நாகையில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 1,200 பேர் உள்ளிருப்புப் போராட்டம்
By dn, நாகப்பட்டினம்
First Published : 26 February 2014 04:40 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி விடுத்த அழைப்பின் பேரில், நாகை மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 1,200 பேர் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப். 25-ம் தேதி உள்ளிருப்புப் போராட்டமும், பிப். 26-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பின் பேரில், நாகை நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த அரசுத் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 350 பேர் உள்பட, மாவட்ட அளவில் 1,200 ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தக் கோரிக்கை அச்சிடப்பட்ட அட்டைகளை அணிந்து பள்ளிக்குச் சென்ற இந்த ஆசிரியர்கள், பள்ளியில் கற்பிக்கும் பணியில் ஈடுபடாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம்: தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அழைப்பின் பேரில், புதன்கிழமை நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில், சுமார் 1,200 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துப் பங்கேற்கவுள்ளனர். இதனால், மாவட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் புதன்கிழமை இயங்க முடியாத நிலை ஏற்படும் என்றார் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டச் செயலாளர் மு. லட்சுமிநாராயணன்.
No comments:
Post a Comment