இவர்களா எதிர்ப்பது?
By ஆசிரியர்
First Published : 03 September 2014 01:17 AM IST
ஆசிரியர் தினத்தை (செப்டம்பர் 5) மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் "குரு உத்சவ்' என்று பெயர் மாற்றம் செய்ய முற்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதை எதிர்பார்க்காத எதிர்க்கட்சிகள், அரசை எதிர்ப்பதற்கு வலுவான காரணங்கள் எதுவும் கிடைக்காமல், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் முடிவைப் பிரச்னையாக்க முற்பட்டிருப்பது சந்தர்ப்பவாதமாகத் தெரிகிறதே தவிர, இதய சுத்தியுடனான விமர்சனமாகத் தெரியவில்லை.
"குரு உத்சவ்' என்று மத்திய அரசால் பெயர் மாற்றப்பட்டிருக்கும் ஆசிரியர் தினத்தன்று, "பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுடன் உரையாற்ற இருக்கிறார். அனைத்துப் பள்ளிகளும், பிரதமரின் உரையை மாணவர்கள் கேட்பதை உறுதிப்படுத்த வேண்டும்' என்பது மனித வள மேம்பாட்டுத் துறையின் இன்னொரு உத்தரவு.
ஒரு பிரதமருக்கு, அடுத்த தலைமுறையினருடன் தனது கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவோ, அவர்களை நல்வழிப்படுத்தும் ஒரு சில வார்த்தைகளைப் பேசவோ உரிமை உண்டு. பிரதமர் மோடியின் உரையில் தவறிருந்தால், அவர் தெரிவிக்கும் கருத்துகளில் எதிர்க்கட்சிகள் முரண்பட்டால் விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால், பிரதமர் மாணவர்களிடம் பேசவே கூடாது என்பது ஏற்புடையதல்ல.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான பிகாரும், மேற்கு வங்கமும் பிரதமர் மாணவர்களுக்கு "ஆசிரியர் தின உரை' நிகழ்த்துவது தங்களது அதிகாரத்தில் தலையிடுவதாகும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருப்பதால், தங்களிடம் கலந்தாலோசிக்காமல் பிரதமர் மாணவர்களுக்கு ஆசிரியர் தின உரை நிகழ்த்தக்கூடாது என்பது விதண்டாவாதம். மத்திய அரசு, மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் கல்வித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோ, தலையிடுவதோ கூடாதே தவிர, பிரதமர் மாணவர்களுடன் உரையாற்றக்கூடாது என்பது எப்படிச் சரி?
"குரு உத்சவ்' பிரச்னைக்கு வருவோம். இதற்கு அதிகமான எதிர்ப்பு தமிழகத்திலிருந்துதான் எழுந்திருக்கிறது. "குரு உத்சவ்' என்பது சம்ஸ்கிருத வார்த்தை என்றும் அது "டீச்சர்ஸ் டே' என்று ஆங்கிலத்தில் இருப்பதுதான் சரியென்றும் பா.ம.க., ம.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிப்புத் தெரிவிக்கின்றன. சம்ஸ்கிருதப் பெயரே கூடாது என்றால், மேலே குறிப்பிட்ட கட்சியின் தலைவர்கள் முதலில் அவர்களது மனைவி, குழந்தைகளின் பெயர்களை மாற்றி வைக்க வேண்டும். அதற்குப் பிறகு இந்தப் பிரச்னையில் கருத்துத் தெரிவித்தால், அது நியாயம்.
அவரவர் கட்சியில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகள் தமிழ்வழி பள்ளிகளில் படித்தாக வேண்டும் என்பதை அவர்கள் முதலில் உறுதிப்படுத்தட்டும்.
1993-இல் கொண்டு வரப்பட்ட "பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா' (பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டம்), 2001-இல் கொண்டு வரப்பட்ட "சர்வ சிக்ஷô அபியான்' (அனைவருக்கும் கல்வித் திட்டம்), 2005-இல் கொண்டு வரப்பட்ட "ஜனனி ஸ்வரக்ஷô யோஜனா' (பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்), 2007-இல் கொண்டு வரப்பட்ட "ஸ்வர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா' (கிராமப்புற சுய வேலைவாய்ப்புத் திட்டம்), பிரதமரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டிருக்கும், "தன தன் யோஜனா' (மக்கள் - நிதித் திட்டம்) ஆகியவை தமிழ் வார்த்தைகளா? அவையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்து அழைக்கப்படும்போது "குரு உத்சவ்' ஏன் ஆசிரியர் தினமாக நம்மால் அமைக்கப்
பட்டுத் தொடரப்படக் கூடாது? "டீச்சர்ஸ் டே'யும் தமிழல்ல, "குரு உத்சவ்'வும் தமிழல்ல எனும்போது அதுபற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
தமது குழந்தைகள் தமிழில் பேசுவதில்லை. தாய்மொழி எழுதப்படிக்கத் தெரியாத வருங்காலத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அடையாளங்களுக்கு எதிராகக் குரலெழுப்புவதை விட்டுவிட்டு, தாய்மொழி உயிர்ப்புடன் தொடர நாம் போராட வேண்டிய காலகட்டம் இது.
தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும், சுவர் விளம்பரங்கள் மூலமும், ஃபிளெக்ஸ் பேனர்கள் மூலமும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதை விட்டுவிட்டு, தாய்மொழியில் பேசுங்கள், தமிழில்தான் பேசுவோம் போன்ற வாசகங்களை முன்னிலைப்படுத்துவது அல்லவா இன்றைய காலத்தின் கட்டாயம்?
பெயர் எந்த மொழியிலாவது இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆசிரியர்கள் மதிக்கப்படுகிறார்களா, அவர்கள் வணங்கப்படுகிறார்களா என்பதுதான் முக்கியம்!
No comments:
Post a Comment