ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்த வலியுறுத்தல்
நாகப்பட்டினம், மே 28: கல்வி ஆண்டு தொடக்கத்துக்கு முன் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்ட வட்டாரச் செயலாளர்கள் கூட்டம், நாகையில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு. லட்சுமிநாராயணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் சி. பிரபா, தங்க. மோகன், பி. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: கல்வி ஆண்டின் தொடக்கத்துக்கு முன்பாக ஆசிரியர்களுக்கு ஒளிவுமறைவற்ற கலந்தாய்வை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்.
சீர்காழி வட்டாரத்தில், பணியாளர் சிக்கன கூட்டுறவு சங்கம் (ஓ.எஸ்- 52) ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கூட்டுறவு சங்கக் கணக்குப் புத்தகம் மற்றும் கசர் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவுத் துறை இணை இயக்குநரை கேட்டுக்கொள்வது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜூன் 13-ம் தேதி நடைபெறவுள்ள கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் திரளானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வென்றெடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக, நாகை நகரச் செயலர் மு. தாமோதரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment