ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கூட்டம் அலைமோதிய காலம் உண்டு. கடந்த 2001-02ம் ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை ஒதுக்கிவிட்டு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுக்கு முன்புவரை இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிளஸ் 2 முடித்ததும் போட்டி போட்டுக்கொண்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தனர். இதனால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. படித்து முடித்தவர்களின் எண்ணிக்கையும் மிகுதியானது.
தமிழகத்தில் 9 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், மாவட்டக் கல்வியியல் பயிற்சிக் கல்லூரி (DIEAT) 29, அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 42, தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி 35, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 615 உள்ளன. அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் உள்ள 280 இடங்களில், 245 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. மாவட்டக் கல்வியியல் பயிற்சிக் கல்லூரியில் 2400 இடங்களில் 1999 இடங்களும், அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 2100 இடங்களில் 1275 இடங்களும், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 38,000 இடங்களில் 5263 இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் ஏராளமானோர் படித்து முடித்துவிட்டதால் இப்படிப்புக்கு வரவேற்பு குறைய ஆரம்பித்துள்ளது. தகுதியுடைய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை தேர்வு செய்து படிப்பதன்மூலம் எளிதில் அரசுப் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்தவர்களைவிட, புதிதாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்தவர்களே அரசுப் பணிக்கு அதிகம் சென்றுள்ளனர். எனவே, இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பை நல்ல பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்து முடிப்பவர்களுக்கு என்றுமே வாய்ப்பு காத்திருக்கும்.
முன்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணிவாய்ப்பு கிடைத்து வந்தது. தற்போது, அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதன்மூலம், இடைநிலை ஆசிரியராக முடியும்.
அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. எனவே, இப்படிப்பில் சேர்ந்து அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், இப்படிப்பில் சேர்ந்தவுடன் தொலைதூரக் கல்வியில் பி.ஏ., பி.எஸ்சி. என பட்டப்படிப்பு சேர்வது புத்திசாலித்தனம். பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு முடித்து பி.எட்., எம்.எட். என படிக்க வேண்டும். இவ்வாறு மேற்படிப்புகளை படிப்பதன்மூலம், இடைநிலை ஆசிரியர்கள் இளநிலை, முதுநிலை பணி வாய்ப்பு பெறலாம். எம்.பில்., பிஎச்.டி. வரை படிப்பவர்கள் கல்லூரிகளில் பேராசிரியராகலாம்.
எனவே, இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு படிப்பவர்கள் அடுத்தடுத்த பட்டப்படிப்புகளை படிப்பதால் கல்வித் தரத்தை உயர்த்திக்கொண்டு நல்ல நிலைக்கு செல்ல முடியும். தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பாடம் எடுக்க பி.எட். கல்வித் தகுதி கேட்கும் நிலை உள்ளது. ஆசிரியர் பட்டயப் படிப்புடன் கூடுதலாக பட்டப்படிப்பு படிப்பதால், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும்
No comments:
Post a Comment