By தினமணி
First Published : 05 February 2013 04:33 AM IST
இந்தியாவில் கல்வி அமைப்பு பற்றிய புள்ளிவிவரங்களை ஆண்டுதோறும் திரட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது "அசர்' என்றொரு அமைப்பு. இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் 2012-ஆம் ஆண்டுக்கான அறிக்கை, பல அதிர்ச்சி தரும் தகவல்களை அளிக்கிறது. கிராமப்புற இந்தியாவின் கல்வி நிலை பற்றிய புள்ளிவிவரங்கள், நமது வளர்ச்சி என்பது எந்த அளவுக்குப் போலித்தனமானது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் 53 விழுக்காடு குழந்தைகள் இரண்டாம் வகுப்புக்கான பாடத்தைப் படிக்க முடியாத நிலையில் இருப்பதாக "அசர்' புள்ளிவிவரம் வெளிப்படுத்தி இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், இரண்டாண்டுகளுக்கு முன்பு 46% இருந்த நிலைமை, இப்போது, பள்ளிக் கல்விக்கான மத்திய நிதி ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்ட நிலையில் 53% ஆக அதிகரித்திருப்பதுதான். அரசுப் பள்ளிகளை மட்டும் பிரித்துப் பார்த்து ஆய்வு நடத்தியபோது, இந்தப் புள்ளிவிவரம் 58% ஆக மேலும் அதிகரிக்கிறது.
கழித்தல், வகுத்தல் போன்ற கணிதப் பயிற்சிகளில் நிலைமை அதைவிட மோசம். அடிப்படை அரிச்சுவடிக் கணக்குகளைக்கூட சரிவரச் செய்ய முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை நிலை. வகுத்தல் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால், கிராமப்புற இந்தியாவின் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் நான்கில் மூன்று பகுதியினருக்கு வகுத்தல் என்பது புதிராகவும், புரியாததாகவும் இருக்கிறது என்கிறது "அசர்' ஆய்வு.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, நகர்ப்புறங்களைப் போலவே, கிராமப்புறங்களிலும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது. தேசிய அளவில் 28% அதிகரித்திருக்கிறது என்றால், சில மாநிலங்களில் தனியார் பள்ளிகளிலான மாணவர் சேர்க்கை ஏறத்தாழ 60% அதிகரித்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததும், கட்டமைப்பு வசதிகள் இருந்தும் பராமரிக்கப்படாததும், அரசுப் பள்ளிகள் என்றாலே குழந்தைகளுக்கு முனைப்புடனும், கடமை உணர்வுடனும் சொல்லித் தர மாட்டார்கள் என்கிற பொதுக் கருத்து வலுப்பெற்றிருப்பதும்தான் இதற்குக் காரணம்.
கல்வி, சாலைப் பராமரிப்பு, சுகாதாரம், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு போன்றவை அரசின் கடமைகள் என்று காலாகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளைத் தனியார்மயம் என்கிற பெயரில் அரசு ஒன்றன்பின் ஒன்றாகக் கைகழுவுவதைப் பற்றிய விவாதத்திற்கு நாம் இப்போது வரவில்லை. ஆனால், கல்வி வரி என்கிற பெயரில் வசூலிக்கப்படும் மக்கள் வரிப்பணம், முறையாகச் செலவிடப்பட்டிருந்தால், செலவிடப்பட்ட பணம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதே என்பதுதான் நமது ஆதங்கம்.
2005-06 நிதியாண்டில் 2,555 கோடி ரூபாயாக இருந்த அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான (சர்வ சிக்ஷô அபியான்) நிதி ஒதுக்கீடு, கடந்த ஏழு ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து கடந்த 2012-13 நிதியாண்டில் 25,555 கோடி ரூபாயாக மூன்று மடங்கிலும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 2012-13 நிதியாண்டுக்கு மட்டும் எவ்வளவு தெரியுமா? ரூ. 74,056 கோடி!
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் அதிகம் பயனடைவது கிராமப்புற இந்தியாவாகத்தான் இருக்க முடியும். இந்தத் திட்டத்தின்படி, ஏறத்தாழ 40% ஆசிரியர்களுக்கும், 36% பள்ளிக்கூடக் கட்டமைப்பு வசதிகளுக்கும், 14% மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. தொடக்கக் கல்வி பெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு ரூ. 4,269 ஒதுக்குகிறது. ஊட்டச் சத்துடன் கூடிய மதிய உணவும் வழங்கப்படுகிறது.
இத்தனைக்குப் பிறகும், தொடக்கக் கல்வி பெறும் குழந்தைகளுக்கு அரிச்சுவடி வாய்ப்பாடு தெரியவில்லை, ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவனுக்கு இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தைப் படிக்கத் தெரியவில்லை என்றால், நமது வரிப்பணம் எங்கே வீணாகிறது, எப்படி வீணாகிறது? இந்தத் திட்டங்கள் எல்லாம் கோடிகளைக் கபளீகரம் செய்வதற்காகத்தானே தவிர, தெருக்கோடியில் இருக்கும் அடித்தட்டு வர்க்கத்தின் குழந்தைகளுக்கு முறையாகக் கல்வி புகட்டுவதற்கு அல்ல போலிருக்கிறதே!
""நூறு குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்தால் அவர்களில் ஐம்பது பேர் மட்டுமே ஆறாம் வகுப்புக்கு வருகிறார்கள். ஐம்பது பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். ஆறாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் பத்தாம் வகுப்புக்கு வரும்போது 35 குழந்தைகளே படிக்கிறார்கள். காரணம், ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வருவதற்குள் அவர்களில் பலர் தேர்வில் வெற்றிபெற முடியாமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். பிளஸ் டூ வரும்போது வெறும் 30 குழந்தைகளே படிக்கிறார்கள். அதாவது ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 100 குழந்தைகளில் 70 பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள்.
பிளஸ் டூ-க்குப் பிறகு இடைநிலை பட்டப்படிப்பு (பி.ஏ., பி.எஸ்சி.) படிக்க 15 பேர் வருகிறார்கள். முதுநிலை படிக்க (எம்.ஏ., எம்.எஸ்சி.) வெறும் 7 அல்லது 8 பேரே வருகிறார்கள். ஆக, மொத்தம் ஒன்றாவதில் சேர்ந்த 100 குழந்தைகளில் 92 பேர் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை வருவதில்லை. இது இந்தியா முழுவதும் உள்ள நிலைமை'' என்று சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கவிஞர் பாரதி கிருஷ்ணகுமார் வெளியிட்ட தகவல், "அசர்' அமைப்பின் புள்ளிவிவரத்தைவிட அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
அடிப்படைக் கல்வியே சரியில்லை. திறமையான ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில், வீதிக்கு வீதி பொறியியல் கல்லூரிகளும், உயர்கல்வி நிறுவனங்களும் தனியாரால் தொடங்கப்படுகின்றன. பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க மத்திய அரசு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் யாரை ஏமாற்ற நினைக்கிறோம்?
No comments:
Post a Comment