13. கேள்விகளைக் களவு கொடுத்துவிடாதீர்கள்
By இரா. எட்வின்
First Published : 25 December 2015 10:00 AM IST
தீரத் தெளிதலென்பது கற்றலின் முக்கியமான கூறுகளில் ஒன்று. அரைகுறை அறிவை யாரும் ஒரு போதும் கொண்டாடுவது இல்லை. அப்படியே தவறுதலாக கொண்டாடப்பட்டாலும் அறைகுறை அறிவின் சாயம் வெகு விரைவிலேயே வெளுத்தும் போகும். சாயம் வெளுத்து அம்பலப்பட்டுப்போன அரைகுறை அறிவாளி முட்டாள்களைவிடவும் கேவலமாகவே மதிப்பிடப் படுவான். எனவேதான் வள்ளுவன் கசடறக் கற்கக் கேட்கிறான்.
கற்றல் செயல்பாட்டில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் தமது மாணவர்கள் தெளிவாய்க் கற்றுத் தேறுவதையே விரும்புவார்கள். அவர்கள் செயல்பாடுகளும் அதற்கேற்றார் போலவே இருக்கும். தெளிந்த கற்றலுக்கான கருவிகளுள் மிக முக்கியமான ஒன்று மாணவர்களின் கேள்விகள் என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
‘புரியுதா?’ என்று கேட்பது நல்ல ஆசிரியர்களுக்கான அடையாளங்களுள் ஒன்று. புரிகிற வரைக்கும் போராடும் ஆசிரியர்கள் ஏராளம் இருக்கிறார்கள். சாதித்த மனிதர்களின் பின்னால் நிச்சயமாக அவர்களுக்கு புரியும் வரைக்கும் போராடிய ஆசிரியர்கள் இருப்பார்கள்.
கேள்விகளை விரும்பாத ஆசிரியர்கள் இல்லவே இல்லை என்றும் சொல்லவில்லை. அவர்களது எண்ணிக்கை மற்றவர்களைவிடவும் கூடுதலாகவே இருக்கக் கூடும்.
‘கல்விக் கொள்கை 2016’ குறித்த கலந்துரையாடல் ஒன்றினை ‘லிட்டில்ஸ்’ என்ற அமைப்பு சென்றவாரம் மதுரையில் நடத்தியது. நான்கு விஷயங்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது,
1) வழக்கமாக தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் கலந்துகொண்டு கத்தி தங்களது சக்தியை செலவழிக்கும் ‘சமூக ஆர்வலர்கள்’ யாரும் கலந்து கொள்ளாதது.
2) கல்விக் கொள்கை பற்றி விவாதிக்கவும் கருத்து சொல்லவுமான அந்த கலந்துரையாடலில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோரோடு பெற்றோர்களையும் மாணவர்களையும் கலந்துகொள்ள செய்தது
3) கலந்து கொண்ட அனைவருமே ஆக்கப்பூர்வமாக விவாதங்களில் பங்கெடுத்தது.
4) முத்தாய்ப்பாக, ஒன்பதாம் வகுப்பு மாணவியும், பதினொன்றாம் வகுப்பு மாணவனும் வைத்த வகுப்பறை குறித்த கருத்துகள்.
மாணவர்கள் கலந்து கொள்ளாத கல்வி குறித்த எந்த ஒரு விவாதமும் முழுமையடையாது. மாணவர்களையும் விவாதத்தில் பங்கேற்க வைத்த தோழர் வர்தினி பர்வதா அவர்களை இதற்காக நன்றியோடு வணங்கிக் கொள்கிறேன்.
அந்தப் பிள்ளை பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் தனது ஆசிரியரிடம் ஐந்தாயிரம் மக்களுடன் பௌத்தத்தை தழுவவேண்டிய தேவை அம்பேத்கருக்கு ஏன் வந்தது என்று கேட்டிருக்கிறான்.
அந்தக் கேள்விக்காக ஆசிரியர் அவனை வகுப்பைவிட்டு வெளியே போகச் செய்திருக்கிறார். ஒரு ஆசிரியராக இருப்பதற்காக வெட்கப்படக் கூடிய சூழ்நிலைகள் அவ்வப்போது வரும். அதுபோன்ற ஒரு தருணம் அது.
எவ்வளவு ஆழமான கேள்வி. சாதிய கட்டுமானங்களை அம்பலப்படுத்தக் காத்திருக்கும் ஒரு ஆசிரியரிடம் அந்தக் கேள்வி கேட்கப் பட்டிருக்குமானால் அது எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும். அவராக இதுகுறித்து பேச முடியாது. அதற்கு கட்டமைப்பு இடம் தராது. மீறியும் ஏதாவது பேசுகிற என் போன்றவர்கள் பள்ளிக்கு வெளியிருந்தும் உள்ளிருந்தும் ஏகப்பட்டப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு கேள்வி மட்டும் என்னைப் போன்றவர்களிடம் கிடைத்து விடுமானால் ஒருவாரம் வகுப்பெடுத்து விடுவோம்.
மெத்தப் படித்த அம்பேத்கர் அவர்களது திருமணத்திற்கு யாரும் திருமண மண்டபம் தரவில்லை என்பதும். அந்த மாமனிதனது திருமணம் இரவொன்றில் மீன்சந்தையில் நடந்தது என்கிற உண்மையை குழந்தைகளுக்குக் கொண்டு போயிருக்கலாமே. அம்பேத்கர் போன்ற மாமனிதர்களே தங்களது திருமணங்களை இப்படித்தான் நடத்த முடிந்தது என்றால் அந்தக் காலத்து சேரித் திருமணங்கள் எந்த அளவிற்கு மோசமான சூழ்நிலைகளில் நடந்திருக்கும் என்பதை விரித்துச் சொல்வதற்கும் அன்றைய சாதிப் படிநிலைகளை உயர்சாதி ஆணவத்தை, அடாவடித்தனத்தை தோலுரித்துக் காயப் போடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பை அல்லவா அந்தக் குழந்தை ஆசிரியருக்கு கொடுத்திருக்கிறான்.
அம்பேத்கர் அவர்களிடம் பணிபுரிந்த இடைசாதி ஊழியர் எவ்வளவு சாதித் திமிரோடு அவரோடு நடந்து கொண்டார் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பல்லவா அது. அந்த இடைசாதி ஊழியர் தனது அதிகாரியான அம்பேத்கர் கைபட்ட கோப்புகளைக் கூட தொட மாட்டாராம். தொட்டால் தீட்டுப் பட்டுவிடுமாம். அண்ணல் எங்கேனும் ஒரு கூட்டத்திற்குப் போக வேண்டும் என்றால், கோப்புகளை எடுத்து வர வேண்டிய அவர் அவற்றை எடுத்து வர மாட்டார். ஏவலர் சுமக்க வேண்டிய கோப்புகளைக் கூட அண்ணலே சுமந்து வருவதும் அந்த ஏவலர் தீட்டுப் பட்டுவிடாத தூரத்தில் தனது அண்ணலைத் தொடர்ந்து வருவாராம். இத்தகைய கேவலத்தை பாட நூல்கள் சொல்லித் தராது. ஆசிரியர்களாலும் தன்னெழுச்சியாய் இவற்றை சொல்லித்தர இயலாது. ஆனால் இந்த மாணவனது கேள்விக்கு பதில் சொல்கிற சாக்கில் முடிகிற அளவு இவற்றை அம்பலப்படுத்தி இருக்க வேண்டாமா?
அண்ணல் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை வணங்குவது தனது சாதிக்கு இழுக்கு என்று ஒருபோதும் அவர் அண்ணலை வணங்கியது இல்லை. ஆனால் அண்ணலோடு எங்கோ சென்றுகொண்டிருந்த ஒரு பொழுதில் அந்த ஏவலருக்கும் கீழான நிலையில் உள்ள ஊழியர் ஒருவர் எதிர்பட்டிருக்கிறார். அப்போது அதே ஏவலர் தனக்கும் கீழ்நிலைப் பொறுப்பில் உள்ள அந்த பிராமணரை விழுந்துப் பணிந்து மரியாதைத் தந்திருக்கிறார்.
படிப்பையும் பணி நிலையையும் விட சாதி எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தது என்பதையும் மிக உயர்வான மனிதர்கள் கூட தன்னைவிட படிப்பில் அந்தஸ்தில் குறைந்தவர்களால் சாதியின் பொருட்டு அவமானப்பட நேர்ந்திருக்கிறது என்பதை புரிகிற மாதிரி விளக்கியிருக்க முடியும்.
அந்தக் காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் அடிமைத்தனம் வழக்கத்தில் இருந்தது. மனிதனுக்கு மனிதன் அடிமையாய் தொண்டூழியம் செய்து கொண்டிருந்த அவலம் மிகுந்த காலம். ஒருவனிடம் இருக்கும் கல்வியை விடவும் செல்வத்தை விடவும் அவனிடம் இருக்கும் அடிமைகளின் எண்ணிக்கையே சமூகத்தில் அவனது செல்வாக்கைத் தீர்மானித்தது. ஆனால் அடிமைகளுக்கு இருந்த உரிமைகளும் சலுகைகளும்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு இல்லை. அடிமைக்கு சுகவீனம் வந்தாலோ அல்லது செத்துப் போனாலோ அது தனக்கு இழப்பைத் தரும் என்பதால் எஜமானன் தனது அடிமையின் உடல் நலத்தில் அக்கறை காட்டினான். அவனது மருத்துவ செலவுகளை ஏற்றான். ஆனால் அத்தகையதொரு சூழலும் சாதியச் சமூகத்தில் இல்லை. ஆக ஏதும் படிக்காத, தன் பெயரில் சொத்தெதுவும் இல்லாத அடிமையை விடவும் மெத்தப் படித்த பணக்கார தாழ்த்தப்பட்டவன் அதிகம் ஒடுக்கப்பட்டவனாகவே இருந்தான்.
இத்தகைய சாதியப் படிநிலைகளைக் கொண்ட இந்து மதத்தின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையும் புத்தத்தில் இத்தகைய நிலை இல்லை என்பதால் அண்ணல் அங்கு நகர்ந்தார் என்கிற அளவிற்கேனும் அதற்கான காரணங்களை சொல்லி அதற்கான முழுமையான காரணங்களை மாணவர்கள் தேடிக் கண்டடையும்படி செய்திருக்கலாம்.
இதைத் தவிர்த்து மாணவனை வெளியே அனுப்ப வேண்டியத் தேவை ஏன் வந்தது?
1) அவருக்கு அந்தக் குழந்தையின் கேள்விக்கான விடை தெரிந்திருக்காது
2) பதிலை சொல்லி ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வு
3) அந்த ஆசிரியரிடம் இருக்கக் கூடிய ஆதிக்கசாதி மனோபாவம்
காரணம் எதுவாயிருப்பினும் மாணவனை அந்தக் கேள்விக்காக வகுப்பறைக்கு வெளியே அனுப்பிய ஆசிரியர் மிகுதியான கண்டனத்திற்கு உரியவர்.
பதில் தெரியாது என்றால் ஒன்று தனக்கு தெரியாது என்ற உண்மையைச் சொல்லி தெரிந்து கொண்டு வந்து சொல்லியிருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் அதெல்லாம் பரிட்சைக்கு வராது என்று ஆசிரியத் தனத்தோடாவது சொல்லி அவனை வகுப்பறையில் வைத்திருந்திருக்கலாம்.
பதில் தெரிந்திருந்து ஆதிக்க சாதியோடு ஆசிரியர் அப்படி நடந்து கொண்டிருந்தால் நிச்சயமாக அவர் ஆபத்தானவர்.
மிகவும் உடைந்து போயிருந்த அந்த மாணவனைப் பார்த்ததும் எனக்கு கவலை தொற்றிக் கொண்டது. எங்கே கேள்வி கேட்டால் வகுப்பைவிட்டு வெளியேற்றப் படுவோமோ என்கிற அச்சத்தில் தன்னிடம் இருக்கிற கேள்விகளை எல்லாம் ஏதேனும் ஒரு திருவிழாவில் தொலைத்து விடுவானோ என்று அச்சமாக இருக்கிறது.
யோசித்துப் பாருங்கள், கேள்விகளைத் தொலைத்த மாணவச் சமூகம் ஒருபோதும் தெளிந்துத் தேறாது.
‘உங்களது கேள்விகளில் பல உதாசீனப்படுத்தப் படலாம், சில கேள்விகள் உங்களுக்கு தண்டனைகளைக் கூட கொண்டு வரலாம். தளர்ந்து விடாதீர்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய மனிதர்களை நிச்சயமாய் நீங்கள் கண்டடைவீர்கள்.
