பாலியல் குற்றவாளிகள் ஆசிரியர்களாக நீடிக்கக்கூடாது: முதல்வர்-28-06-2012
சென்னை: பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பள்ளி மாணவ-மாணவியர், ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது, நெடுங்காலமாக நடந்துவரும் விஷயமாக இருந்தாலும், சமீப ஆண்டுகளாக அந்த கொடுமையான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக, சமூகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக முதல்வர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முதல்வரின் இந்த உத்தரவையடுத்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா, அரசாணை ஒன்றை வெளியிட்டு, அது அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும், கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்த புதிய அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: சமூகத்திற்கு முன்னோடியாக விளங்க வேண்டிய ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்கள் புரிவதால், மாணவர்கள், குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அரசுக்கு அதிக புகார்கள் வந்துகொண்டுள்ளன.
இந்த மோசமான சூழலை நீக்கி, ஆசிரியர் - மாணவர் என்ற புனிதமான உறவை ஒழுங்கமைக்கவும், தங்கள் பணியின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்படவும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஒழுங்கு நடவடிக்கை
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு, பணி நீக்கம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும். அரசு பள்ளி ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்க அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2) பொருந்தும். இந்த விதியை மீறுபவர்களுக்கு, மேற்குறிப்பிட்ட தண்டனைகளில் ஒன்றை வழங்கலாம் என தமிழ்நாடு குடிமைப்பணி விதி 8ல் கூறப்பட்டுள்ளது.
குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
No comments:
Post a Comment