ஆசிரியர் தினத்தில் மோடி உரை: எதிர்ப்பு அரசியலும் இயலாமை நிலையும்!
By Sriram Senkottai
First Published : 01 September 2014 06:21 PM IST
வரும் செப்.5ம் தேதி வெள்ளிக்கிழமை ஆசிரியர் தினத்தில் குரு உத்சவ் கொண்டாட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மாணவ சமுதாயத்தினரிடம் செயற்கைக் கோள் மூலமாக காணொலிக் காட்சி முறையில் உரையாடவும், அதை பள்ளிகள் காட்சிப் படுத்தவும் கோரப் பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இல்லாத மாநிலங்களான பீகார், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மனித வள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, திங்கள்கிழமை இன்று எதிர்க்கட்சிகளின் அரசியலை கண்டித்துள்ளார்.
இது, இந்திய நாட்டின் பிரதம மந்திரி, இந்திய நாட்டு மாணவர்களுடன் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சி. மோடி ஒன்றும், பா.ஜ.கட்சியின் பிரதமர் இல்லை. இந்திய நாட்டின் பிரதம மந்திரி மாணவர்களுடன் உரையாடுவதைக் கேள்வி கேட்பது, நகைப்புக்குரியது என்று கூறியுள்ளார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான ஆசிரியர் தினத்தை, குரு உத்ஸவ் என்று பெயர் மாற்றுவது, சம்ஸ்கிருதத்தை மறைமுகமாகத் திணிக்கும் செயல் என்று பாஜகவின் தமிழக கூட்டணி கட்சிகளான மதிமுகவும், பாமகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, அரசியல் கட்சிகள், இந்த சுற்றறிக்கையை தவறாகப் புரிந்து கொண்டுள்ளன. குரு உத்ஸவ் என்பது, அனைத்துப் பள்ளிகளுக்குமான கட்டுரைப் போட்டியின் ஓர் அம்சம். ஆசிரியர் தினம் என்பதன் பெயர் மாற்றம் அல்ல. நடைமுறையை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், மோடி- மாணவர் உரையாற்ற நிகழ்ச்சி, கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நாராயண் ரானே, நம் நாட்டில் கொடுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்ட சுதந்திரத்துக்கு எதிரானது இது. பள்ளிகள் கட்டாயமாக இதனை கேட்க வேண்டும் என்ற உத்தரவை நாங்கள் எதிர்ப்போம் என்று கூறியுள்ளார்.
ஸ்மிருதி இரானியின் அமைச்சகமோ, மாணவர்கள் தாங்களாகவே விருப்பப் பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நேரம் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்கள், இந்தியாவில் உள்ள பள்ளிகளின் மாணவ மாணவியரை வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி முதல் 4.45 வரை நேரலை ஒளிபரப்பையோ, வெப்காஸ்டிங்கையோ காண்பதற்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது அதற்கு ஏற்ப மதிய உணவு வேளையையோ, வகுப்பு பாடவேளையையோ மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், பெரும்பாலான பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் இத்தகைய வசதி இல்லை என்று தங்களது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளன.
பிரதமர் மோடி, வழக்கமான தனது தேசபக்தி கலந்த உரையை மாணவர்களிடம் பரப்ப எண்ணுவது தவறல்லதான் என்றாலும், அதனைக் கட்டாயமாக்கும் செயல் அரசியல் எதிர்ப்பாளர்களிடம் கிளம்பியிருப்பதில் தவறில்லைதான். எதிலும் அரசியல் என்றாகிவிட்ட இந்நாளில், இந்த நிகழ்ச்சியின் வெற்றி எப்படி அமைகிறது என்பது கேள்விக்குறி.
No comments:
Post a Comment