உங்களிடமிருக்கும் கேள்விகளைக் களவாடிப் போகவே ஆதிக்கச் சமூகமும் கார்ப்பரேட் சமூகமும் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றன. கேள்விகளைக் களவு கொடுத்துவிடாதீர்கள் குழந்தைகளே’ என்று மாணவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
ஏறத்தாழ இதே நேரத்தில் தனது ஒரு கேள்விக்காக ஃப்ரான்ஸ் குடியுரிமை வைத்திருக்கக் கூடிய ஈழத்து மாணவன் ஒருவன் தமிழ் மண்ணில் நையப் புடைக்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்தது.
ஜோன்ஸ் ஆண்டன் புலேந்திர ராசா சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை படித்துக் கொண்டிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘பேரிடர் மேலாண்மை’ குறித்த கருத்தரங்கத்தில் அந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர் என்ற முறையில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.
மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர் திருமதி ஜோதி நிர்மலா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். பேரிடர் என்றால் என்ன என்பது பற்றியோ அல்லது அத்தகைய பேரிடர்களை எப்படி எதிர்கொள்வது என்கிற பேரிடர் மேலாண்மை குறித்தோ உரையாற்றாமல் இந்த பேரிடரின் போது அரசு செய்த நிவாரணப் பணிகள் குறித்து மிகவும் மிகையான ஒரு மதிப்பீட்டுப் பட்டியலை அவர் வைத்திருக்கிறார். முதல்வரின் கருணை குறித்தும் தாயுள்ளம் குறித்தும் கட்சிக்காரர்களே கூச்சப்படும் அளவிற்கு நீண்டு பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்.
அனைவரும் முகம் சுழிக்கும் படியான இந்த உரை ஜோன்ஸ் ஆண்டன் புலேந்திர ராசாவையும் சலிப்படையச் செய்திருக்கிறது. அவர் எழுந்து அந்த உரை பேரிடர் மேலாண்மை குறித்தோ அல்லது குறைந்த பட்சம் உண்மையான நிவாரணப் பணிகள் குறித்தோ இல்லை. மாறாக ஏதோ நிறையப் பெய்த மழையினால் ஏற்பட்ட பேரிடரிலிருந்து சென்னை மக்களை தாயுள்ளம் மிக்க முதல்வரின் கருணை எப்படிக் காப்பாற்றியது என்கிற நிரல்களின் தொகுப்பாக இருக்கிறது என்று நீள்கிறது.
எனவே, பேரிடர் மேலான்மை குறித்தும் மழைக்குப் பிறகு சென்னை எப்படி இருந்தது என்றும் உள்ளது உள்ளபடி உரையாற்றுமாறு கேட்டிருக்கிறார்.
அவரை வெளியே அழைத்துச் சென்று காயம் படுமளவிற்கு நையப் புடைத்து அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் பேராசிரியர்கள் என்று தெரிகிறது.
‘உங்களை நம்பிதானே இங்கு வந்து படிக்கிறோம். இப்படித் தாக்கினால் எப்படி?’ என்று அவர் பல்கலைக் கழகப் பதிவாளரைப் பார்த்து கேட்டபோது, ’ ‘இங்காவது பரவாயில்லை, உங்கள் நாடாயிருந்தால் இன்னும் பலமாக அடி விழுந்திருக்கும். உனக்கு இது தேவைதான்’ என்று அவர் பதில் கூறியதாகவும் செய்தித்தாள்களின் வழி அறிய முடிகிறது.
இரண்டு நியாயமான கேள்விகளுக்காக இரண்டு மாணவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒருவர் வகுப்பிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார். மற்றொருவர் தமது பேராசிரியர்களாலேயே தாக்கப் பட்டிருக்கிறார்.
விழித்துக் கொண்டு இவற்றிற்கு எதிர்வினையாற்ற நாம் தவறுகிற பட்சத்தில் இளைய திரள் தீவிரவாதம் நோக்கி நகரும் அல்லது தம்மிடமிருக்கும் கேள்விகளை ஆசை ஆசையாய் கொளுத்தித் தொலைக்கும்.
No comments:
Post a Comment