தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் சர்ச்சை; போராட்டம்
By நாகப்பட்டினம்,
First Published : 24 June 2014 12:58 AM IST
நாகையில் நடைபெற்ற தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில், ஒரு பள்ளியின் காலிப் பணியிடம் குறிப்பிடப்படாததைக் கண்டித்து ஆசிரியர்கள் திங்கள்கிழமை கலந்தாய்வு மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கோரும் கலந்தாய்வு மற்றும் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கோரும் கலந்தாய்வு ஆகியன திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெற்றது.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் நிலஒளி தலைமையில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரும் கலந்தாய்வு திங்கள்கிழமை காலை நடைபெற்றது. மயிலாடுதுறை தவிர அனைத்து ஒன்றியங்களுக்கும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட நிலையில், இறுதியாக மயிலாடுதுறை ஒன்றியத்துக்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டது.
அப்போது, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சித்தமல்லி, ஆத்தூர், வடவஞ்சார், வேப்பங்குளம், சோழியங்கோட்டகம், ஐவநல்லூர், திருமேனியார்கோவில், வரதம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குத் தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டது.
இதில், மயிலாடுதுறை ஒன்றியத்துக்குள்பட்ட பொட்டவெளி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், அந்தப் பணியிடம் கலந்தாய்வில் மறைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பேச்சுவார்த்தை மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், நேர்மையான கலந்தாய்வை உறுதி செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பியவாறு, ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்காமல் வெளியேறினர்.
இதனால், மயிலாடுதுறை ஒன்றியத்துக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பொட்டவெளி பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் கலந்தாய்வில் சேர்க்கப்படாத வரை, கலந்தாய்வை நடத்த அனுமதிக்க முடியாது எனக் கூறி ஆசிரியர்கள் தொடர்ந்து கலந்தாய்வு மையத்தில் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அங்கு தொடர்ந்து கூச்சல் குழப்பம் நீடித்தது.
இது குறித்துத் தகவலறிந்த நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, பொட்டவெளி பள்ளிக்கான பணியிடமும் கலந்தாய்வில் சேர்க்கப்படும் என உறுதியளித்தார். இதனால், ஆசிரியர்கள் அமைதியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை மாலை மயிலாடுதுறை ஒன்றியத்துக்கான கலந்தாய்வு மீண்டும் தொடங்கப்பட்டது. அதில், பொட்டவெளி பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடமும் சேர்க்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment