நெல்லை கல்வித்துறையில் ரூ 37 லட்சம் மோசடி: ஆர்.டி.ஐ.,மூலம் கிடைத்த தகவல்களால் அம்பலம்
திருநெல்வேலி:நெல்லையில் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விழாவின் மூலம் 37 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நெல்லையில் கடந்த 2013 அக்டோபர் 26ல் தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தனித்திறன் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், மாநில என்.எஸ்.எஸ்.,திட்ட அலுவலர் உஷாராணி, பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன், மாநகராட்சி மேயர், கலெக்டர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்காக மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடலாம் என அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. இருப்பினும் உணவு, மேடை அலங்காரம், விழாமலர் தயாரித்தல், வரவேற்பு என பல்வேறு பணிகளையும் வெவ்வேறு தனியார் பள்ளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் தனியார், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிமாணவர்களிடம் தலா ஐந்து ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களிடம் 23 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். பள்ளி நிர்வாகத்திடமும் நன்கொடை என்ற பெயரிலும், விளம்பரம் வெளியிட என வசூலித்துள்ளனர். மொத்தம் 40 லட்சம் லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர்.
எனவே இதற்கான எந்த வரவு, செலவு கணக்கு முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த நான்கு மாதங்களாக சேகரித்த தகவல்களை நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், அரசு செலவிட அனுமதித்த மூன்று லட்சத்திற்கு பதிலாக, 40 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளனர். என்.எஸ்.எஸ்.,மாநில அலுவலர் உஷாராணி தனியார் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்தார். இந்நிகழ்ச்சிக்காக மாணவர்களிடம் இருந்து தலா ஐந்துலட்சம் வசூலித்ததும் சட்டப்பூர்வமாக தவறானது. இதுகுறித்து தகவல் கேட்டால் தராமல் புறக்கணிக்கிறார்கள். எனவே கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு, மாவட்ட கல்வி அதிகாரி டோரா, 40க்கும் மேற்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். ஆர்.டி.ஐ.,மூலம் பெறப்பட்ட தகவல்களை கலெக்டர் கருணாகரனிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். கலெக்டரும் இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு கூறுகையில், மூன்று லட்சம் ரூபாயில் நிகழ்ச்சி நடத்த முடியாது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம்தான் நிதி வசூலித்தோம். மாணவர்களிடம் பணம் பெறவில்லை என்றார்.
No comments:
Post a Comment