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தமிழகத்தில் 2007-ம் ஆண்டில் 15.7 சதவீத மாணவர்கள் மட்டுமே தனியார் பள்ளிகளில் படித்தனர். ஆனால், இந்த எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் "ஏசர்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி தொடர்பான ஆய்வு அறிக்கையை "தி ஹிந்து' நாளிதழ் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் வெளியிட கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், "ஏசர்' அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தொடர்பாக கல்வியாளர் வசந்தி தேவி கூறியது:
நாடு முழுவதும் 585 மாவட்டங்களிலும் 4.48 லட்சம் குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில் 19,713 மாணவர்களிடம் இந்த ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் பள்ளிக்குப் போகிறார்களா, தனியார் பள்ளிக்குப் போகிறார்களா, அரசுப் பள்ளிக்குப் போகிறார்களா, கற்றுக் கொள்கிறார்களோ, கணிதம், ஆங்கிலம், வாசித்தல் திறன், பள்ளிகள் எவ்வாறு நடைபெறுகின்றன, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா போன்ற விவரங்கள் அறிக்கையில் உள்ளன.
தமிழ்நாட்டில் 99 சதவீதம் குழந்தைகள் பள்ளிகளில் சேருகின்றனர். கிராமப்புறங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 71 சதவீதம் குழந்தைகளும், தனியார் பள்ளிகளில் 29 சதவீத குழந்தைகளும் படிக்கின்றனர்.
தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து கண்டறிய வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் என்ன கற்றுக்கொண்டனர்?
முதல் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்தை அரசுப் பள்ளிகளில் 3, 4, 5 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் முறையே 30.7 சதவீதம் பேரும், 47.3 சதவீதம் பேரும், 63.3 சதவீதம் பேரும் மட்டுமே வாசிக்கும் திறனைப் பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் 3, 4, 5-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் முறையே 28.7 சதவீதமும், 51.8 சதவீதமும், 64.3 சதவீதமும் மட்டுமே வாசிக்கின்றனர்.
ஒன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் 53 சதவீதம் பேர் மட்டுமே ஓரிலக்க எண்களை (1 முதல் 9 வரை) அடையாளம் காணுகின்றனர். 2 ஆம் வகுப்பில் 54.2 சதவீத குழந்தைகள் மட்டுமே இரண்டு இலக்க எண்களை அடையாளம் காண முடிகிறது. ஐந்தாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் 13 சதவீதம் பேர் மட்டுமே வகுத்தல் கணக்கைப் போடுகின்றனர்.
இந்தக் குழந்தைகளில் கழித்தல் கணக்கைப் போட முடிந்தவர்களின் எண்ணிக்கை 38.6 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் அதிகம்: ஆங்கில எளிய வார்த்தைகளை வாசிப்பதில் இந்திய சராசரியைவிட தமிழகத்தில் சற்று அதிகமாகக் காணப்படுகிறது. 5-ம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் 57.1 சதவீதம் பேர் ஆங்கிலத்தில் எளிய வார்த்தைகளை வாசிக்க முடிகிறது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைப் பூர்த்தி செய்யும் பள்ளிகளின் விகிதம் இந்திய சராசரியைவிட தமிழகத்தில் அதிகமாக உள்ளது.
பள்ளிகளில் பெண் குழந்தைகள் பயன்படுத்தும் நிலையிóல உள்ள கழிவறைகள் 35 சதவீதத்திலிருந்து 2012-ல் 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாணவர், ஆசிரியர் விகிதாசாரம் 49:1 ஆக உள்ளது.
பள்ளி மேலாண்மைக் குழுக்களை முழுமையாக இயங்கச் செய்ய வேண்டும். இந்தக் குழுக்களின் மூலம் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பு பரவலாக்க வேண்டும் என்றார் அவர்.
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால்: ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடைக்கவில்லையென்றால் மக்கள் தட்டிக்கேட்பதைப் போல, பள்ளிகள் சரியாக செயல்படவில்லையென்றாலும் மக்கள் தட்டிக் கேட்க வேண்டும். மாணவர்களின் கற்றல் அடைவு என்ன என்பதைக் கண்காணிக்க அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.
பத்திரிகையாளர் ஞாநி பேசும்போது, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனில் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் மூலமாக ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை மதிப்பிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment