சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே அமரகுந்தியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, அ.தி.மு.க.,வை சேர்ந்த, அமரகுந்தி பஞ்சாயத்து தலைவர் குருசாமி (எ) மாதவன், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் மணிமுத்து உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு, அமரகுந்தி தொடக்கப்பள்ளிக்குச் சென்றனர்.
அங்கு தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்ற மணிமுத்து, அங்கிருந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் படத்தை அகற்றுமாறு, தலைமை ஆசிரியை விஜயலட்சுமியை மிரட்டினார்.
அவரது மிரட்டலுக்கு பயந்த தலைமை ஆசிரியை, சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்த, கலைஞரின் படத்தை கழட்டிவிட்டார். இதுகுறித்து, தகவலறிந்த, தி.மு.க.,வினர், 25-க்கும் மேற்பட்டோர், பள்ளி எதிரே சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற, ஜலகண்டாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி, மறியலில் ஈடுபட்ட, தி.மு.க.வினரை, சமாதானம் செய்து, மறியலை கைவிடச் செய்தார். கழற்றப்பட்ட கலைஞரின் படத்தை, தி.மு.க.,வினர் எடுத்து வந்து இருந்த இடத்திலேயே மாட்டினர். இந்த மறியலால், தாரமங்கலம்-தொளசம்பட்டி சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதை தவிர்க்க, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment