பள்ளி மாணவர் இடைநிற்றல் குறைந்துள்ளது: தமிழக அரசுஜூலை 30,2014,10:44 IST
சென்னை: தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வித்துறை புள்ளி விவரப்படி, 2001 - 02ல், தொடக்கநிலை வகுப்பில், மாணவர் இடைநிற்றல் 12 சதவீதமாக இருந்தது, 2013 - 14ல், 0.95 சதவீதமாக குறைந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுநிலை வகுப்புகளில், 2001 - 02ல், 13 சதவீதமாக இருந்த இடைநிற்றல், 2013 - 14ல், 1.65 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப, நடுநிலை வகுப்புகளில், மாணவர் சேர்க்கை 99 சதவீதமாக இருப்பதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது.
"மாணவர்களுக்கு, இலவச நோட்டு புத்தகம், பாடப் புத்தகம், இலவச சைக்கிள், லேப் - டாப் உட்பட, 14 வகையான இலவச திட்டங்கள் வழங்கப்படுவதால், மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இதன் காரணமாக, கிராமப்புறங்களில், பள்ளி இடைநிற்றல் அளவு கணிசமாக குறைந்துவிட்டது" என கல்வித் துறை வட்டாரம் கூறுகிறது.
இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: இடைநிற்றல் குறித்தும், முழுமையான அளவில், அனைத்து குழந்தைகளும் பள்ளிகளில் சேர்ந்தார்களா என்பது குறித்தும், கல்வித்துறை அல்லாத பிற அமைப்புகளிடம் முழுமையான புள்ளி விவரம் இருக்கிறதா என தெரியவில்லை.
இடைநிற்றல் விகிதம் குறைந்திருப்பது சரியாக இருக்கலாம். ஆனால், பள்ளி சேராத தெருவாழ் சிறார்கள், இன்றும் அதிகளவில் இருக்கின்றனர். சென்னையிலேயே பல குடிசை பகுதிகள் உள்ளன. அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் கல்வி கற்கின்றனர் என்பதை உறுதியாக கூற முடியாது.
எனவே, தெருவாழ் சிறுவர்கள், குடிசை பகுதிகளில் வாழும் சிறுவர்கள் மற்றும் பிழைப்பிற்காக, ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆகிய அனைவரையும், ஆரம்பப் பள்ளிகளில் சேர்ப்பதை, கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன், அவர்கள், தொடர்ந்து கல்வி கற்பதையும் கண்காணிக்க வேண்டும். இதை செய்தால்தான், மாணவர் சேர்க்கையில் 100 சதவீதத்தை எட்ட முடியும். இவ்வாறு பிரின்ஸ் தெரிவித்தார்.