ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்: கல்வித்துறை அமைச்சர்
By dn, பெங்களூரு
First Published : 23 January 2015 02:17 PM IST
கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக இருக்கும் 11,200 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தகுதித் தேர்வில் 23 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் திறமையானவர்களைக் கண்டறிந்து பணி நியமனம் செய்வதற்காக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்காக அறிவிக்கை இன்னும் 10 நாள்களில் வெளியாகும். இதன்மூலம், 11,200 பணியிடங்கள் நிரப்பப்படும்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். சில நேரங்களில் இணையதளம் சரியாக செயல்படாததால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காண்போம்.
அரசு அங்கீகாரம் பெறாமல் நடத்தப்பட்டு வந்த தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை குறித்து பெற்றோர்களுக்கு உரிய தகவல்களை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
No comments:
Post a Comment