SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, September 01, 2014

பயிற்றிப் பலகல்வி தந்து..

பயிற்றிப் பலகல்வி தந்து...By முனைவர் தெ. ஞானசுந்தரம்

First Published : 01 September 2014 02:25 AM IST
மனிதனை மனிதனாக்கும் கல்வி வேண்டும்' என்றார் ஞானத் துறவி விவேகானந்தர். அத்தகைய இலக்கை அடைய நம் கல்வி முறையில் சில மாற்றங்கள் தேவை. இந்தியா அமெரிக்காவைப் பார்த்து நெடுஞ்சாலை விரிவாக்கம், பென்னம் பெரிய மால்கள் என்னும் வணிக வளாகங்கள் முதலியவற்றை அமைத்துள்ளது. கல்விச்சாலைகளின் அமைப்பிலும் அங்குள்ள சில நல்ல கூறுகளை மேற்கொள்ளலாம்.
அமெரிக்காவில் பள்ளிக்கல்வி மூன்று பிரிவாக உள்ளது. மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் நடுநிலைப் பள்ளி. ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் உயர்நிலைப் பள்ளி.
ஒவ்வொரு கல்விக்கான பள்ளிகளும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் உள்ளன. இதனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே இடத்தில் குவியும் நிலை தவிர்க்கப்படுகிறது.
நம் நாட்டில் அரசு பள்ளிகள் குறைவு; தனியார் பள்ளிகளே அதிகம். அமெரிக்காவில் இதற்கு மாறான நிலை. அரசு பள்ளிகளே மிகவும் அதிகம். தனியார் பள்ளிகள் மிகக் குறைவு. அவற்றில் படிப்பதற்கு மிகுந்த பொருள் செலவு ஆகும். அரசு பள்ளிகளில் கல்விக் கட்டணம் இல்லை.
நம் நாட்டில் சில பகுதிகளில் அடுத்தடுத்துச் சில பள்ளிகள் இருப்பதைப் போன்று அல்லாமல், ஒவ்வொரு வட்டத்திலும் தேவைக்கேற்ப அரசு பள்ளிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.
ஒவ்வொரு பகுதியிலும் குடியிருப்பவர்கள் தங்கள் அஞ்சலகப் பகுதி எல்லைக்குள் இருக்கும் பள்ளியில்தான் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்பது விதி. இதனால், ஒரு குறிப்பிட்ட பள்ளியிலேயே தொலைதூரத்தில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பது தவிர்க்கப்படுகிறது.
நம் ஊரில் பள்ளிகள் இருக்கும் சாலைகள் காலையிலும் மாலையிலும் வாகனப் போக்குவரத்தைத் தாங்க முடியாமல் திணறுகின்றன. காவலர்கள் ஆங்காங்கே நின்று ஒழுங்குபடுத்தினாலும் கால விரயம் உண்டாகிறது.
பெற்றோர்கள் சைக்கிள், குதியுந்து, மகிழுந்து ஆகியவற்றில் அழைத்துச் சென்று, திரும்ப அழைத்துவருகிறார்கள். சிலர் கட்டணம் செலுத்திப் பள்ளி வாகனங்களில் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். அமெரிக்காவில் எல்லாப் பிள்ளைகளையும் பள்ளி வாகனமே கட்டணம் இல்லாமல் ஏற்றிச் செல்கிறது.
பள்ளிகள் அருகிலேயே இருப்பதால் நீண்ட பயணத்தால் உண்டாகும் களைப்பு தவிர்க்கப்படுகிறது. பள்ளி வாகனம் அடையாளம் காணத்தக்க வகையில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது.
குடியிருப்புப் பகுதியில் ஆங்காங்கே குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தங்கள் அமைந்துள்ளன. பிள்ளைகளை ஏற்றிக் கொள்வதற்கோ, இறக்கி விடுவதற்கோ வண்டி நிற்கும்போது அதனைக் கடந்து எந்த வாகனமும் செல்லாமல் புறப்படும்வரை காத்திருக்கிறது. இதனால், விபத்துகள் நிகழ்வது தவிர்க்கப்படுகிறது.
தொடக்கப் பள்ளிக்கென்றும் இடைநிலைப் பள்ளிக்கென்றும் உயர்நிலைப் பள்ளிக்கென்றும் தனித்தனி வாகனங்கள் இல்லை. சில பேருந்துகளே எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவானவை.
முதலில் உயர்நிலைப் பள்ளியிலும் அடுத்து இடைநிலைப் பள்ளியிலும் இறுதியில் தொடக்கப் பள்ளியிலும் படிப்போர் ஏற்றிச் செல்லப்பட்டு, பள்ளி முடிந்தபின் அம்முறையிலேயே அழைத்துவரப் படுகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் உயர்நிலைப் பள்ளிகள் முதலிலும், இடைநிலைப் பள்ளிகள் அடுத்தும், தொடக்கப் பள்ளிகள் கடைசியிலும் தொடங்கி முடிகின்றன.
மழலையர் வகுப்பு அரைநாள் மட்டுமே. அவ்வகுப்பு மட்டும் காலை மாலை என்று இருவேளையிலும் நடைபெறுகிறது. பெற்றோர்கள் வசதிக்கேற்ப காலை நேரப் பள்ளியிலோ மாலை நேரப் பள்ளியிலோ மழலைச் செல்வங்களைச் சேர்க்கிறார்கள்.
எல்லா வகுப்புகளிலும் ஒவ்வொரு பிரிவிலும் 25 முதல் 30 பிள்ளைகள்வரை உள்ளனர். மழலையர் வகுப்பில் வாசிப்பு, எழுத்துப் பயிற்சி, ஓவியம் தீட்டுதல் ஆகியவை மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன.
பிஞ்சுக் குழந்தைகள், மலர்களையும், வானவில் போன்ற இயற்கைக் காட்சிகளையும், தாங்கள் கேலிச் சித்திரங்களில் கண்ட பாத்திரங்களையும் வண்ண வண்ண எழுதுகோல்களால் பள்ளியில் தரப்படும் தாள்களில் வரைகிறார்கள்.
பாடப் புத்தகங்களைப் பள்ளியிலேயே தருகிறார்கள். அவற்றை மாணவர்கள் அங்கேயே வைத்துக் கொள்கிறார்கள். தேவைப்படும்போது வீட்டுக்கு எடுத்து வரலாம். ஆண்டு முடிவில் திருப்பித் தந்துவிடவேண்டும். தொலைத்துவிட்டாலோ, சிதைத்துவிட்டாலோ அதற்குரிய தொகையினைக் கட்ட வேண்டும்.
மாணவர்கள் வீட்டுப் பாடங்களைத் தனித்தனித் தாள்களில் எழுதி எடுத்துச் சென்று ஆசிரியரிடம் காட்டியபின் கோப்புகளில் சேர்த்து வைத்துக்கொள்கிறார்கள். இதனால், சிறுவர்கள் புத்தக மூட்டையினைச் சுமந்து செல்லும் பரிதாப நிலை அங்கு இல்லை.
ஆங்கிலக் கவிதை இலக்கணத்தைத் தொடக்கப் பள்ளியிலேயே பயிற்றுவிக்கத் தொடங்குகிறார்கள். ஆங்கிலம் தவிர, ஸ்பானிஷ், பிரெஞ்சு, இலத்தீன், அரபி, சீனம், ஜப்பான் போன்ற மொழிகளில் ஒன்றை மூன்றாம் வகுப்புத் தொடங்கிக் கற்பிக்கிறார்கள். வெளியிலிருந்து அம்மொழிகளில் வல்லவர்களை ஒப்பந்த அடிப்படையில் வகுப்புகளை எடுக்குமாறு செய்து செலவினைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
போதிய மாணவர்கள் இருந்தால் தமிழையும் எடுத்துப் படிக்கலாம். இந்தியாவிலும், வடநாட்டில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு தென்னாட்டு மொழியையும், தென்னாட்டில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு வடநாட்டு மொழியையும் கற்கத் தொடங்கினால், நாட்டின் ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு மொழிபெயர்ப்பாளர்கள் பலர் தோன்றுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்.
ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர் அவ்வகுப்புக்குரிய பாடங்களில் ஒன்றிலோ, சிலவற்றிலோ முதல் நிலையில் தேர்ச்சி பெற்றால், அந்த வகுப்பில் படிக்கும்போதே மேல்வகுப்புப் பாடங்களை அவ்வகுப்புகளுக்குச் சென்று அமர்ந்து படித்துத் தேர்வு எழுதி முடித்துவிடலாம்.
அவற்றை மேல் வகுப்பில் படிக்கத் தேவையில்லை. இதற்காக, மாணவர்களின் திறனை அறியத் தேர்வுகள் நடத்துகிறார்கள். சில பள்ளிகளில் ஆண்டு இறுதியில் மட்டுமன்றித் தொடக்கத்திலும் தேர்வு வைக்கிறார்கள்.
கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு எஸ்.ஏ.டி. (நஸ்ரீட்ர்ப்ஹள்ற்ண்ஸ்ரீ அல்ற்ண்ற்ன்க்ங் பங்ள்ற்), ஏ.சி.டி. (அம்ங்ழ்ண்ஸ்ரீஹய் இர்ப்ப்ங்ஞ்ங் பங்ள்ற்ண்ய்ஞ்) என்னும் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். இவற்றோடு பாடம் சாராத துறைகளில் பெற்ற புள்ளிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இடம் கொடுக்கப்படுகிறது.
உயர்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே இத்தேர்வுகளை எழுதலாம். பதினோராம் வகுப்புக்குள் இத்தேர்வுகளை எழுதி மாணவர்கள் எங்கே மேற்படிப்பைத் தொடர்வது என்பதனை முடிவுசெய்துவிடுகிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் ஓய்வாக அதற்குரிய ஆயத்தங்களைச் செய்துகொள்கிறார்கள்.
பாடத்திட்டத்தில் நுண்கலைகளும் விளையாட்டுகளும் தகுந்த இடத்தைப் பெற்றுள்ளன. வாய்ப்பாட்டு, வயலின், சாக்ஸஃபோன், பியானோ போன்றவற்றைக் கற்றுத் தருகிறார்கள்.
பள்ளி அரங்கங்களில் மழைக்காலத்தில் ஒருமுறையும் கோடைக்காலத்தில் ஒருமுறையுமாக மாணவர்களே பங்கு பெற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் இசை விழாக்கள் நடைபெறுகின்றன. நம் பள்ளிகளில் பெயருக்கு ஓவிய ஆசிரியர் இருப்பார். அந்த வகுப்புகளை வேறுபாடம் நடத்தப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் வென்று, தங்கப் பதக்கங்களை குவிப்பதில் வியப்பில்லை. அதற்கான வசதிகளைப் பள்ளியிலேயே அமைத்துள்ளார்கள்.
உயர்நிலைப் பள்ளிகளில் ஒலிம்பிக்ஸில் உள்ளது போலவே, மனையக நீச்சல் குளத்தோடு கூடைப்பந்துக் களங்களும், பல திறந்த வெளி டென்னிஸ் களங்களும், ஓரிரு கால்பந்துக் களங்களும், செயற்கைச் சேர்மங்களாலான ஓடுபாதைகளும், உடற்பயிற்சிக் கூடங்களும் உள்ளன.
இவற்றைப் பராமரிப்பதற்கான செலவை ஈடுகட்டும் வகையில் பள்ளிகளுக்கிடையே நடக்கும் போட்டிகளைக் காணக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே தொண்டு மனப்பான்மையை உருவாக்கும் விதத்தில் கோடை விடுமுறையில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளைத் தருகிறார்கள். நேர்முகத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வுசெய்து கோடை முகாம், பணிமனை போன்றவற்றில் பணியமர்த்துகிறார்கள்.
அப்படிப் பணி புரிபவர்களுக்குச் சிறிது ஊதியம் மட்டுமன்றிப் புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் புள்ளிகள் கல்லூரியில் சேருவதற்குத் துணைபுரிகின்றன.
இவ்வாறு அமெரிக்கப் பள்ளிகள் அறிவியலால் அறிவை வளர்த்து, கலைகளால் உள்ளத்தைப் பண்படுத்தி, விளையாட்டுகளால் உடலை உறுதியாக்கி, முழு மனிதர்களை உருவாக்கும் களங்களாக அமைந்துள்ளன.
நம் நாட்டிலும் அத்தகைய களங்களாகப் பள்ளிகள் உருவாவது இன்றியமையாத தேவை.

No comments: