மதிப்பூதியத்தை உயர்த்தி தர வாக்குச் சாவடி அலுவலர்கள் கோரிக்கை
By நாகப்பட்டினம்,
First Published : 20 April 2014 02:43 AM IST
வாக்குப் பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதையொட்டி, வாக்குச் சாவடி அலுவலர்களின் மதிப்பூதியத்தை உயர்த்தித் தர வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கூட்டணியின் நாகை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் தங்க. மோகன், சி. பிரபா, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகை நகரச் செயலாளர் தாமோதரன், வட்டாரச் செயலாளர்கள் கி. பாலசண்முகம், சண்முகசுந்தரம், சரவணன், ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், பூ. திருமுருகன், சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விரைவாக விலையில்லா சீருடைகள் வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்காததைக் கருத்தில் கொண்டு, வரும் கலந்தாய்வில் முன்னுரிமைப் பட்டியல்படி பதவி உயர்வு வழங்கக் கேட்டுக் கொள்வது.
வாக்குப்பதிவு 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பதையொட்டி, வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியைக் கேட்டுக் கொள்வது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு. லெட்சுமிநாராயணன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ப. ஜோதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment