இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை-01-06-2012
மதுரை: இடைநிலை ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
உத்தமபாளையம் அருகே, ராயப்பன்பட்டி ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: நான், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து, தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 2004ல் பதிவு செய்தேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 2008, அக்., 20க்குப் பின், மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மத்திய அரசு, 2009ல் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஆசிரியர் பணிக்கு, குறைந்தபட்ச தகுதியை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) நிர்ணயித்தது. இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித்துறை, 2011, நவ., 15ல், அரசாணை 181 வெளியிட்டது. அதில், "பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவர். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், மாநில பதிவு மூப்பு தொடர்ந்து பின்பற்றப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம், 2012, மார்ச் 7ல், "அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளில், 2010, ஆக., 23க்கு பின், இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்" என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, ஏற்கனவே வெளியான அரசாணை, 181க்கு முரணானது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற, தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு, நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜரானார். நீதிபதி தனது உத்தரவில், "ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு, 2 வாரத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது" என்றார். பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை, ஜூன் 18க்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment