பள்ளி மாணவர்களுக்கு கோடை அறிவியல் முகாம்: அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் தொடங்கியது
பள்ளி மாணவர்களுக்கான கோடை அறிவியல் முகாம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆண்டுதோறும் கோடை அறிவியல் முகாம்களை நடத்தி வருகிறது. இந்தாண்டு முகாம், சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
மே 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு நடக்கும் இந்த முகாமில் மனோ தத்துவவியல், இயற்பியல், கணிதம், சூழ்நிலையியல், மின்னணுவியல், வேதியியல், வான சாஸ்திரம், யோகா உள்ளிட்ட துறைகளின் கீழ் பல்வேறு பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த முகாமின் முக்கிய அம்சமாக செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை அங்குள்ள கோளரங்கத்தில் சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் டாக்டர் ஐயம்பெருமாள் கூறியதாவது:
பள்ளிகளில் படிக்கும்போது மாணவர்கள் ஆய்வு ரீதியாகவும் யோசிக்க வேண்டும். ஆய்வுகளால் மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். இந்த 3 நாள் முகாமின்போது மட்டுமல்லாமல், பள்ளி நாட்களிலும் மாணவர்கள் தங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது அறிவியல் மையத்துக்கு வந்து ஆய்வு ரீதியான அறிவை வளர்த்துக்கொள்ளலாம். இன்றைக்கு உலகம் நானோ தொழில்நுட்ப யுகத்தில் இருக்கிறது. எனவே மாணவர்கள் அதற்கு ஏற்றார்போல் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு வெற்றியாளர்களாக வர வேண்டும் என்றார்.
முன்னதாக அறிவியல் முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மனோதத்துவ நிபுணர் டாக்டர். ஜி.வி.குமார் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment