காஞ்சிபுரம் மாவட்டத்தில் நில அளவைத்துறையில் சர்வேயராக வேலை பார்த்தவர்
கடந்த 18.09.2003 அன்று திடீரென இறந்தார். அவருக்கு ஒரு மனைவியும், 3
பிள்ளைகள் உள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது மனைவி, ‘தனது கணவரின் வேலையை
கருணை அடிப்படையில், அவரது வாரிசுகளுக்கு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி
கடந்த 2004&ம் ஆண்டு மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் கோரிக்கை மனு
அனுப்பினார். பிறகு அவரது மகள் ப்ரீத்திக்கு கருணை அடிப்படையில் வேலை
வழங்கவேண்டும் என 2005&ம் ஆண்டு மனு அனுப்பினார். ஆனால் அதற்கும் எந்த
பதிலும் இல்லை. இதையடுத்து, 2011&ம் ஆண்டு, ப்ரீத்தி முதல்வரின் நேரடி
புகார் பிரிவுக்கு மனு அனுப்பினார். அதை காஞ்சி புரம் மாவட்ட நில
அளவைத்துறை உதவி இயக்குனர் நிராகரித்தார். கருணை அடிப்படையில் வேலை கேட்ட
ப்ரீத்திக்கு இன்னும் வயது 18 ஆகாததால், அவரது கோரிக்கை மனுவை
நிராகரிப்பதாக, நில அளவைத்துறை உதவி இயக்குனர் தனது உத்தரவில் தெரிவித்து
இருந்தார். இதை எதிர்த்து ப்ரீத்தி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில்,
‘எனது விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த வேலை வழங்கவேண்டும்’ என
கூறியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் விண்ணப்பத்தை நில அளவைத்துறை உதவி இயக்குனர் நிராகரிக்கும்
போது, மனுதாரருக்கு 18 வயது பூர்த்தியாகி விட்டது. எனவே, அவரது கருணை மனுவை
நிராகரித்ததில் எந்த நியாயமும் இல்லை. எனவே, ஆறு வாரங்களுக்குள் அவரது
மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே அவரது
கருணை மனுவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி
தீர்ப்பில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment