First Published : 12 December 2013 05:42 AM IST
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.
சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் சார்பில் கேந்திரிய வித்யாலய சங்கேதனின் பொன் விழா சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கலாம் பேசியது:
கடந்த 1963ஆம் ஆண்டு 20 பள்ளிகளுடன் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் தொடங்கப்பட்டது. இப்போது இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
சென்னை மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் மட்டும் 51 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த அமைப்புக்கு எனது வாழ்த்துகள்.
மாணவர்களிடம் பெரிய தாக்கத்தை ஆசிரியர்கள், குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்த முடியும்.
ராமேசுவரம் தொடக்கப்பள்ளியில் எனது அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பறவைகள் குறித்து பாடம் நடத்தினர். அப்போது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை வகுப்பறையில் விளக்கியதோடு, கடற்கரைக்கு அழைத்துச்சென்று எங்களை நேரடியாகவும் பார்க்கச் செய்தார். சிறுவனாக இருந்த என் மனதில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்கு விமானியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அடுத்து அவரிடம், "விமானியாக என்ன படிக்க வேண்டும்?' என்றுதான் கேட்டேன்.
அவரது ஆலோசனைப்படியே, பட்டப்படிப்பில் இயற்பியல் படித்தேன். அதன்பிறகு ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பும் படித்தேன். நான் ராக்கெட் என்ஜினியராக, விண்வெளி விஞ்ஞானியாக பணியாற்றியிருந்தாலும், விமானியாக வேண்டும் என்கிற கனவு அவரது வகுப்பில்தான் உருவானது.
அந்தக் கனவை விடாமுயற்சியோடு பின்தொடர்ந்தேன். ஒருதுறையில் சிறந்து விளங்குவது என்பது விபத்தல்ல. அது ஒரு தொடர் முயற்சி. அனைத்திலும் சிறந்துவிளங்க வேண்டும் என்பது ஒரு கலாசாரமாகவே மாற வேண்டும். இந்த கலாசாரத்தை ஆசிரியர்கள்தான் மாணவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும், என்றார் அவர்.
கேந்திரிய வித்யாலய சங்கேதன் அமைப்பின் சென்னை மண்டல துணை கமிஷனர் என்.ஆர்.முரளி, சென்னை ஐ.ஐ.டி. டீன் பேராசிரியர் ராமமூர்த்தி, சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் டி.டி. சுதர்சன ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்(2)
படித்தவர்களுக்கு வழிகாட்டியாக உந்துதலாக 90 சதவீதம் ஆசிரியரே.ஆசிரியர்கள் சமுதாயத்தின் முதுகெலும்பு போன்றவர்கள்.தொடக்கப்பள்ளி ஆசிரியர் குழந்தைகளுக்கேற்ப அவரவர் நிலை அறிந்து விளையும் பயிரை முளையிலே கண்டறிந்து ஊக்கப்படுத்தினால் சமுதாய மாற்றம் தானே நடக்கும்.எனது முதலாளி எந்த ஒரு செயலுக்கும் வேறுபாடின்றி அனைவருக்கும் நன்றி நன்றி சொல்லுவார்.அவர் தொழிலகத்தில் வேலை செய்யும் எங்களை ஊக்கப்படுத்தியது.இதே போன்ற செயலை என் சரித்திர ஆசிரியை சொல்லி கொடுத்தார்கள்.சமுதாயத்தில் உதவி செய்யும் ஒவ்வருக்கும் நன்றி சொல் என்றார்கள்.நான் பங்களாதேஷில் பணி புரியும்பொழுது நன்றி சொல்லும் பழக்கத்தை ஒவ்வரிடமும் சைக்கிள் ரிக்ஸா ஓட்டுனர் முதல் நான் அன்றாடம் சந்தித்த அனைவருக்கும் நன்றி சொல்லி வந்தேன்.ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக பார்த்தவர்கள் பழக பழக எல்லோரும் முகமலர்ச்சியுடன் என்னை வரவேற்றார்கள்.அது நல்ல ஒழுக்கத்தையும் கொடுத்தது.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்றானே அவனை நினைத்து இன்றும் என் ஆசிரியர் முதலாளி நன்றி சொல்லிகொண்டேயிருக்க்றேன்
பதிவுசெய்தவர் ச.விஸ்வநாதன் 12/12/2013 09:06
The real teacher is child's mother and the real teachers are the teachers handling primary classes. They mould the child to read, listen, speak and write.
பதிவுசெய்தவர் MBJ PANCRAS 12/12/2013 15:13