நாமக்கல் அரசு பள்ளியில்
வகுப்பில் மயங்கி விழுந்து 10 வயது சிறுவன் சாவு
கருத்துகள்
நாமக்கல்: நாமக்கல்லை அடுத்த எம்.ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் கோவலன். இவரது மகன் மோகன் (10). சந்தைப்பேட்டைபுதூரில் உள்ள அர்த்தனாரி துவக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை 10.30 மணிக்கு பள்ளியில் ஆசிரியை பாடம் நடத்தி கொண்டிருந்தபோது திடீரென மோகனுக்கு வலிப்பு வந்து மயங்கி விழுந்தான்.
இதுபற்றி தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியை பாரதி, பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு டாக்டர் வீட்டுக்கு மோகனை தூக்கி சென்றார். மாணவனை பரிசோதித்த டாக்டர் பல்ஸ் குறைந்து கொண்டே வருவதால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து மாணவனை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அப்போது, மாணவனின் தாய் ஜோதி, மகனின் சடலத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். தகவல் அறிந்து சென்ற நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாபு மற்றும் பள்ளி ஆசிரியைகள் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
இதுபற்றி கல்வி அதிகாரி பாபு கூறுகையில், ‘‘கடந்த 2012ம் ஆண்டு முதல் மாணவன் மோகன் இருதய கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளான். நேற்று பள்ளியில் ஆசிரியை பாடம் நடத்தி கொண்டிருந்தபோது மாணவன் மயங்கி கீழே விழுந்துள்ளான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தும் காப்பாற்ற முடியவில்லை‘‘ என்றார்
.
No comments:
Post a Comment