14. ‘வந்தேமாதரம் சொல்லு’
By இரா. எட்வின்
First Published : 01 January 2016 10:00 AM IST
‘மலம்
அள்ளுபவளின்
எந்தக் கை
பீச்சாங்கை’
-சதீஷ்பிரபு
அள்ளுபவளின்
எந்தக் கை
பீச்சாங்கை’
-சதீஷ்பிரபு
இப்போது இருப்பது போல் நவீன கழிவறை வசதிகள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளின் அந்திப் பகுதி அது. வீடுகளின் பின்புறம் கொல்லைப்புறம் என்று அப்போது அழைக்கப்படும். பொதுவாக எல்லோருமே இயற்கை உபாதைகளை ஏதோ ஒரு ஒரு ஒதுக்குப்புறத்தில் முடித்துக் கொள்வார்கள். வசதி படைத்த மேட்டுக் குடிகள் மட்டும் வீட்டின் கொல்லைப் புறத்தின் ஓரத்தில் ஒரு மறைப்பு கட்டியிருப்பார்கள். அதனினும் வசதியானவர்கள் அந்த மறைப்பை சுவர் கொண்டு எழுப்பியிருப்பார்கள். அதன் உள்ளே உட்காருகிற மாதிரி தேவையான அளவு சின்ன மேடை போல கட்டியிருப்பார்கள். அதன் மேலே அமர்ந்து மேடையின் அந்தப் பகுதியில் விழுகிற மாதிரி மலம் கழிப்பார்கள்.
குவிந்து கிடக்கும் மனித மலத்தை அள்ளி சுத்தம் செய்வதெற்கென்று ஒரு சாதியை சாதிக் கட்டுமானம் ஏற்பாடு செய்திருந்தது. அந்தத் தோழர்கள் ஒரு தட்டுக்கூடை, ஒரு டப்பாவில் சாம்பல், மலத்தை அள்ளி கூடையில் கொட்டுவதற்குத் தோதான இரண்டு இரும்புத் தட்டுகள் ஆகியவற்றோடு வருவார்கள்.
குவிந்து கிடக்கும் மனித மலத்தில் சாம்பலைக் கொட்டி அதை கொஞ்சம் உலர வைத்து கொண்டு வந்திருக்கும் அந்த இரண்டு தட்டுகளால் வாரி வழித்து தட்டுக்கூடையில் போட்டு கொண்டுபோய் மந்தைகளில் கொட்டுவார்கள். தட்டுக்கூடையை தலையில்தான் சுமந்து போக வேண்டும். அப்படிப் போகும் போது தட்டுக்கூடையிலிருந்து பல நேரம் மலம் அவர்களது கன்னங்களில் கசியும். அதை தங்களது இரண்டு கைகளாலும் துடைத்துக் கொள்வார்கள்.
இந்தக் கொடுமை சகிக்காமல் சதீஷ்பிரபு என்ற தம்பி தனது கவிதையில்,
’மலம் அள்ளுபவளின்
எந்தக் கை
பீச்சாங்கை’ என்று எழுதினான்.
எந்தக் கை
பீச்சாங்கை’ என்று எழுதினான்.
அன்றைய தூத்துகுடியில் நிறைய ஆங்கிலேயர்கள் வசித்து வந்தனர். அவர்களை துரை என்றுதான் மக்கள் அழைப்பார்கள்.
ஒரு காலைப் பொழுதில் அப்படிப்பட்ட ஒரு துரைமார் ஒருவரின் வீட்டின் கொல்லைப் புறக் கழிவறையை சுத்தம் செய்வதற்காக ஒரு அம்மாயி வருகிறார். கொல்லைக் கதவு திறந்திருக்கிறது. அந்த வெள்ளைத் துறை கழிவறைக்கும் கொஞ்சமாய் தள்ளி நின்று பல் விளக்கிக் கொண்டிருக்கிறான். வந்தக் கிழவி தனது கூடையை கீழே வைத்து விட்டு துரையைக் கும்பிட்டுக் கொள்கிறாள். ஒரு சன்னமான தலை அசைப்பில் அந்த வெள்ளைத் துரை அவளது மரியாதையை ஏற்கிறான். பதிலுக்கு மரியாதை செய்யா விட்டாலும் இப்படி மரியாதையை ஏற்பது என்பதுகூட நமது ஆண்டைகளிடம் இல்லாத ஒரு பெருந்தன்மை.
வழக்கமாக இது முடிந்ததும் கிழவி சுத்தம் செய்ய கழிவறைக்குள் நுழைந்து விடுவாள். ஆனால் அன்று கூடையை வைத்து விட்டு வணங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள். இது வழக்கத்துக்கு முற்றிலும் புதிதானது. எதோ தேவை போல கிழவிக்கு என்று படுகிறது அந்தத் துரைக்கு. ஏதேனும் உதவி தேவைப் படுகிறதா என்று கேட்கிறான். இல்லை என்று அந்தக் கிழவி சொல்லவே. அப்புறம் ஏன் தேவையில்லாமல் நிற்க வேண்டும் என்று கேட்கிறான். அப்போது கிழவி சொல்கிறாள்,
‘எனக்கு வேற ஒன்னு வேணும் தொர’
‘என்ன வேணும்?’
கிழவி மீண்டும் மௌனமாகி விடவே அவன் மீண்டும் என்ன வேண்டுமென்று கேட்கிறான். ஏதும் பேசாது கிழவி மௌனமாக இருக்கவே எரிச்சலடைகிறான்.
‘கேக்குறேன்ல. காதுல விழல, செவுடே, என்ன வேணும்?’
‘தொர, ஒரே ஒருதரம்…’
‘என்ன?’
‘வந்தே மாதரம் சொல்லு தொர’
‘ திமிறா கெழட்டு நாயே’
‘சொல்லு தொர’
‘சொல்ல மாட்டேன்’
‘அப்ப அள்ள மாட்டேன்’
கிழவி போய்விட்டாள். கிட்டதட்ட அன்றைய தேதியில் எல்லா துரைமார்கள் வீடுகளில் இதுதான் நடந்திருக்க வேண்டும். இப்படி நடந்திருக்கும் பட்சத்தில் துரைமார்களின் வீடுகள் நாறிப் போயிருந்திருக்கும். இதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. நிச்சயமாக கழிவறை சுத்தம் செய்பவர்களை ஆங்கிலேயர்கள் தண்டித்திருக்க முடியாது. காரணம் அவர்களைத் தண்டித்துவிட்டு கழிவறைகளை சுத்தம்செய்ய அவர்களால் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க முடியாது. ஏனெனில் இவர்களை விட்டால் மலம் அள்ளுவதற்கு யாரும் இல்லை என்பதும் இவர்களைப் பகைத்துக் கொள்வதால் வீடு நாறிப் போவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடாது என்பதும் ஆங்கிலேயர்களுக்கு தெரிந்துதானிருக்கும். ஆகவே எனது யூகப்படி இதுதான் நடந்திருக்க வேண்டும்,
அவர்கள் வந்தேமாதரம் சொல்லியிருக்க வேண்டும்.
இந்தச் சம்பவத்தை அநேகமாக ச.தமிழ்ச்செல்வன் அவர்களது 1947 என்ற குறுநூலில் இருந்துதான் எடுத்திருக்க வேண்டும். அல்லது வேறு நூல் என யாருக்கேனும் தெரியும் பட்சத்தில் சொன்னால் நலமாயிருக்கும்
இது புனைவல்ல, வரலாறு. எனில் இந்த வரலாறு எத்தனைபேருக்கு தெரியும். குறைந்த பட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு வரலாறு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்காவது அல்லது அந்த வரலாறு பாட ஆசிரியர்களுக்கு கல்லூரிகளில் வரலாறு சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களுக்காவது தெரியுமா? தெரியாது என்பது கசந்தாலும் உண்மை.
தெரியாது என்பது அவர்களின் குற்றமா? அவர்களுக்கு தெரியுமளவிற்கு இந்த சம்பவம் பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ பாடத் திட்டத்தில் இல்லை. ஏன் இல்லை?
வந்தேமாதரம் சொல்லக் கூடாது என்று ஆங்கிலேயம் சட்டம் போடுகிறான். அந்த வார்த்தையை ஏறத்தாழ ஒரு கெட்ட வார்த்தையாக, தமது பேராதிக்கத்தை அசைக்கக் கூடிய ஒரு கொடும் ஆயுதமாக அவன் பார்க்கிறான். அந்த வார்த்தையை பொது இடங்களில் உச்சரித்தால் கடுந்தண்டனைகளைத் தருகிறான். சொல்பவர்களை சிறையில் அடைத்திருக்கிறான். கோபத்தின் உச்சத்தில் வந்தே மாதரம் சொன்னவர்களை ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுப் போட்டிருக்கிறான்.
வந்தேமாதரம் என்ற ஒற்றைச் சொல் சுதந்திரப் போராட்டக் காலத்தில் களத்தில் நின்ற, களமேக முடியாத அனைவருக்கும் ஒருவிதமான புத்தெழுச்சியைக் கொடுத்த வார்த்தை. இன்னும் கொஞ்சம் இறங்கி உண்மையை சொல்ல வேண்டும் எனில் அந்த மந்திரச் சொல் கிழவர்களை பெண்களை முடியாதவர்களைக் கூட களத்தில் கொண்டு வந்து தள்ளியது.
சொல்லாதே என்றான். திரண்டு நின்று சொன்னார்கள். மிரட்டினான், இன்னும் கூடுதலாய் குரலெடுத்து வந்தேமாதரம் என்று உயிர்கசியக் கத்தினார்கள். அடித்துச் சிறைப்படுத்தினான்.
அப்படி அந்த வார்த்தையை சொல்லி அதற்காக வதைபட்டவர்களை எல்லாம் அவன் தேசத்துரோகி என்றான். நான் அப்படி சொல்வதை தேசப்பற்று என்கிறோம். அவன் அந்த செயலை தேசத் துரோகம் என்றான். நாம் அதை தியாகம் என்று போற்றுகிறோம்.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சுதந்திர தின நிகழ்ச்சிகளின் போது நிச்சயமாக ஒரு குழந்தையேனும் குமரன் வேடம் போட்டிருக்கும். கையில் கொடியோடு மழலையில் அந்தக் குழந்தை வந்தேமாதரம் சொல்லும் போது குமரனையே நேரில் பார்ப்பது போன்ற ஒரு சிலிர்ப்பு இன்றைக்கும் ஏற்படவே செய்கிறது.
கொடியை காத்ததற்காக மட்டுமல்ல குமரனைக் கொன்றது. திருப்பூர் வீதிகளில் மூன்றுவர்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு அவன் வந்தேமாதரம் சொல்லிக் கொண்டுவந்த போது அவன் தாக்கப்படுகிறான். அவன் பேரதிகமாய்த் தாக்கப்பட்டது வந்தே மாதரம் சொன்னதற்காகத்தான்.
ஒரு உண்மையை சொல்ல வேண்டும். எவ்வளவு தாக்கியும் குமரன் சாக வில்லை. இது ஆங்கிலேயர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. வாங்கிய அடிக்கு அவன் ஏழெட்டு முறையேனும் செத்திருக்க வேண்டியவன். கொடியை இறுக்கிப் பிடித்தவாறே வந்தேமாதரம் என்று முனகிக் கொண்டே இருக்கிறான். ஒருக்கால் கையிலிருக்கும் கொடியைப் பிடுங்கினால் அவன் மரணமடையக் கூடும் என்று யாரோ கூறவே கொடியைப் பிடுங்குகிறார்கள். கொடியைப் பிறிந்த பிறகு அவன் உயிர் மெல்ல மெல்லப் பிரிகிறது. உயிர்ப் பிரிகிற அந்த வேளையிலும் அவன் வாய் வந்தேமாதரம் சொல்கிறது.
அவனது தியாகம் மிகப் பெரிய ஒன்று. அவர்களைப் பற்றிய வரலாறுகூட போதுமான அளவிற்கு சொல்லித் தரப்படவில்லை. ஏன், போதிய அளவிற்கு பதியப் படவே இல்லை.
நம் மக்கள் 5000 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு இன்னும் கொஞ்சம் துப்பாக்கி ரவைகள் இருந்திருக்குமானால் இன்னும் நிறையபேரைக் கொன்றழித்திருப்பேன் என்று கொக்கறித்த டயரைப் பற்றி பதிவுகள் கிடைக்குமளவிற்கு நமக்கு அவனைக் காத்திருந்து கொன்ற உதம்சிங் பற்றிய பதிவுகள் இல்லையே.
வழக்கமாக இவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் குழந்தைகளுக்கு சொல்லி இரண்டு கேள்விகளை அவர்களிடம் வைப்பேன்.
- பள்ளிப் பாடப் புத்தகங்களில் 5000 இந்தியர்களை சுட்டுக் கொன்ற டயரின் வரலாறு வைக்கப் பட வேண்டுமா? அல்லது இந்தியர்களை சுட்டுக் கொன்ற டயர் என்னும் கொடியவனை 20 ஆண்டுகள் தவமிருந்து கொன்று சாய்த்த உதம்சிங்கின் வரலாறு வைக்கப்பட வேண்டுமா?
- வந்தேமாதரம் சொல்லியதால் தண்டிக்கப் பட்ட தியாகிகளைப் போற்றிக் கொண்டாடி வரலாறுகளில் பதிந்து மாணவர்களுக்கு சொல்லித் தருவது போலவே வந்தேமாதரம் சொல்லச் சொல்லி வெள்ளையர்களை நிர்ப்பந்தித்த அந்த மலம் அள்ளும் அம்மாயியின் வரலாறு சொல்லித் தரப்பட வேண்டுமா? இல்லையா?
என் பள்ளிக் குழந்தைகள் உதம்சிங்கின் வரலாறு கேட்கிற போதெல்லாம் சிலிர்த்தே போகிறார்கள். மலம் அள்ளும் கிழவியின் செயலைக் கேட்டதிலிருந்து நிறையக் காலத்திற்கு அந்தக் கிழவியே கதாநாயகியாக இருப்பது எனக்குத் தெரியும். எனவே அவர்கள் என்ன பதிலை எனக்கு சொல்லுவார்கள் என்பது மிகவும் வெளிப்படையானது.
அதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் டயரைப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டு உதம்சிங்கின் வரலாறைத் தங்களுக்கு வைக்க வேண்டுமென்றும், வந்தே மாதரம் சொல்லி உதைபட்டவர்களை விடவும் வந்தே மாதரம் சொல்லச் சொல்லிய, அல்லது சொல்ல வைத்த அந்தக் கிழவி போன்றோரின் வரலாறுகளே தங்களுக்குத் தேவை என்றும் பல பிள்ளைகள் சொல்வார்கள்.
அப்படியெல்லாம் இல்லை டயரின் வரலாறும் அவசியம். ஏன் எனில் அப்போதுதான் உதம்சிங்கின் வரலாறு முழுமைபெறும் என்றும், வந்தேமாதரம் சொல்லச் சொல்லி போராடியவர்களையும் வந்தேமாதரம் சொல்லிப் போராடியவர்களையும் சேர்த்தே படிக்க வேண்டும், அவர்களின் நோக்கம் ஒன்றென்பதைப் புரிய வைத்துவிட்டால் போதும் கண்கள் அகலமாய் விரிய ஏற்றுக் கொள்வார்கள்.
இப்படியாக மறைக்கப்பட்ட வரலாறுகளை பதிவு செய்து பொதுத் தளத்திற்கு அறியத் தருவது மிகவும் அவசியமானதாகும். அவற்றைப் பாடத் திட்டத்தில் வைத்து மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டியது வேறெதை விடவும் அவசியமானது
No comments:
Post a Comment