தரமான கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்: ரோசய்யா
By dn, சூலூர்
First Published : 23 January 2015 12:09 PM IST
பள்ளிகள் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பதன் மூலமே நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.
கோவை அருகேயுள்ள கருமத்தம்பட்டி கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற வெள்ளி விழாவில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கலந்துகொண்டார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பிரபு தலைமை தாங்கினார். கோயமுத்தூர் கேந்திரா பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.கொங்கு வேளாளர் அறக்கட்டளைத் தலைவர் ஆர்.பொன்னுசாமி, செயலாளர் ஆர்.சின்னசாமி, பொருளாளர் எஸ்.கே.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.
கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.கலைவாணன் வரவேற்றார். பள்ளியின் முதல்வரும் கோவை மெட்ரிக் பள்ளிகளில் சிறந்த முதல்வர் விருதைப் பெற்றவருமான வசந்தி பால்ராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
தமிழக ஆளுநர் ரோசய்யா விழாவில் பேசியது: கோவை மாநகர் நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. ஜி.டி.நாயுடு, என்.மகாலிங்கம், பி.ஆர். ராமகிருஷ்ணன் போன்றோர் இம்மாவட்டத்தை முன்னிலைப்படுத்த பெரும் பங்காற்றியுள்ளனர். விவசாயம், கல்வி, தொழில் ஆகியவற்றில் கோவை மாவட்டம் பெரு வளர்ச்சியடைந்துள்ளது பெருமைக்குரிய விஷயம்.
1990-களில் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி மென்மேலும் வளர்ந்து மாணவர்களின் கல்வி வேட்கையைத் தீர்க்க வேண்டும். பள்ளிகள் தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும். கல்வியோடு மட்டுமல்லாது மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் நல் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்து நாட்டின் சிறந்த குடிமக்களை உருவாக்க வேண்டுமென்றார்.
பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், சிறந்த பள்ளி என்பது மதிப்பெண் அதிகம் வாங்கும் பள்ளியன்று. சமுதாயத்திற்கு சிறந்த மாணவர்களை வழங்குவதாகும் என்றார். மேலும், மாணவர்களுக்கு உபயோகமான கல்வி முறையை அரசு வகுக்க வேண்டும். அதுவே வலிமையான பாரதத்தை அமைக்க உதவும் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பிரபு பேசுகையில், புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும், கணினி மூலம் அறிவை வளர்த்துக் கொள்வதைவிட புத்தகத்தைப் படிக்கும் பழக்கத்தின் மூலம் சிறந்த அறிவாற்றலையும் ஞாபக சக்தியையும் பெறலாம் என்றார்.
பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி எம்.திவ்யபிரபா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment