பள்ளி உளவியல்
By பாஞ்.இராமலிங்கம்
First Published : 25 November 2013 12:49 AM IST
பள்ளி உளவியல் - பாஞ்.இராமலிங்கம்; பக்.240; ரூ.300; தமிழ்ப் புதுவை வெளியீடு, 22, தேர் வீதி, பிள்ளைசாவடி, புதுவை-14.
மாணவர்களின் உளவியல் குறித்த அடிப்படை அம்சங்களை ஆசிரியர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள அவசியமான நூல்.
எதைக் கற்பது? எப்படிக் கற்பது? கற்றதை வாழ்வில் எப்படிப் பயன்படுத்துவது? என்பனவற்றை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளை அடக்கி வளர்த்தலே அவர்களுக்கு திக்குவாய் பிரச்னை ஏற்பட முதல் காரணம்; திக்குவாய் உள்ள குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதே அப் பிரச்னைக்குத் தீர்வு காண உதவும் என்கிறார் நூலாசிரியர். சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், அவற்றால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றின் காரணமாகத் தோன்றும் மனச் சிதைவு நோய், மன நோய்களில் கடுமையான நோயாகும்.
குழந்தைகளை இதுபோன்ற உளவியல் பாதிப்புகளில் இருந்து விடுவிப்பதற்கு பள்ளிகளில் உளவியல் நிபுணர்களை பணியமர்த்த வேண்டியதன் அவசியத்தை இந்நூல் வலியுறுத்துகிறது. பள்ளி உளவியலைப் பற்றியதான நூலாக இருந்தாலும், உளவியலின் அடிப்படைகள், நம் நாட்டு, மேல் நாட்டு உளவியல் நிபுணர்களின் கருத்துகள், குழந்தைகளுக்கான உரிமைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்னைகள், கற்றல் குறைபாடுகள், தடைகள், அவற்றுக்கான தீர்வுகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை இனம் காண்பது எப்படி? என ஒட்டு மொத்தமாக குழந்தைகளின் மனநலனுக்காகப் பேசும் இந்நூல் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒன்றாகும்.
No comments:
Post a Comment