SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, December 24, 2015

12. எல்லோருக்கும் முதல் பரிசு

12. எல்லோருக்கும் முதல் பரிசு

First Published : 18 December 2015 10:00 AM IST
அன்று காலை பள்ளி அலுவலகத்தில் ஏதோ முக்கியமான வேலையில் இருந்தோம். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து கேட்கப்பட்டிருந்த ஏதோ ஒரு புள்ளி விவரத்தை முடித்து அனுப்ப வேண்டுமென்ற அவசரம் எங்களுக்கு. அதுபோக கூட்டு வழிபாட்டிற்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. தலைமை ஆசிரியர் விடுப்பில் இருந்ததால் அதை நடத்த வேண்டிய பொறுப்பும் என்னிடமிருந்தது. ஆகவே கொஞ்சம் கூடுதலான நெருக்கடி எனக்கு.
அந்த நேரத்தில் அந்தக் குழந்தை என்னைப் பார்க்க வேண்டுமென்று வந்து நின்றாள். பன்னிரெண்டாம் வகுப்பு குழந்தை அவள். புத்தகப் பை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அப்படி அவள் வந்து நிற்பதும் ஒன்றும் புதிது இல்லைதான். வழக்கமாகவே வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது சில வாரங்களில் ஓரிரு முறைகளோ நான் சந்திக்கக் கூடிய வாடிக்கைதான். வகுப்பிற்கு வந்திருக்க மாட்டாள், அல்லது வகுப்பில் நடந்த டெஸ்ட் எதையேனும் எழுதியிருக்க மாட்டாள். அதுமாதிரி நேரங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமை ஆசிரியரையோ அல்லது என்னையோ பார்த்துவிட்டு வருமாறு சொல்லுவதும் பல நேரங்களில் அவர்களே அழைத்துக் கொண்டு வருவதும் வாடிக்கைதான். எனவே எதுவாயிருந்தாலும் கூட்டு வழிப்பாடு முடிந்ததும் வந்து என்னைப் பார்க்குமாறு கூறினேன்.
நான் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதவளாக அவள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அதுவும் வாடிக்கைதான். நின்றது நின்றபடி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் அழுத்தக்காரக் குழந்தைதான் அவள். எனவே, ‘எந்த சார் அனுப்பினாங்க? நான் சொன்னேன்னு சொல்லிட்டு வகுப்பிற்குப் போ. ப்ரேயர் முடிந்ததும் வா’ என்றும் வழக்கம் போல சொல்கிறேன். இந்த வார்த்தைகள் வழக்கமாக அவளுக்குப் போதுமானதாக இருக்கும். ஒருவிதமான புன்னகையோடு நகர்ந்து விடுவாள்.
அப்போதும் அவள் அசையாது நிற்கவே ஏதோ ஒரு ஆசிரியரிடம் கூடுதலான கோவத்தை சம்பாதித்திருக்கிறாள் என்று தோன்றியது. கொஞ்சம் சலிப்படைந்தவனாக ‘சொன்னா கேட்க மாட்டாயா பாப்பா. வகுப்புக்கு போ, நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறேன். தயங்கித் தயங்கி வாயைத் திறக்கிறாள்,
 
‘டிசி வேணும் சார்’
அவள் பேச ஆரம்பித்ததும் அவளது தந்தை உள்ளே தலையை நீட்டினார். ‘வாங்க உள்ள, என்னப் பிரச்னை பரிட்சைக்கு ரெண்டு மாசமே இருக்கறப்ப டிசி கேட்கறீங்க.’ ஏற்கனவே அவரது மனைவியும் அவரும் ஏதோ சில காரணங்களால் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதும் அவள் அவளது அம்மாவிடம் இருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருப்பதும் தெரியும். ஏதோ குடும்பத்தில் பிரச்னைபோல என்று பட்டது. எனவே ஆறப் போட நினைத்தவனாக வேலை நிறைய இருப்பதாகவும் போக, தலைமை ஆசிரியரும் இல்லை என்பதாலும் இரண்டு நாள் கழித்து வருமாறு கூறினேன். அப்போதும் இருவரும் அசைய வில்லை. அதற்குள் கூட்டு வழிபாட்டிற்கு மணி அடிக்கவே அதை முடித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு நகர்ந்தேன்.
திரும்ப வந்ததும் மாற்றுச் சான்றிதழைக் கேட்கிறார். பெற்றோர் தங்களுக்குள் இருக்கிற பிரச்சினைகளுக்காக குழந்தையை பழி வாங்குகிறார்களே என்று கோவம் வந்தது. நச்சரிப்பு அதிகமாகவே மாற்றுச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு போகுமாறும், தலைமை ஆசிரியர் வந்ததும் வந்து வாங்கிக் கொள்ளுமாறும் கூறினேன்.
மாற்றுச் சான்றிதழ் கோறும் விண்ணப்பத்தை எல்லாம் தர முடியாது என்றும் மாற்றுச் சான்றிதழை தந்தால் பெற்றுச் செல்வதாகவும் கூறினார். எழுதிக் கேட்காமல் மாற்றுச் சான்றிதழை எப்படித் தர முடியும் என்று கேட்ட போது, ‘எழுதியெல்லாம் கேட்க முடியாது. முடிஞ்சா கொடு. வாங்கிட்டுப் போறேன்’ என்று அவர் சொன்னபோதுதான் காரணம் பள்ளியில் இருப்பது புரிந்தது.
என்ன பிரச்சினை என்று விசாரித்தபோது ‘அந்த சார்தான் ஒழுங்காப் பள்ளிக் கூடத்திற்கு வரணும், மார்க்கு வாங்கணும். இல்லாட்டி டிசிய வாங்கிட்டுப் போகணும்னாராம். முடிஞ்சாக் கொடு வாங்கிட்டுப் போறேன்’ என்று சத்தத்தை உயர்த்த ஆரம்பித்து விட்டார்.
குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு வரவேண்டும், நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகத்தானே அவர் அப்படி சொல்லியிருப்பார். கொஞ்சம் கூடுதலாக மிரட்டினால்தானே குழந்தை படிப்பாள் என்பதை புரிய வைக்க முயன்றோம். அவரோ கோவத்தின் உச்சிக்குப் போனார்.
‘புள்ள ஒழுங்காப் பள்ளிக் கூடத்துக்கு வராதுதான், நல்லாப் படிக்காதுதான், ஒரு மார்க்குதான் வாங்கும். ஒழுங்கா வராட்டி, மார்க்கு வாங்காட்டி பள்ளிக் கூடத்த விட்டு வெளிய அனுப்பி விடுவீங்களா? முடிஞ்சா டிசியக் கொடுங்க, வாங்கிட்டுப் போறேன்’
அழைக்கும் போதெல்லாம் பள்ளிக்கு வரும் தந்தைதான் அவர். ஆசிரியர்கள் பிள்ளையைப் பற்றி அவரிடம் பேசத் தொடங்கும் முன்னமே அவளைப் பற்றிய புகார்களை அவர் ஆரம்பித்து விடுவார். அவரை அழைத்து அவரது குழந்தையை சரி செய்ய சொல்ல நினைத்த ஆசிரியரிடம் அவரது மாணவியைப் பற்றிய குறைகளை சொல்லி அவளை சரி செய்ய சொல்வார்.
பார்த்து பிள்ளை மேல கொஞ்சம் கவனமா இருங்க என்று சொல்ல நினைத்த ஆசிரியரை ‘சரி, சரி, கவனிச்சுக்கறேன். தைரியமா போயிட்டு வாங்க’ என்று சொல்ல வைத்து விடுவார்.
அவர் கோபத்தில் இறைந்து கொண்டிருக்கும் போதே சம்பந்தப்பட்ட ஆசிரியர் வந்துவிட்டார். எங்கே ஏதேனும் பிரச்சினை முற்றி விடுமோ என்று பயந்தவனாக, ‘ஒன்னும் பேசாம போடா தம்பி. நாங்க பார்த்துக்கறோம்’ என்று மெதுவாக அவரது காதோடு சொல்கிறேன். அவரோ நேரே அவரிடம் சென்று அவரது கன்னத்தை பிடித்தவாறே, ‘என்னங்க ஏழுமலை, எதா இருந்தாலும் நான் பார்த்துக்க மாட்டேனா?, என்ன இங்க வந்து சவுண்டெல்லாம் கொடுத்துட்டு’ என்றதும் மீண்டும் அதே பல்லவியை அவரிடமும் ஆரம்பித்து விட்டார்.
 
எங்கே இவரும் கோபப்பட்டு பிரச்சினை பெரிதாகிவிடுமோ என்ற பதை பதைப்பு கூடியது. அந்த ஆசிரியரோ ரொம்பவும் சாந்தமாக அவரது தோளில் கை போட்டபடியே ‘பாப்பா ஒழுங்கா வராது, ஒரு மார்க்குதான் எடுக்கும் அவ்வளவுதானே. இதுக்கு ஏன் இவ்வளவு சத்தம்? நான் பாஸ் பண்ண வைக்கிறேன். நல்ல வேளை இன்று தலைமை ஆசிரியர் இல்லை. இல்லாட்டி இந்த சத்தத்துக்கு உங்களையும் திட்டியிருப்பார், என்னையும் திட்டியிருப்பார்.’ என்றவாறே அவரை அழைத்துக் கொண்டு போனார்.
‘ஆமா சார், நான் சத்தம் போட்டேன்னு பெரிய சாருகிட்ட சொல்லிடாதீங்க. ரொம்ப வைவாறு’ என்றவாறே அந்த ஆசிரியரோடு தேநீர் சாப்பிட சென்று விட்டார். நாங்கள் அந்தக் குழந்தையை வகுப்பிற்கு அனுப்பி விட்டோம்.
மேலோட்டமாக பார்த்தால் ஒரு வழியாக பிரச்சினை முடிந்தது போலத் தோன்றும். ஆனால் இந்தப் பிரச்சினைக்கான வேர்க் காரணம் இன்னும் இன்னமும் கனன்றபடியேதான் இருக்கிறது.
மேலோட்டமாகப் பார்த்தால் ‘பள்ளிக்கு வரமாட்டா, படிக்க மாட்டா, அதற்காக என்ன செய்ய முடியும் உன்னால்?’ என்று கேட்கும் ஒரு அடாவடித் தந்தையாகத்தான் அவர் தோன்றுவார். ஆனால் ஈரம் கசிய பார்த்தால் ஒழுங்கா பள்ளிக்கு வரவில்லை என்பதற்காகவும் ஒழுங்காகப் படிக்கவில்லை என்பதற்காகவும் பிள்ளைக்கு மாற்றுச் சான்றிதழைக் கொடுத்து விட்டீர்கள் என்றால் அவளை வீட்டில் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் எங்களால்? என்ற ஒரு ஏழைத் தந்தையின் இறைஞ்சலைக் கண்டுணர முடியும்.
‘மாற்றுச் சான்றிதழைக் கொடுத்து விடுவாயா. முடிந்தால் கொடுத்துப் பார்” என்பதை அக்கறையோடு அணுகினால் அதன் பொருள் இதற்காகவெல்லாம் பிள்ளையை வெளியே அனுப்பி விடாதீர்கள். தயவு செய்து சரி செய்யுங்கள். உங்களால் முடியா விட்டால் எங்களால் என்ன செய்ய இயலும் என்பது புரியும்.
இன்னொரு புறம் பார்த்தால் எந்த ஆசிரியரும் இதுபோன்ற காரணங்களுக்காக ஒரு குழந்தைக்கு மாற்றுச் சான்றிதழைக் கொடுத்துவிட வேண்டும் என்றெல்லாம் விரும்புவதில்லை. அதுவும் அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் யாருக்கும் எதன் பொருட்டும் மாற்றுச் சான்றிதழை தரத் தேவையில்லை என்று கருதுபவர்.
இன்னும் சொல்லப் போனால் ஒரு முறை ஒரு மாணவன் மது அருந்திவிட்டு பள்ளியில் வந்து வாந்தி எடுத்துக் கிடந்த போதுகூட ‘இதெல்லாம் இந்தக் காலத்தில் பெரிய விஷயமே இல்லை. அவனுக்கு மாற்றுச் சான்றிதழ் எல்லாம் தர வேண்டாம். பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலை எடுத்த தலைமை ஆசிரியரோடு ஒன்றி நின்றவர்களுள் அவரும் ஒருவர்.
ஒழுங்காகப் பள்ளிக்கு வரவில்லை என்றால், வீட்டிற்கே வந்து உதைத்து இழுத்து வருவேன் என்று அக்கறையும் உரிமையும் கலந்த கோவத்தோடு மிரட்டும் ஆசிரியர் ஒருவரை, ‘ஒழுங்கா பள்ளிக்கு வா. இல்லாவிட்டால் டிசியை வாங்கிக் கொண்டு ஓடு’ என்று எது பேச வைத்தது?.
ஒழுங்கீனமாக நடக்கும் மாணவனையும் பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் வைத்திருக்க வேண்டும் என்பது ஏதோ நமது ஆசை மட்டுமல்ல. அது கட்டாயம். படிப்பு வரவில்லை என்பதற்காக ஒரு குழந்தையை பள்ளியை விட்டு வெளியே அனுப்புவது என்பது அயோக்கியத் தனத்தின் உச்சம்.
தெரியாமல்தான் கேட்கிறேன், ‘அவனுக்குப் பிடித்ததையா அவனுக்கு போதிக்கிறோம்?’ அவன் எதைப் படிக்க வேண்டும் என்பதை அவன் தேர்ந்தெடுக்கும் உரிமை அவனுக்கு இருக்கிறதா? யாரோ வடிவமைத்த ஒரு பாடத் திட்டத்தை குழந்தை படித்தே தீர வேண்டும், தேர்ச்சி பெற்றே தீர வேண்டும், யாரோ எதிர்பார்க்கும் மதிப்பெண்ணை அவன் பெற்றே தீர வேண்டும் என்பது வன்முறை அல்லவா?
ஒரு கருத்தரங்கில் பேசும் போது சொன்னேன்,
‘ஒரு போட்டி வைத்து அதில் யார் முதல் என்று தேர்ந்தெடுத்தால் அது கார்பரேட் கல்வி. ஒவ்வொரு குழந்தையும் முதல் பரிசு பெற வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் போட்டிகளைத் தர முன் வந்தால் அது குழந்தை நேயக் கல்வி’
இது ஒன்றும் சாத்தியமே இல்லாதது அல்ல. ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் பட்டத்தி பாளையம் என்ற கிராமத்து பள்ளி ஆண்டு விழாவிற்கு வேலுசரவணன் நாடகம் வேண்டும் என்று கேட்டார்கள். ஏற்பாடு செய்து அவரோடு அந்த நிகழ்ச்சிக்கு நானும் விஷ்ணுபுரம் சரவணனும் சென்றிருந்தோம்.
பரிசளிப்பு விழாவில் அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 23 மாணவர்களும் ஏதோ ஒரு போட்டியில் முதல் பரிசு பெற்றிருந்தார்கள்.
எப்படி இது சாத்தியம் என்று கேட்டபோது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி கலைச்செல்வி அனைத்து மாணவர்களுக்குமான போட்டிகளைத் தேர்ந்தெடுக்காமல் ஒவ்வொருவருக்குமான போட்டிகளைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். வேறு எதிலும் சோபிக்காத ஒரு மாணவனுக்கு உடுக்கடிப்பதில் நிபுணத்துவம் இருந்ததைக் கண்டறிந்து அவனுக்காகவே உடுக்கடிக்கும் போட்டியை வைக்கவே அந்தக் குழந்தையும் ஒரு முதல் பரிசை பெற்று தானும் ஒரு ஆளுமை என்று உணர்ந்தான்.
இது மாதிரியான ஒரு கல்வித் திட்டத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும், சமூக அக்கறை உள்ளவர்களும், மாணவர் அமைப்புகளும் ஒன்றாய் அமர்ந்து பேசி குரல் கொடுக்கவும் போராடவும் முன் வராத வரைக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழவே செய்யும்.
ஊதிய விஷயங்களைத் தாண்டி ஆசிரியர் இயக்கங்கள் சரியான கல்விக் கட்டமைப்பிற்கான போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும்.
அதுவரைக்கும் அதிகாரிகள் தேர்ச்சி, மதிப்பெண் இரண்டு சுற்றியே இயங்குவார்கள். இது நோக்கியே தலைமை ஆசிரியர்களை அவர்கள் முடுக்குவார்கள். தலைமை ஆசிரியர்கள் இவை நோக்கியே ஆசிரியர்களை முடுக்குவார்கள். இவற்றையே ஆசிரியர்கள் மாணவர்களிடம் இறக்கி வைக்க வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கும்.

No comments: