By உதயை மு. வீரையன்
First Published : 08 May 2014 01:35 AM IST
தேசத்துக்கான தேர்தல்களும், கல்விக்கான தேர்வுகளும் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கின்றன. தேர்தல் முடிவுகள் மக்களுக்கான ஒரு நல்லாட்சிக்கு வழி வகுக்கட்டும்; தேர்வு முடிவுகள் மாணவர்களின் நல்வாழ்வுக்கு வழி வகுக்கட்டும்.
வாக்களித்த மக்களும், தேர்வெழுதிய மாணவர்களும் முடிவை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கின்றனர். பத்து மாதம் சிசுவை வயிற்றில் சுமந்திருக்கும் தாய், பிரசவ வலியோடு பிள்ளையின் முகம் பார்க்கக் காத்திருப்பது போல இவர்களும் காத்திருக்கின்றனர். குழந்தை ஆணா, பெண்ணா என்பதைவிட எப்படியாவது குழந்தை நல்லபடியாகப் பிறக்க வேண்டுமே என்பதுதான் ஒரு தாயின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. சில தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அரசின் சட்ட திட்டங்களையோ, கல்வித் துறையின் விதிமுறைகளையோ ஏற்றுச் செயல்படுத்துவது இல்லை. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
பல தனியார் கல்விக் கூடங்கள் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களில் விளம்பரம் செய்து, தங்கள் சாதனைகளை பெருமையடித்துக் கொள்ளுகின்றன. இதில் மயங்கிய பெற்றோர்கள் அந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கத் துடிக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு நர்சரி பள்ளியில் தம் பிள்ளையைச் சேர்ப்பதற்காக சிலர் விடிய விடிய காத்திருக்கின்றனர். அவர்களைப் பார்க்கும் மற்ற பெற்றோரும் அங்கேயே போகின்றனர். இந்த வறட்டு கெளரவத்துக்காக நம் சமுதாயம் கொடுக்கும் விலை அதிகம். புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது போல நடுத்தரப் பிரிவு மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுகின்றனர்.
ஒரு நர்சரியில் படிக்கும் மாணவன், "நான் படிச்சுப் பெரியவனான பிறகு, பணம் சம்பாதிச்சு என் அப்பாவுக்கு ஒரு வீடு வாங்கித் தருவேன். ஏன்னா, எங்க வீட்டை வித்துதானே என்னை என் அப்பா நர்சரியில் சேர்த்தார்' என்று கூறினான்.
இது ஒரு கற்பனை போன்று தெரியலாம். ஆனால் இதில் உண்மை இல்லாமல் இல்லை. அந்த அளவுக்கு கல்வி என்பது இன்று மிகவும் விலை உயர்ந்த வணிகமாகி விட்டது. இது ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளம் அல்ல; மாறாக சமுதாயச் சீரழிவின் ஆரம்பம்.
தமிழகத்தில் தேர்தல் சூடு இப்போதுதான் தணிந்திருக்கிறது. அதற்குள் தனியார் பள்ளிகளில் கட்டண வடிவில் சூடு ஆரம்பமாகிவிட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கல்விக் கட்டணம் இரண்டு மடங்காகி விட்டதாக சில பள்ளிகளுக்கு எதிராக பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டங்களும் நடத்தியுள்ளனர்.
இதுபற்றி பள்ளிக் கட்டணக் குழுத் தலைவர் நீதிபதி சிங்காரவேலு கூறுகையில், "கட்டணக் குழு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதலான தொகையை பள்ளி நிர்வாகம் வசூலிக்கக் கூடாது; கடந்த ஆண்டு எந்தக் கட்டணம் நடைமுறையில் இருந்ததோ அதே நிலை நீடிக்கும்; கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காட்டி மாணவர்களுக்கு டி.சி. கொடுக்கக் கூடாது. அப்படி நடந்தால் அந்தப் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவித்துள்ளார்.
மனித இன வரலாற்றில் அரிய கண்டுபிடிப்பே கல்வியாகும். காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த கற்கால மனிதன் நாகரிகம் அடைவதற்குக் கல்வியே வழிகாட்டியது. அதனால்தான் கல்வி என்பது செல்வமாகி, மற்ற பொருட்செல்வங்களை விடச் சிறந்த செல்வமாகப் பேசப்படுகிறது.
"மனிதன் பிறந்த நிலையிலேயே விடப்பட்டால் அவன் மனிதனாக இருக்க மாட்டான். அவன் வாழும் சூழ்நிலை அவனது இயற்கைத் தன்மையைச் சூறையாடி விடும். பலர் நடந்து செல்லக்கூடிய பாதையில் செடி இருந்தால் அது அழிந்து போகும். கல்வியற்ற மனிதனும் அழிபட்டுதான் போவான்...' என்று சிறந்த கல்வியாளரான ரூசோ கூறியுள்ளார்.
இப்போது எங்கும் கல்விக்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. உண்மையான கல்வி என்பது என்ன? அதனை நோக்கி இந்தக் கல்விச் சாலை போகிறதா? அரசு கல்விச் சாலைகளைத் தனியாரின் ஏகபோக வணிகத்துக்கு தாரை வார்த்திருப்பது சரிதானா?
இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் 45ஆவது பிரிவின் கீழ் 1950ஆம் ஆண்டு குடியரசாக அறிவிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள், 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும்' என்று கூறி பல பத்தாண்டுகள் கழிந்துவிட்டன.
"குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009' கடந்த 2010 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசாங்கமும் அறிவித்தது. ஆனால் இதுவும் எழுத்தளவில் இருக்கிறதே தவிர, இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை.
கல்வி உரிமைச் சட்டத்தின் இன்றியமையாத பிரிவுகள் தனியார் பள்ளிகளாலும், கல்வித் துறையாலும் கண்டு கொள்ளப்படவே இல்லை. அப்படியிருக்க அவற்றைக் கடைப்பிடிப்பது எப்போது?
அனைத்துப் பள்ளிகளிலும் 25 விழுக்காடு இடங்களை நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பள்ளியில் சேர்க்கைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. பெற்றோரையோ, குழந்தைகளையோ நுழைவுத் தேர்வுக்கோ, நேர்காணலுக்கோ உட்படுத்தக்கூடாது.
எந்தக் குழந்தையையும் உடல் ரீதியான தண்டனைக்கோ, மன உளைச்சலுக்கோ ஆளாக்கக் கூடாது. அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை ஏற்படுத்தி, அதில் நான்கில் மூன்று பங்கு இடங்களில் பெற்றோர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இவையெல்லாம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
பல தனியார் பள்ளிகள், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களை பணக்கார மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு நிரப்புகின்றன. அத்துடன் அவர்கள் அனைவரையும் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்தவர்களாக கணக்குக் காட்டி இந்தச் சட்டத்தையே அவமதிக்கின்றன.
இவ்வாறு முறைகேடுகள் செய்யப்படுவதால் தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதி இடங்கள் கூட நிரப்பப்படுவதில்லை என்பதை தமிழக அரசின் கல்வித் துறையே ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் எத்தனை இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் கடந்த ஏப்ரல் 2க்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெளியிடப்படவில்லை.
இன்றைய கல்வி மாணவர்களைப் பக்குவப்படுத்துவதாக அமையவில்லை என்பதே கசப்பான உண்மை.
இதனையேதான் காந்தியடிகளும், "ஒருவரிடமுள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியாகும். மனித வர்க்கமாகிய புத்தகத்தைவிட சிறந்த புத்தகம் வேறு இருக்க முடியுமா?' என்று கேட்டார். இவ்வாறு காந்தியடிகளும், கவி தாகூரும், பாரதியாரும் கூறிய தாய்மொழி வழிக் கல்வி தமிழகத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்பதைப் பற்றி யாரும் கவலைப்படவே இல்லை.
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வந்த பிறகும், குழந்தைத் தொழிலாளர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது ஒரு முரணான செய்தியாகும்.
குழந்தைகளை உழைப்பில் ஈடுபடுத்துவது என்பது மிகப் பெரிய குழந்தை உரிமை மீறலாகும். இதனால் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதுடன் அவர்களின் குழந்தைப் பருவமும், நலவாழ்வும் முற்றிலும் அழிக்கப்படுகிறது.
குழந்தைத் தொழில் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம்-1986 குழந்தைத் தொழிலை ஒழிக்கத் தவறிவிட்டது. 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் ஆபத்தான மற்றும் ஆபத்து இல்லாத என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விதமான தொழில்களில் பணிபுரிவதையும் தடை செய்யும் வகையில் குழந்தைத் தொழில் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
கல்வி உரிமைக்கான சட்டம் வந்துவிட்டது. அதனை கல்விக் கூடங்கள் முறையாக நடைமுறைப்படுத்துகின்றன என்று அரசும், கல்வித்துறையும் உறுதிசெய்ய வேண்டும். இல்லையேல், "நான் அடிப்பதுபோல அடிக்கிறேன், நீ அழுவதுபோல அழு' என்கிற கதையாக ஆகிவிடும்.
No comments:
Post a Comment