SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, December 31, 2015

மழை விடுமுறைகளுக்குப் பின்னால்…

மழை விடுமுறைகளுக்குப் பின்னால்…

First Published : 20 November 2015 10:00 AM IST
இதுமாதிரி ஒரு மழை நாளில் ஒரு நூறு ஒன்றாம் வகுப்பு குழந்தைகளிடம் ‘அத்தைக்குப் பிறந்திருக்கிற தம்பிப் பாப்பாவிற்கு என்ன பெயர் வைக்கலாம்?’ என்று கேட்டொமெனில் அதில் எண்பது குழந்தைகளேனும் சட்டென ‘ரமணன்’ என்று சொல்வார்கள்.
கல்வி அமைச்சரின் பெயரையோ, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் பெயரையோ அறிந்து வைத்திருக்காத மாணவர்களுக்கு சென்னை வானிலை நிலைய இயக்குனர் பெயர் ரமணன் என்பது நன்கு தெரியும்.
குழந்தைகளைப் பொறுத்த வரையிலும் மழைக்காலத்து தொலைக்காட்சி கடவுளாகவே ரமணன் இருக்கிறார்.
அவர்களைப் பொறுத்தவரை ரமணன் வந்தால் மழை வரும். மழை வந்தால் விடுமுறை கிடைக்கும். குழந்தைகளைப் பொறுத்தவரை ‘ரமணன்  மழை  விடுமுறை’ என்பது அடித்தல் திருத்தல் இல்லாத எளிய சமன்பாடு.
ரமணனுக்காகத் தவமிருந்து அவர் தோன்றியதும் கரங்களைக் கூப்பியபடியும் கண்களை மூடியபடியும் ‘மழை வேண்டும்’, ‘மழை வேண்டும்’ என்று அவரைக் கடவுளாய் பாவித்து வேண்டி இறைஞ்சும் குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். என் பிள்ளைகள் கிஷோரும், கீர்த்தனாவும்கூட இப்படி செய்தவர்கள்தான்.
குழந்தைகளைப் பொறுத்தவரை விடுமுறை என்பது குதித்து, ஆர்ப்பரித்துக் கொண்டாடக்கூடிய ஒரு விஷயம்தான். ‘Rain Rain go away’ என்று குழந்தைகள் பள்ளியில் பாடுவதற்கும் அதையே வீட்டில் பாடுவதற்கும் நேரெதிர் பொருளைக் கொள்ளத் தெரியாதவன் குழந்தைகளின் உளவியலை அறியாதவன். குழந்தைகள் அப்படி ஏன் விடுமுறைக்காகத் தவமிருக்கின்றனர்?
‘வீடு வெள்ளத்தில்
மிதந்தாலும்
எல்லா வயது மாணவர்களும்
விரும்புவது விடுமுறையைத்தான்
மழையை விட
கனமாக இருப்பது
கல்விதானாம்’
என்று இனிய தோழர் ஜீவகுமார் தனது முகநூல் நிலைத் தகவலில் எழுதுகிறார். இன்றைய நீர்த்துப் போன கல்விக் கட்டுமானத்தின்மீது அவருக்கு இருக்கும் கோபத்தின் விளைவாகவே நாம் இந்தக் கவிதை நறுக்கை கொள்ள இயலும், கொள்ள வேண்டும். வீடு வெள்ளத்தில் மிதப்பது குறித்துக் கூட கவலைப்பட விடாமல் பள்ளிக்குப் போக வேண்டாம் என்பதில் இருக்கிற மகிழ்ச்சி குழந்தைகளைக் கொண்டாட வைக்கிறதே இந்தப் பாழாய்ப் போன கல்வித் திட்டம் என்கிற அவரது கோபத்தின் நீண்டகால ரசிகன் நான். கால் நூற்றாண்டிற்கும் மேலாக பள்ளி ஊழியத்தில் இருக்கும் எனக்கு அவரது கோபம் நியாயமற்றது என்று நிராகரித்துவிட முடியாது. மாணவனுக்கும், வாழ்க்கைக்கும், இந்தச் சமூகத்திற்கும் சற்றும் தொடர்பற்ற  ஒரு கல்வியைத்தான் குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவற்றை ஒன்றோடு ஒன்றாய் இணைத்துப் பிணைப்பதற்கான ஒரு கல்விக்காக களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு களப் போராளியின் கோபமாகவே ஜீவகுமாரின் கவிதையை என்னால் உள்வாங்க முடிகிறது. 
குழந்தைகள் குதூகலத்தோடு கொண்டாடும் ‘ரமணன்  மழை  விடுமுறை’ என்கிற இந்த சமன்பாட்டிற்குள் நீண்ட முடை நாற்றம் வீசக்கூடிய ஒரு சுரண்டல் அரசியல் இருக்கிறது.
 
மழையினால் கிடைக்கும் விடுமுறைக்காக எல்லா வர்க்கத்துக் குழந்தைகளுமே மழைக்காகத் தவமிருக்கிறார்களா? எல்லாக் குழந்தைகளுமே ரமணனை கதாநாயகனாக பாவிக்கிறார்களா? என்றால் ரமணன் என்றால் யாரென்றே தெரியாத குழந்தைகளும் இருக்கவே செய்கிறார்கள்.
‘கமர்கட்
காட்பரீஸ்
இனிப்பிலும் இருக்கிறது
வர்க்க பேதம்’
என்பார் வல்லம் தாஜுபால். கமர்கட்டும் இனிப்புதான், காட்பரீசும் இனிப்புதான். ஆனால் இரண்டும் வெவ்வேறு வர்க்கத்து குழந்தைகளுக்கானவை. பணக்காரக் குழந்தையால் கமர்கட்டும் சாப்பிட முடியும், காட்பரீசும் சாப்பிட முடியும். ஆனால் நள்ளிரவிற்குப் பிந்திய ஏதோ ஒரு பொழுதில் வரும் கனவில்கூட உழைக்கும் வர்க்கத்துக் குழந்தையால் காட்பரீசை சுவைக்க முடியாது.
இனிப்பை போலவே மழையும் அப்படி ஒன்றும் எல்லோருக்குமானது அல்ல. சிலருக்கு வெக்கையைத் தணித்து மகிழ்விக்கிற மழை சாக்கே கதவாய்த் தொங்கும் சிலரது குடிசைகளை அழித்து அவர்களை நடுத் தெருவிலே நிறுத்துகிறது.
இன்வெர்ட்டரும், ஜெனரேட்டரும், நான்கைந்து நாட்களுக்குத் தேவையான காய்கறிகளும், இழுத்துப் போர்த்திக் கொள்ள கம்பளியும் இருக்கிற மேல்தட்டு மற்றும் மத்தியதர மக்களால் மட்டுமே மழையை ரசிக்க முடிகிறது என்பது மாதிரி (அவர் எழுதியதன் சாரம் மட்டுமே இது) முகநூல் பதிவர் கமலி பன்னீர்செல்வம் தனது நிலைத் தகவல் ஒன்றில் எழுதுகிறார். இது எவ்வளவு உண்மையானது என்பதை யாரும் யாருக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
‘சாக்கடையில் இறங்கி பணியாற்றிய மக்களை மூக்கை பிடித்தபடியே கடந்து போனவர்களின் வீட்டிற்குள் சாக்கடையை கொண்டுவந்து சேர்த்தது மழை’ என்று முகநூலில் முகத்தில் அறைவது மாதிரி எழுதுகிறான் தம்பி ஸ்டாலின் தி.
இன்றைய பெருமழையை இயற்கைப் பேரிடர் என்ற வகையில் கொள்ள வேண்டும். அப்படித்தான் இது புரிந்து கொள்ளவும் படுகிறது. எனது வாழ்நாளில் இப்படியான ஒரு மழைப் பேரிடரை இரண்டாவது முறையாக இப்போது பார்க்கிறேன். 1977 நவம்பரில் ஒருமுறை இதுமாதிரி பேய்த்தனமாக கொட்டித் தீர்த்தது.
ஆக, மழையினால் மேல்தட்டுத் திரளும் மத்தியத்தரத் திரளும் இந்த அளவிற்கு பாதிக்கப்படுவது என் வாழ்நாளில் இது இரண்டாவது முறையாகும்.
வழக்கமாக பாதிப்புகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கிக் கொண்டும் இருந்த மழையின் ரசிகர்கள் இப்போது மழையினால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
தம்பி ஸ்டாலின் சொல்கிற மாதிரி வழக்கமாக சாக்கடை அள்ளக் கூடிய மக்களைப் பார்த்தாலே ஒரு விதமான அசூசையோடு மூக்குகளைப் பொத்தியவாறே கடந்துபோகிற ஜனத்திரள் இவர்கள். இந்தமுறை அள்ளிக் கொட்டக்கூட முடியாதாடி ஒரு வாரமாக இவர்கள் வீட்டு பூஜை அறை வரைக்கும் சாக்கடைத் தண்ணீர் புகுந்து முழங்கால் அளவு நிற்கிறது.
வழக்கமாக சாக்கடையிலும் சாக்கடை ஓரத்திலுமாக தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிற உழைக்கிற ஜனத் திரள் ஒன்று இருக்கிறது. இவர்களின் பெரும்பான்மை வீடுகளுக்கு கதவே இருக்காது. ஒரு சாக்கை கதவு மாதிரி தொங்க விட்டுருப்பார்கள். மண் சுவர்கூட எல்லா வீடுகளிலும் இருக்காது. கீற்று அல்லது ஏதோ ஒரு தடுப்பையோ சுவர் மாதி நிறுத்தி வைத்திருப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை எல்லாமே ஏதோ ‘போல’ களால்தான் நிரம்பியிருக்கும்.
உணவு போல ஏதோ ஒன்றை சாப்பிடுவார்கள். உடை போல ஏதோ ஒன்றை உடுத்துவார்கள். செருப்பு மாதிரி ஏதோ ஒன்றை அணிந்து கொள்வார்கள். சிலருக்கு இந்த போலக்கள் கூட இருக்காது. அவர்கள் ஏதுமற்று நடைபாதைகளில் கிடப்பார்கள். இவர்கள் மீது யார் வேண்டுமானாலும் வாகனமேற்றிக் கொல்லலாம். எந்த விதமான கேள்வி கேப்பாடும் இருக்காது. அப்படி ஏதேனும் நிகழும் பட்சத்தில் அது குறித்த கோப்புகள் காவல் நிலையங்களிலிருந்து ஒன்று காணாமல் போய்விடும். அல்லது தமக்குத் தாமேபற்ற வைத்துக் கொண்டு எரிந்து போகும்.
இவர்கள் வாழ்க்கையை நாசமாக்கி கசக்கிப் போட இப்படி மூன்று மாதங்களில் கொட்டித் தீர்க்க வேண்டிய மழை மூன்றே நாளில் பெய்ய வேண்டிய அவசியம்கூட இல்லை. ஒரு சன்னமான இரண்டு மணிநேர மழையே போதும் இவர்களது வாழ்க்கையைப் புறட்டிப்போட.
ஒரு இரண்டு அல்லது மூன்று மணிநேர சன்னமான மழையே இவர்களை ஏதுமற்றவர்களாக்கி விடும். சுவர்களும் சுவர் போன்றவைகளும் காணாமல் போய்விடும். சட்டி முட்டி சாமான்களும் உடைகளும் அடித்துக் கொண்டு போய்விடும். ஒதுங்க இடமற்று உண்ண உணவற்று அனாதரவாக நிற்கும் இந்த ஜனங்களின் பிள்ளைகளா விடுமுறைக்காக ரமணனையும் மழையையும் எதிர்பார்க்க முடியும்.
மழை தனது பாதிப்பை எல்லோருக்கும் ஒரே மாதிரி வழங்குவதில்லை. சிலருக்கு மழைக் காலமும் பனிக்காலமும் சுகமானவை. அவற்றை எதிர்கொள்ளக் கூடிய நல்ல வீடுகளும், பயணிப்பதற்கான கார்களும் அவர்களிடம் இருக்கும். மழைக்குப் பயன்படுத்தவென்று பிரத்தியேகமான உடைகளும் காலணிகளும் அவர்களிடம் இருக்கும். அவர்களால் மழையை, பனியைக் கொண்டாட முடியும். இந்த அடித் தட்டு மக்களால் மழையையோ பனியையோ மட்டுமல்ல விடுமுறையைக் கூட ரசித்துக் கொண்டாட இயலாது.
ஒவ்வொரு மழையும் இந்தத் திரளின் எத்தனைக் குழந்தைகளின் அம்மாக்களை, அப்பாக்களை, உறவினர்களைக் காவு வாங்கியிருக்கிறது. எத்தனைக் குழந்தைகளை இந்த மழை யாருமற்ற அனாதைகளாக்கி பள்ளிக்கூடங்களில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கிறது. இந்த ஜனங்களின் எத்தனைப் பள்ளிக் குழந்தைகளை மழை கொன்று போட்டிருக்கிறது.
இந்த மக்களைத்தான் இந்த மழையும் பெருமளவு காவு கொண்டிருக்கிறது.
மழை விடுமுறையிலும் பேதங்கள் இருக்கவே செய்கின்றன. நச நசக்கும் மழையில் நனைந்து பள்ளிக்குப் போய் உடம்பைக் கெடுத்துக் கொண்டோ, தொற்றினை வாங்கிக் கொண்டோ தங்கள் குழந்தைகள் அவஸ்தைப் படக் கூடாது என்பதற்காக விடுமுறையை எதிர்பார்க்கும் பெற்றோர் ஒரு புறம். பள்ளிக் கூடம் இருந்தாலாவது தமது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்களே என்று நினைக்கும் பெற்றோர் மறுபுறம்.
ஆக, மழை விடுமுறைக்கான ஆவல் என்பது பொது ஆவல் அல்ல.
மழை விடுமுறை என்பது மழை பெய்தால் மட்டுமே என்பதாக கொள்ளப் படுகிறது. ‘விடுமுறை விட்டாங்க மழை நின்று விட்டது, பேசாமல் பள்ளிகளை வைத்திருக்கலாம்’ என்று  மக்கள் பேசுவதையும் அவ்வப்போது கேட்க முடிகிறது. சிலருக்கு படிப்பு வீணாகாதா இப்படி விடுமுறைகளை விட்டால் என்று கேட்கிறார்கள்.
அப்படியெல்லாம் எதுவும் நடந்து விடாது. எத்தனைநாள் விடுமுறை விட்டாலும் அத்தனை நாட்களும் ஏதோ ஒரு வகையில் ஈடு செய்யப்பட்டு விடும். சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்துவதன் மூலமாகவோ அல்லது வேறு விடுமுறை நாட்களைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகவோ இப்படி மழைக்காக விடப்பட்ட விடுமுறை நாட்கள் ஈடு செய்யப்படும்.
மழை நாட்களில் பள்ளி வைத்தாலும் பெரும்பாலான இடங்களில் கற்றல் கற்பித்தல் நடக்க வாய்ப்பில்லை. எனவே அன்று விடுமுறை விட்டு அதை பிரிதொரு மழையற்ற நாளில் ஈடு செய்வதென்பது கற்றலையும் கற்பித்தலையும் உறுதி செய்யும்.
எல்லாக் குழந்தைகளுக்கும் பள்ளிக்கு வருவதற்கான வாகன ஏற்பாடு இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. வரப்புகளின் வழியாகவும், காட்டாறுகளின் வழியாகவும் தரைப் பாலங்களைக் கடந்தும் வரக் கூடிய குழந்தைகள் ஏராளம் இருக்கிறார்கள்.
மழைக் காலங்களில் வயல் வரப்புகளின் வழியாகவும், காட்டாறுகளைக் கடந்தும் வரக் கூடிய குழந்தைகள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தோ, அல்லது திடீரென வரக் கூடிய காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டோ இறந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் தரைப் பாலங்கள் வழுக்கிவிடும். இது மிகவும் ஆபத்தானது.
இந்தப் பெருமழையில் கடலூர் மாவட்டம் போல எந்த மாவட்டமும் பாதிக்கப் படவில்லை. பள்ளிக்கே குழந்தைகளால் வர இயலாது என்ற சூழ்நிலையிலும் அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் விடுமுறை அளிப்பதில் ஆரம்பக் கட்டத்தில் வெகுவாக சுணக்கம் காட்டியிருக்கிறார். பிறகு அவர் விடுமுறை விடுவதற்குள் குழந்தைகள் புறப்பட்டு வந்து விட்டனர். விடுமுறை என்று கேள்வி பட்டு வீடு திரும்பியிருக்கின்றனர். சென்ற ஆண்டு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இது மாதிரி சிரமங்கள் தொடர்ச்சியாக நடந்ததையும் அவற்றிற்கு எதிராக பெற்றோர்கள் ஊடகங்களில் கொந்தளித்ததையும் பார்த்தோம். எனவே இது விஷயங்களில் மாவட்ட ஆட்சியர்கள் இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டுமாய் பணிவுடன் கோருவோம்.
மழைக்குப் பின்னாலும் அது தரும் விடுமுறைக்குப் பின்னாலும் கவனிப்பதற்கும் கவனம் குவிப்பதற்கும் களமாடுவதற்கும் ஏராளம் இருக்கின்றன என்பதையும் அருள் கூர்ந்து புரிந்து கொள்வோம்.

Monday, December 28, 2015

கலகல வகுப்பறை

கலகல வகுப்பறை

First Published : 27 November 2015 10:00 AM IST
‘கலகல வகுப்பறை’ என்ற தமது அமைப்பின் மூலம், வகுப்பை எப்படி கலகலப்பாக நகர்த்தலாம் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி முகாம்களை நடத்திவரும் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிவா, ரமணன், பாலமுருகன், முத்துக்குமார் மற்றும் இவர்களோடு இணைந்து செயல்பட்டு வரும் முதுகலை ஆசிரியர் தோழர் சுரேஷ் காத்தான் ஆகியோருக்கு, இரண்டு விஷயங்களுக்காக என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
1) முதலில் ‘கலகல வகுப்பறை’ என்ற இந்த தலைப்புக்காக.
2) இரண்டாவதாக, வகுப்பறைகள் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே அரிது. அடுத்தகட்டமாக, தமது வகுப்பறைகளை கலகலப்பாகக் கொண்டுசெல்ல முயற்சிப்பது என்பது இன்னும் கொஞ்சம் கூடுதலான அரிய செயல். தமது வகுப்பறைகளையும் கடந்து, ஆர்முள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களது வகுப்பறைகளையும் கலகலப்பாக மாற்றுவதற்காக அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்பது எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றது.
ஒரு பள்ளியில் ஆகச் சிறந்த வகுப்பறையாக ஒரு வகுப்பறையைத் தேர்ந்தெடுத்து அதற்கு விருது வழங்குவதற்காக ஒரு குழுவினரோடு அந்தப் பள்ளிக்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம். எந்த வகுப்புக்கு அந்த விருது போய்ச் சேரும் எனில், அந்தப் பள்ளியிலேயே மிகவும் அமைதியான வகுப்பறைக்காகத்தான் அது இருக்கும். இது குறித்து பேசும்போது, அந்தக் குழுவைச் சார்ந்த யாரோ ஒருவர், அந்த வகுப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களைப் பற்றிப் பேசும்போது, தன்னையும் அறியாமல் இப்படி சொல்லிவிடவும் கூடும் -
‘இப்படி ஒரு அமைதியை நான் எங்கும் பார்த்ததில்லை. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி’
 
உண்மையும் அதுதான். எந்த வகுப்பறை அமைதியாக இருக்கிறதோ அதுதான் மிக நல்ல வகுப்பறை என்றுதான் இன்றைய பொதுப்புத்தி எடுத்துக்கொள்கிறது. அமைதிதான் சிறப்புக்கான அளவுகோல் என்று கொள்வதெனில், இந்த வகுப்பறையை விடவும் இந்த ஊரின் மயானம் மிக அமைதியாக இருக்குமே. அமைத்திக்குதான் விருது என வைத்துக்கொண்டால், அந்த விருதை மயானத்துக்கு அல்லவா கொடுக்க வேண்டும்.
வகுப்பை அமைதியாக வைத்திருக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியராகக் கொள்ளப்படுகிறார். ‘அவர் வகுப்பில் இருந்தால் அந்த வகுப்பு அமைதியாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும்’ என்று அதை சிலர் நியாயப்படுத்தவும் செய்வார்கள். மாணவர்களைப் பேசாமல் பார்த்துக்கொள்வது ஆசிரியரிடம் எதிர்பார்க்கப்படும் ஒரு குணம் என்றால், மயானக் காவலர் இதைவிட பேரமைதியை கட்டிக் காக்கிறாரே. ‘எனில், ஆசிரியரைவிடவும் மயானக் காவலர் அமைதியைப் பேணுவதில் சிறந்தவர்தானே’ என்று கேட்டால், ‘பிணங்கள் பேசாதே’ என்று பதிலுரைக்கக்கூடும். பிணங்கள்தான் பேசாதே என்றால், அதே குணத்தை மாணவர்களிடமும் எதிர்பார்ப்பது தவறல்லவா?
இன்னும் சரியாகச் சொல்வதெனில், மாணவர்களைப் பேசவிடாமல் ஒரு ஆசிரியர் பார்த்துக்கொள்கிறார் என்றால், அவர் இருக்கும்வரை அந்த வகுப்பு மாணவர்களைப் பிணங்களைப்போல பாதுகாக்கிறார் என்றுதானே பொருள். அது குற்றமல்லவா?
தனது வகுப்புகளை அமைதியாகப் பராமரிக்கும் ஆசிரியர்களைப் பெற்றோர்களே மிகச்சிறந்த ஆசிரியர்களாகப் பார்க்கிறார்கள்தான். தங்களது பிள்ளைகளை நாற்பத்தி ஐந்து நிமிடம் பிணங்கள் மாதிரி வைத்திருக்கும் ஒரு நபரைக் குற்றவாளியாகப் பார்க்காமல், ஆகச் சிறந்த ஆசிரியராகப் பார்ப்பதற்கான காரணம் எளிதானது. தம் பிள்ளையைப் பிணம் மாதிரி நடத்துகிறார் என்கிற உண்மையை அவர்கள் உணராதிருக்கிறார்கள். தமது வகுப்பை அமைதியாகப் பராமரிப்பது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிற ஆசிரியரும், தமது வகுப்பில் பிள்ளைகளைப் பாடம் கவனிக்கும் பிணங்களாக வைத்திருக்கிறோம் என்கிற உண்மையை முழுமையாக உணராதிருப்பதே அவர் அப்படி நடந்துகொள்வதற்குரிய காரணமாக இருக்கிறது.
இவ்வாறு விவாதத்தைத் தொடங்கும்போது, எடுத்த எடுப்பிலேயே ஒரு ஐயம் கிளம்பும். வகுப்பிலே மாணவர்களைப் பேச அனுமதித்தால், அது கற்றலை சேதப்படுத்தாதா?
இல்லை, அப்படியெல்லாம் ஒருபோதும் நிகழ்ந்துவிடாது. எவ்வளவுதான் அறிவைப் புகட்டி அனுப்பினாலும், பிணத்தின் குணத்தோடு மாணவனை வெளியே அனுப்பினால், அவன் அறிவுள்ள ஒரு பிணமாகத்தானே இருப்பான். தான் சார்ந்த துறையில் அவன் பெற்றிருக்கும் அறிவானது, அந்தத் துறையில் அவனை மிக உச்சத்துக்குக் கொண்டுபோகவே செய்யும். தன் துறை சார்ந்த பிரச்னைகளை, சிக்கல்களை மிக எளிதாக அவனால் கையாள இயலும். ஆனால், சமூகம் சார்ந்த, மண் சார்ந்த எந்த ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் அவனது தலையீடோ பங்களிப்போ இருக்காது.
இது மாதிரியான மாணவர்களைத்தான் இங்கிலாந்து தனது காலனி நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து எதிர்பார்த்தது. இப்படி ஒரு கல்வித் திட்டத்தைத்தான் இந்தியாவில் வடிவமைக்க வேண்டும் என்று மெக்காலேவும் இங்கிலாந்து அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்தார். அதை அச்சுப் பிசகாமல், அப்படியே இங்கிலாந்தும் வடிவமைத்துத் தந்தது. எது நடந்தாலும் கேள்வி கேட்காத, சுதந்தரம் பற்றிய சொரணை உணர்ச்சி துளியும் அற்ற, சகலமும் மரத்துப்போன இந்திய ஊழியர்களை இங்கிலாந்துக்கு ஏராளமாக இந்தக் கல்விமுறை அள்ளி வழங்கியது.
இந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் இரண்டு லாபங்களை இங்கிலாந்து அனுபவித்தது.
1) இங்கிலாந்திலிருந்து அலுவலகப் பணியாளர்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தால், அவர்களுக்கு நிறைய ஊதியம் தர வேண்டும். அந்த வேலையை செய்யக்கூடிய ஊழியர்களை இந்தியாவிலேயே தயாரித்ததன் மூலம் குறைந்த ஊதியத்துக்கு அவர்களுக்கு ஊழியர்கள் கிடைத்தார்கள். இதன்மூலம், அவர்களுக்கு செலவு மிச்சமானது. பச்சையாகச் சொல்லப்போனால், அவர்களது லாபம் அதிகரித்தது.
2) குறைந்த ஊதியத்தில் வேலை செய்கிறோம் என்ற உணர்வு மட்டுமல்ல, சுதந்தரத்தைப் பற்றியும்கூட நினைத்துவிடாத, மரத்துப்போன ஊழியர்களையும் இந்தக் கல்வித் திட்டம் இங்கிலாந்துக்குத் தந்தது.
காமன்வெல்த் போட்டிகள் நடந்தபொழுது, காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. காமன்வெல்த் என்பது இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் கூட்டமைப்பு. அதுவே ஒரு அடிமைத்தனத்தை பளிச்செனக் காட்டக்கூடிய ஒரு அமைப்பு.
சரியான, நாட்டுப்பற்றை அடித்தளமாகக் கொண்டிருக்கக்கூடிய கல்விக் கட்டமைப்பு இருந்திருக்குமானால், காமன்வெல்த் என்ற அமைப்பையே இந்த நாடுகள் நிராகரித்திருக்கும்.
நாட்டுப்பற்றை உறுதிமொழி எடுப்பதன் மூலம் மட்டும் கொண்டுவந்துவிட முடியாது. அதற்கேற்ற கல்விக் கட்டமைப்பை நாம் கட்டியாக வேண்டும். அதற்கு, இருக்கிற கட்டமைப்பை நாம் தகர்த்தெறிந்தாக வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இருக்கிற அமைப்பை விமர்சனத்துக்குக் கொண்டு போக வேண்டும்.
விமர்சனத்தையும் உடைசலையும் செய்யும் அதே வேளையில், சரியான மாற்றையும் ஒருசேர நாம் கொண்டு செல்ல வேண்டும்.
இதை, முற்றாய் முழுசாய் மேற்சொன்ன தோழர்கள் கையெடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இத்தகைய காரியத்துக்கான கருவிகளுள் ஒன்றாக நான் இவர்களைப் பார்க்கிறேன்.
பெற்றோர்களிடம், இந்தக் கல்விக் கட்டமைப்பு அடிமைகளையே பெரும்பாலும் உருவாக்குகிறது என்பதைக் கொண்டு போக வேண்டும். இந்தக் கட்டமைப்பிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு பணிபுரிய வேண்டிய ஊழியர்கள்தான் ஆசிரியர்கள். இவர்களால் தனியாக இந்தக் கட்டமைப்பைச் செய்துவிட முடியாது. அது பெற்றோர்களும், பொதுமக்களும் முன்கை எடுக்க, ஆசிரியர்கள் கை இணைய வேண்டிய விஷயம்.
அதற்கான பிரசாரங்களை பொதுமக்களிடம் முன்னெடுக்க வேண்டும்.
அதேவேளை, வகுப்பறையை நல்ல மனிதர்களை உருவாக்கும் பட்டறையாக மாற்றிதர வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
இதைச் செய்ய ஆசிரியர்களால் முடியும். எப்படி இதைச் செய்வது என்பதைத்தான் மேற்சொன்ன தோழர்கள் ‘கலகல வகுப்பறை’ என்ற தங்கள் அமைப்பின் மூலம் களமெடுத்து நகர்கிறார்கள். கரம் குவித்து வாழ்த்துகிறோம்.
எல்லாம் சரி, சத்தமான வகுப்பறைகள் கற்றலைக் கெடுத்துவிடாதா? ஒழுங்கீனத்தைக் கொண்டுவராதா? என்று சிலர் கேட்கக்கூடும். அவர்களுக்கு நமது பதில் இரண்டு.
1) வகுப்பறைகள் சத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல வகுப்பறைக்கான நிபந்தனை என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரம், அமைதியை நிபந்தனையாக்க வேண்டாம் என்ற கோரிக்கையைத்தான் முன் வைக்கிறோம்.
2) ஒழுங்கையோ, கற்றலையோ இது ஒருபோதும் பாதிக்காது என்பதற்குக் கீழ் வரும் சம்பவத்தை உதாரணமாகத் தருகிறோம்.
தோழர் பொன்னீலன் அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தபோது, ஆண்டாய்வுக்காக ஒரு பள்ளிக்குப் போகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவரும் நல்ல தோழர்கள். அனைத்து வகுப்புகளையும் முதன்மைக் கல்வி அலுவர்கள் ஆய்வு செய்வதில்லை. மாவட்டக் கல்வி அலுவலர் சில வகுப்புகளையும், உடன் வந்திருக்கும் ஆசிரியர்கள் வேறு வகுப்பகளையும் ஆய்வு செய்வார்கள். பொதுவாக, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைத்தான் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.
ஆனால், தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளியை முற்றாகப் பார்வையிடுவார்கள். அதைத்தான் தோழர் பொன்னீலன் அவர்களும் செய்கிறார். அனைத்து வகுப்புகளையும் சுற்றிக்காட்டிய தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பை மட்டும் அவருக்குக் காட்டவில்லை.
தோழர் பொன்னீலன் அவர்கள், அந்த வகுப்பைப் பார்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்க, அதை தட்டிக் கழிப்பதில் தலைமை ஆசிரியர் குறியாக இருந்திருக்கிறார். அவரது விடாப்பிடியான கோரிக்கைக்கும், இவரது நழுவும் முயற்சிக்கும், இருவருக்கும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கவே செய்தன.
அப்படி ஒரு வகுப்பே இல்லை போலும். இல்லாத வகுப்பை கணக்குக் காட்டி, ஒரு ஆசிரியரைக் கூடுதலாக வைத்திருக்கிறார்போல. எனில், ஒரு ஆசிரியருக்கான சம்பளம் அரசுக்கு இழப்புதானே. இது நிரவலுக்கான விஷயமாச்சே என்ற அதிகாரியின் சிந்தனை, தோழருக்கும் இருந்திருக்கக்கூடும். அந்த வகுப்பு ஒரு உடைந்த கட்டடத்துக்குள் நடக்கிறது. அதைப்போய் அதிகாரியிடம் காட்டுவதா என்ற தயக்கம் தலைமை ஆசிரியருக்கு.
அழுத்தம் அதிகமாகவே, வேறு வழியின்றி அந்த வகுப்புக்கு அழைத்துப்போகிறார். போனால், ஹே என்று சத்தம், வகுப்பில். தலைமை ஆசிரியர், வகுப்பை நெறிப்படுத்த வேண்டும் என்ற உந்துதலில், வேகம் கூட்டினார். தோழர் பொன்னீலனோ, தலைமை ஆசிரியரை வர வேண்டாம் என்று தடுத்துவிட்டு, தான் மட்டும் சென்று, வகுப்பில் என்ன நடக்கிறது என்று ஜன்னல் வழியாக யாரும் அறியாமல் கண்காணிக்கிறார். தலைமை ஆசிரியர் தலையில் அடித்துக்கொண்டும், தன் நேரத்தை நொந்தபடியேயும் அங்கேயே நிற்கிறார்.
உள்ளே, ஒடிசலான மிக இளம் வயது ஆசிரியை வரைபடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அதுதான் இவ்வளவு சத்தம்.
 
சுவரில் இந்திய வரைபடம் தொங்குகிறது. ஆசிரியர் ஒரு மாணவனை பெயர் சொல்லி விளிக்கிறார். அவனிடம், ‘நீ மும்பை போக வேண்டும். எதில் போகிறாய். ரயிலா? விமானமா?’ என்கிறார். ரயில் என்கிறான். அவனிடம் ஒரு குச்சி தரப்படுகிறது. ‘சரி, மும்பைக்கு போ’ என்கிறார். அந்தப் பையன், ‘கூ… ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு’ என்றபடியே ரயிலில் பயணித்து மும்பையைத் தொடுகிறான். ஓ என்று சத்தமிட்டுக் கொண்டாடுகிறது வகுப்பு.
அடுத்த பையன், விமானத்தில் காஷ்மீர் போனான். இன்னுமொருவன், காரில் கொல்கத்தா போனான். இப்படியே. ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஊராகப் போனார்கள்.
இப்போது, அந்த வரைபடம் கழற்றப்படுகிறது. ஊர் பெயர்கள் இல்லாத வெற்று வரைபடம் ஒன்று அங்கு மாட்டப்படுகிறது.
ஆசிரியை, மும்பை போன மாணவனை இந்த முறை பைக்கில் மும்பைக்குப் போகப் பணிக்கிறார். அவனும், பைக்கை கிளப்பிக்கொண்டு போகிறான். ஆனால், மும்பைக்குப் பதில் காஷ்மீர் போகிறான். சிரிப்பால் அதிர்கிறது வகுப்பு. ‘டீச்சர், ரமேசு காஷ்மீர் போயிட்டான் டீச்சர்’ என்று வகுப்பே இரண்டு படுகிறது.
‘அவன் போன பைக் சரியில்ல. ஏண்டா ரமேசு…’ என்றவாறே, சரியான இடத்தை அவனுக்குக் கற்பிக்கிறார் ஆசிரியை. இப்படியே நகர்கிறது, ஆய்வு பற்றிய எந்தக் கவனமும் இல்லாமலே அந்த வகுப்பு. அதற்கு மேல் நிற்க முடியாதவராகத் திரும்புகிறார் பொன்னீலன். அலுவலகம் வரும்வரைக்கும் ஏதும் பேசவில்லை. அந்த வகுப்பில் ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தலைமை ஆசிரியருக்குப் படுகிறது.
ஆசிரியர் கூட்டம் தொடங்கியதும், குறைகளை புன்னகையோடும் ஒரு தந்தைக்கே உரிய பாங்கோடும் அடுக்குகிறார். அதை எப்படி சரி செய்வது என்றும் ஆலோசனைகளைத் தருகிறார்.
இறுதியாக, அந்தக் குறிப்பிட்ட வகுப்பைப் பற்றிம் பேசுகிறார். ஆசிரியை எழுந்து நிற்கிறார். ‘மேப் டிராயிங் இப்படி நடத்தலாம்னு எனக்குத் தெரியாது மகளே. இப்படியே நடத்து. இப்படித்தான், கற்றல் கலகலப்பாக இருக்க வேண்டும்’ என்று பாராட்டினார்.
கற்றலை சேதப்படுத்தாமல் மேம்படுத்தக்கூடிய கலகல வகுப்புகளே இந்த நொடியின் தேவை.

Sunday, December 27, 2015

கேள்விகளைக் களவு கொடுத்துவிடாதீர்கள்

13. கேள்விகளைக் களவு கொடுத்துவிடாதீர்கள்

First Published : 25 December 2015 10:00 AM IST

தீரத் தெளிதலென்பது கற்றலின் முக்கியமான கூறுகளில் ஒன்று. அரைகுறை அறிவை யாரும் ஒரு போதும் கொண்டாடுவது இல்லை. அப்படியே தவறுதலாக கொண்டாடப்பட்டாலும் அறைகுறை அறிவின் சாயம் வெகு விரைவிலேயே வெளுத்தும் போகும். சாயம் வெளுத்து அம்பலப்பட்டுப்போன அரைகுறை அறிவாளி முட்டாள்களைவிடவும் கேவலமாகவே மதிப்பிடப் படுவான். எனவேதான் வள்ளுவன் கசடறக் கற்கக் கேட்கிறான்.
கற்றல் செயல்பாட்டில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் தமது மாணவர்கள் தெளிவாய்க் கற்றுத் தேறுவதையே விரும்புவார்கள். அவர்கள் செயல்பாடுகளும் அதற்கேற்றார் போலவே இருக்கும். தெளிந்த கற்றலுக்கான கருவிகளுள் மிக முக்கியமான ஒன்று மாணவர்களின் கேள்விகள் என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
‘புரியுதா?’ என்று கேட்பது நல்ல ஆசிரியர்களுக்கான அடையாளங்களுள் ஒன்று. புரிகிற வரைக்கும் போராடும் ஆசிரியர்கள் ஏராளம் இருக்கிறார்கள். சாதித்த மனிதர்களின் பின்னால் நிச்சயமாக அவர்களுக்கு புரியும் வரைக்கும் போராடிய ஆசிரியர்கள் இருப்பார்கள்.
கேள்விகளை விரும்பாத ஆசிரியர்கள் இல்லவே இல்லை என்றும் சொல்லவில்லை. அவர்களது எண்ணிக்கை மற்றவர்களைவிடவும் கூடுதலாகவே இருக்கக் கூடும்.
‘கல்விக் கொள்கை 2016’ குறித்த கலந்துரையாடல் ஒன்றினை ‘லிட்டில்ஸ்’ என்ற அமைப்பு சென்றவாரம் மதுரையில் நடத்தியது. நான்கு விஷயங்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது,
1) வழக்கமாக தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் கலந்துகொண்டு கத்தி தங்களது சக்தியை செலவழிக்கும் ‘சமூக ஆர்வலர்கள்’ யாரும் கலந்து கொள்ளாதது.
2) கல்விக் கொள்கை பற்றி விவாதிக்கவும் கருத்து சொல்லவுமான அந்த கலந்துரையாடலில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோரோடு பெற்றோர்களையும் மாணவர்களையும் கலந்துகொள்ள செய்தது
3) கலந்து கொண்ட அனைவருமே ஆக்கப்பூர்வமாக விவாதங்களில் பங்கெடுத்தது.
4) முத்தாய்ப்பாக, ஒன்பதாம் வகுப்பு மாணவியும், பதினொன்றாம் வகுப்பு மாணவனும் வைத்த வகுப்பறை குறித்த கருத்துகள்.
மாணவர்கள் கலந்து கொள்ளாத கல்வி குறித்த எந்த ஒரு விவாதமும் முழுமையடையாது. மாணவர்களையும் விவாதத்தில் பங்கேற்க வைத்த தோழர் வர்தினி பர்வதா அவர்களை இதற்காக நன்றியோடு வணங்கிக் கொள்கிறேன்.
அந்தப் பிள்ளை பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் தனது ஆசிரியரிடம் ஐந்தாயிரம் மக்களுடன் பௌத்தத்தை தழுவவேண்டிய தேவை அம்பேத்கருக்கு ஏன் வந்தது என்று கேட்டிருக்கிறான்.
அந்தக் கேள்விக்காக ஆசிரியர் அவனை வகுப்பைவிட்டு வெளியே போகச் செய்திருக்கிறார். ஒரு ஆசிரியராக இருப்பதற்காக வெட்கப்படக் கூடிய சூழ்நிலைகள் அவ்வப்போது வரும். அதுபோன்ற ஒரு தருணம் அது.
 
எவ்வளவு ஆழமான கேள்வி. சாதிய கட்டுமானங்களை அம்பலப்படுத்தக் காத்திருக்கும் ஒரு ஆசிரியரிடம் அந்தக் கேள்வி கேட்கப் பட்டிருக்குமானால் அது எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும். அவராக இதுகுறித்து பேச முடியாது. அதற்கு கட்டமைப்பு இடம் தராது. மீறியும் ஏதாவது பேசுகிற என் போன்றவர்கள் பள்ளிக்கு வெளியிருந்தும் உள்ளிருந்தும் ஏகப்பட்டப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு கேள்வி மட்டும் என்னைப் போன்றவர்களிடம் கிடைத்து விடுமானால் ஒருவாரம் வகுப்பெடுத்து விடுவோம்.
மெத்தப் படித்த அம்பேத்கர் அவர்களது திருமணத்திற்கு யாரும் திருமண மண்டபம் தரவில்லை என்பதும். அந்த மாமனிதனது திருமணம் இரவொன்றில் மீன்சந்தையில் நடந்தது என்கிற உண்மையை குழந்தைகளுக்குக் கொண்டு போயிருக்கலாமே. அம்பேத்கர் போன்ற மாமனிதர்களே தங்களது திருமணங்களை இப்படித்தான் நடத்த முடிந்தது என்றால் அந்தக் காலத்து சேரித் திருமணங்கள் எந்த அளவிற்கு மோசமான சூழ்நிலைகளில் நடந்திருக்கும் என்பதை விரித்துச் சொல்வதற்கும் அன்றைய சாதிப் படிநிலைகளை உயர்சாதி ஆணவத்தை, அடாவடித்தனத்தை தோலுரித்துக் காயப் போடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பை அல்லவா அந்தக் குழந்தை ஆசிரியருக்கு கொடுத்திருக்கிறான்.
அம்பேத்கர் அவர்களிடம் பணிபுரிந்த இடைசாதி ஊழியர் எவ்வளவு சாதித் திமிரோடு அவரோடு நடந்து கொண்டார் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பல்லவா அது. அந்த இடைசாதி ஊழியர் தனது அதிகாரியான அம்பேத்கர் கைபட்ட கோப்புகளைக் கூட தொட மாட்டாராம். தொட்டால்  தீட்டுப் பட்டுவிடுமாம். அண்ணல் எங்கேனும் ஒரு கூட்டத்திற்குப் போக வேண்டும் என்றால், கோப்புகளை எடுத்து வர வேண்டிய அவர் அவற்றை எடுத்து வர மாட்டார். ஏவலர் சுமக்க வேண்டிய கோப்புகளைக் கூட அண்ணலே சுமந்து வருவதும் அந்த ஏவலர் தீட்டுப் பட்டுவிடாத தூரத்தில் தனது அண்ணலைத் தொடர்ந்து வருவாராம். இத்தகைய  கேவலத்தை பாட நூல்கள் சொல்லித் தராது. ஆசிரியர்களாலும் தன்னெழுச்சியாய் இவற்றை சொல்லித்தர இயலாது. ஆனால் இந்த மாணவனது கேள்விக்கு பதில் சொல்கிற சாக்கில் முடிகிற அளவு இவற்றை அம்பலப்படுத்தி இருக்க வேண்டாமா?
அண்ணல் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை வணங்குவது தனது சாதிக்கு இழுக்கு என்று ஒருபோதும் அவர் அண்ணலை வணங்கியது இல்லை. ஆனால் அண்ணலோடு எங்கோ சென்றுகொண்டிருந்த ஒரு பொழுதில் அந்த ஏவலருக்கும் கீழான நிலையில் உள்ள ஊழியர் ஒருவர் எதிர்பட்டிருக்கிறார். அப்போது அதே ஏவலர் தனக்கும் கீழ்நிலைப் பொறுப்பில் உள்ள அந்த பிராமணரை விழுந்துப் பணிந்து மரியாதைத் தந்திருக்கிறார்.
படிப்பையும் பணி நிலையையும் விட சாதி எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தது என்பதையும் மிக உயர்வான மனிதர்கள் கூட தன்னைவிட படிப்பில் அந்தஸ்தில் குறைந்தவர்களால் சாதியின் பொருட்டு அவமானப்பட நேர்ந்திருக்கிறது என்பதை புரிகிற மாதிரி விளக்கியிருக்க முடியும்.
அந்தக் காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் அடிமைத்தனம் வழக்கத்தில் இருந்தது. மனிதனுக்கு மனிதன் அடிமையாய் தொண்டூழியம் செய்து கொண்டிருந்த அவலம் மிகுந்த காலம். ஒருவனிடம் இருக்கும் கல்வியை விடவும் செல்வத்தை விடவும் அவனிடம் இருக்கும் அடிமைகளின் எண்ணிக்கையே சமூகத்தில் அவனது செல்வாக்கைத் தீர்மானித்தது. ஆனால் அடிமைகளுக்கு இருந்த உரிமைகளும் சலுகைகளும்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு இல்லை. அடிமைக்கு சுகவீனம் வந்தாலோ அல்லது செத்துப் போனாலோ அது தனக்கு இழப்பைத் தரும் என்பதால் எஜமானன் தனது அடிமையின் உடல் நலத்தில் அக்கறை காட்டினான். அவனது மருத்துவ செலவுகளை ஏற்றான். ஆனால் அத்தகையதொரு சூழலும் சாதியச் சமூகத்தில் இல்லை. ஆக ஏதும் படிக்காத, தன் பெயரில் சொத்தெதுவும் இல்லாத அடிமையை விடவும் மெத்தப் படித்த பணக்கார தாழ்த்தப்பட்டவன் அதிகம் ஒடுக்கப்பட்டவனாகவே இருந்தான்.
இத்தகைய சாதியப் படிநிலைகளைக் கொண்ட இந்து மதத்தின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையும் புத்தத்தில் இத்தகைய நிலை இல்லை என்பதால் அண்ணல் அங்கு நகர்ந்தார் என்கிற அளவிற்கேனும் அதற்கான காரணங்களை சொல்லி அதற்கான முழுமையான காரணங்களை மாணவர்கள் தேடிக் கண்டடையும்படி செய்திருக்கலாம். 
இதைத் தவிர்த்து மாணவனை வெளியே அனுப்ப வேண்டியத் தேவை ஏன் வந்தது?
1) அவருக்கு அந்தக் குழந்தையின் கேள்விக்கான விடை தெரிந்திருக்காது
2) பதிலை சொல்லி ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வு
3) அந்த ஆசிரியரிடம் இருக்கக் கூடிய ஆதிக்கசாதி மனோபாவம்
காரணம் எதுவாயிருப்பினும் மாணவனை அந்தக் கேள்விக்காக வகுப்பறைக்கு வெளியே அனுப்பிய ஆசிரியர் மிகுதியான கண்டனத்திற்கு உரியவர்.
பதில் தெரியாது என்றால் ஒன்று தனக்கு தெரியாது என்ற உண்மையைச் சொல்லி தெரிந்து கொண்டு வந்து சொல்லியிருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் அதெல்லாம் பரிட்சைக்கு வராது என்று ஆசிரியத் தனத்தோடாவது சொல்லி அவனை வகுப்பறையில் வைத்திருந்திருக்கலாம்.
பதில் தெரிந்திருந்து ஆதிக்க சாதியோடு ஆசிரியர் அப்படி நடந்து கொண்டிருந்தால் நிச்சயமாக அவர் ஆபத்தானவர்.
மிகவும் உடைந்து போயிருந்த அந்த மாணவனைப் பார்த்ததும் எனக்கு கவலை தொற்றிக் கொண்டது. எங்கே கேள்வி கேட்டால் வகுப்பைவிட்டு வெளியேற்றப் படுவோமோ என்கிற அச்சத்தில் தன்னிடம் இருக்கிற கேள்விகளை எல்லாம் ஏதேனும் ஒரு திருவிழாவில் தொலைத்து விடுவானோ என்று அச்சமாக இருக்கிறது.
யோசித்துப் பாருங்கள், கேள்விகளைத் தொலைத்த மாணவச் சமூகம் ஒருபோதும் தெளிந்துத் தேறாது.
‘உங்களது கேள்விகளில் பல உதாசீனப்படுத்தப் படலாம், சில கேள்விகள் உங்களுக்கு தண்டனைகளைக் கூட கொண்டு வரலாம்.  தளர்ந்து விடாதீர்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய மனிதர்களை நிச்சயமாய் நீங்கள் கண்டடைவீர்கள்.
உங்களிடமிருக்கும் கேள்விகளைக் களவாடிப் போகவே ஆதிக்கச் சமூகமும் கார்ப்பரேட் சமூகமும் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றன. கேள்விகளைக் களவு கொடுத்துவிடாதீர்கள் குழந்தைகளே’ என்று மாணவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
ஏறத்தாழ இதே நேரத்தில் தனது ஒரு கேள்விக்காக ஃப்ரான்ஸ் குடியுரிமை வைத்திருக்கக் கூடிய ஈழத்து மாணவன் ஒருவன் தமிழ் மண்ணில் நையப் புடைக்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்தது.
ஜோன்ஸ் ஆண்டன் புலேந்திர ராசா சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை படித்துக் கொண்டிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘பேரிடர் மேலாண்மை’ குறித்த கருத்தரங்கத்தில் அந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர் என்ற முறையில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.
மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர் திருமதி ஜோதி நிர்மலா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். பேரிடர் என்றால் என்ன என்பது பற்றியோ அல்லது அத்தகைய பேரிடர்களை எப்படி எதிர்கொள்வது என்கிற பேரிடர் மேலாண்மை குறித்தோ உரையாற்றாமல் இந்த பேரிடரின் போது அரசு செய்த நிவாரணப் பணிகள் குறித்து மிகவும் மிகையான ஒரு மதிப்பீட்டுப் பட்டியலை அவர் வைத்திருக்கிறார். முதல்வரின் கருணை குறித்தும் தாயுள்ளம் குறித்தும் கட்சிக்காரர்களே கூச்சப்படும் அளவிற்கு நீண்டு பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்.
அனைவரும் முகம் சுழிக்கும் படியான இந்த உரை ஜோன்ஸ் ஆண்டன் புலேந்திர ராசாவையும் சலிப்படையச் செய்திருக்கிறது. அவர் எழுந்து அந்த உரை பேரிடர் மேலாண்மை குறித்தோ அல்லது குறைந்த பட்சம் உண்மையான நிவாரணப் பணிகள் குறித்தோ இல்லை. மாறாக ஏதோ நிறையப் பெய்த மழையினால் ஏற்பட்ட பேரிடரிலிருந்து சென்னை மக்களை  தாயுள்ளம் மிக்க முதல்வரின் கருணை எப்படிக் காப்பாற்றியது என்கிற நிரல்களின் தொகுப்பாக இருக்கிறது என்று நீள்கிறது.
எனவே, பேரிடர் மேலான்மை குறித்தும் மழைக்குப் பிறகு சென்னை எப்படி இருந்தது என்றும் உள்ளது உள்ளபடி உரையாற்றுமாறு கேட்டிருக்கிறார்.
அவரை வெளியே அழைத்துச் சென்று காயம் படுமளவிற்கு நையப் புடைத்து அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் பேராசிரியர்கள் என்று தெரிகிறது.
‘உங்களை நம்பிதானே இங்கு வந்து படிக்கிறோம். இப்படித் தாக்கினால் எப்படி?’ என்று அவர் பல்கலைக் கழகப் பதிவாளரைப் பார்த்து கேட்டபோது, ’ ‘இங்காவது பரவாயில்லை, உங்கள் நாடாயிருந்தால் இன்னும் பலமாக அடி விழுந்திருக்கும். உனக்கு இது தேவைதான்’ என்று அவர் பதில் கூறியதாகவும் செய்தித்தாள்களின் வழி அறிய முடிகிறது.
இரண்டு நியாயமான கேள்விகளுக்காக இரண்டு மாணவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒருவர் வகுப்பிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார். மற்றொருவர் தமது பேராசிரியர்களாலேயே தாக்கப் பட்டிருக்கிறார்.
விழித்துக் கொண்டு இவற்றிற்கு எதிர்வினையாற்ற நாம் தவறுகிற பட்சத்தில் இளைய திரள் தீவிரவாதம் நோக்கி நகரும் அல்லது தம்மிடமிருக்கும் கேள்விகளை ஆசை ஆசையாய் கொளுத்தித் தொலைக்கும்.

Friday, December 25, 2015

Aided School without TET Teachers Increment Regarding RTI Letter RTI-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு

Aided School without TET Teachers Increment Regarding RTI Letter
RTI-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு 
படம் காண்பிக்கப்படவில்லை
Aided School without TET Teachers Increment Regarding RTI Letter
RTI-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு