தேர்வறையின் மூலையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி காலாண்டுத்தேர்வை கர்மசிரத்தையுடன் எழுதிக்கொண்டிருந்த மாணவிகளை கண்காணித்துக்கொண்டிருந்தேன். முகங்களில் பதட்டம் தெரிய பரபரப்பின் காரணமாக வழிந்த வியர்வையை துடைக்கக்கூட அவகாசமின்றி மாணவிகள் மும்முரமாய் எழுதிக்கொண்டிருந்தது எனக்கு என் பள்ளி காலங்களை நினைவூட்டியது. சற்றே இறந்த காலத்தில் தொலைந்திருந்த என்னை வராத மாணவிகளின் எண்களை குறித்துப்போக வந்த பியூனின் குரல் மீட்டெடுத்தது.
வராத மாணவிகளின் எண்களை குறித்து கையெழுத்திட்டு நீட்டியபோதுதான் கவனித்தேன் அவளை. மகாலட்சுமி !. என் வகுப்பில் எப்போதும் அவள் படித்ததில்லை. அதனால் அவளைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இப்போது அவள் செய்துகொண்டிருந்த செயல் அவளைப் பற்றி அறியவும், அவளுக்கு சற்று அறிவுரை வழங்கவும் வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
தேர்வு முடிந்ததும் அனைவரும் விடைத்தாட்களை ஒப்படைத்துவிட்டு கிளம்ப அவளும் என்னிடம் வந்தாள். நீ கொஞ்சம் இரு கடைசியாக போகலாம் என்றேன். அவளுக்கு சட்டென்று வியர்த்தது. முகம் மாறியது. ஓ! இவர் நம் செயலைக் கவனித்து விட்டார் என்று புரிந்துகொண்டாள். ஒருவேளை அதற்கு என்ன பதில் சொல்லலாம் எனவும் கிடைத்த அந்த அவகாசத்தில் அவள் யோசித்திருக்க கூடும். அனைவரும் சென்றபிறகு அவளையே பார்த்தேன். சிரிக்க முயன்று தோற்றாள். நான் போகட்டுமா மேம் என்றாள். எப்படி உட்கார்ந்திருந்தே அங்கே என்றேன். சம்மணம் போடாமல் உட்கார்ந்திருந்தேன். நான் அதைப் பத்தி கேட்கல என்றேன் அழுத்தமாக. புரியல மேம் என்று தயக்கத்தோடு பார்த்தாள். சற்றுநேரம் அவள் கண்களையே பார்த்து சரி நீ போ என்றேன் மேலும் ஒன்றும் கூறாமல். அதுவரை பாடம் நடத்துதலின் அழுத்தம் காரணமாக வளரிளம் பருவ மாணவிகளுக்கு அறிவுரை கூறுவதில் சற்றே சுணக்கம் கண்டிருந்தேன். இப்போது மீண்டும் அதற்கு அவசியம் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டாள் அவள்.
ஒருவாரம் சென்றிருக்கும். பக்கத்து வகுப்பறையில் ஒரே சலசலப்பு. சற்று நேரத்தில் இரு பெண்கள் ஓடி வந்தனர். மேம், பக்கத்து காம்பவுண்டிலிருந்து இந்த பந்து வந்து விழுந்தது என்று கல் கட்டிய பேப்பர் பந்து ஒனறை நீட்டினாள்.வாங்கி பார்த்தேன். யாரோ 9 ம் வகுப்பி பி பிரிவு மகாலட்சுமி எனும் மாணவிக்கு எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம். காதல் ரசம் அறுவருப்பின் எல்லையைத் தொட்டது. அவளை அழைத்து வா என்றேன். வந்தவளைப் பார்த்து அதிர்ந்துபோனேன். சென்ற வாரம் பதின்பருவ மாணவிகள் பற்றி என்னைச் சற்றே யோசிக்க வைத்தவள்.
அவளிடம் ஒன்று பேசத் தோன்றவில்லை எனக்கு. மனதளவிலும் உடலளவிலும் வயதுக்கு மீறி வளர்ந்திருந்தாள் அவள். இந்தக் கடிதத்தில் அவளுக்கு எந்தளவு பங்கு இருக்கிறது என்று தெரியவில்லை எனக்கு. ஆகவே பொதுவாக ஆனால் அழுத்தமாக அறிவுரை கூறி அவளை அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த அறிவுரைகளை அவள் நின்று கேட்டவிதம், இதுபோன்ற அறிவுரைகள் எனக்கு ஏற்கனவே பழக்கம்தான் என்றது.
அன்று வெள்ளிக்கிழமை. வளரிளம் பருவ மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமைத் தோறும் மாலை நேரங்களில் அவர்களின் உடற்கூறு மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை பற்றி விவாதிக்கும் நாள் .அதன் ஒருங்கிணைப்பாளர் நான். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆசிரியை கருத்துகளைக் கூற வேண்டும் என்று ஏற்பாடு. அன்றைக்கு பேச இருந்த ஆசிரியையிடம் இன்று நானே பேசிவிடுகிறேன் அடுத்த வாரம் உங்களை அழைக்கிறேன் என்று கூறி அன்று நானே வகுப்புக்கு சென்றேன் .
மாணவிகளுக்கு அந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அதனால் மனதளவில் ஏற்படக்கூடிய சலனங்களைப் பற்றியும் அதற்கு காரணமான ஹார்மோன்கள் பற்றியும் அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைத்தேன். மேலும் பொதுவாகவே வளரிளம் பருவத்தினரிடையே எப்போதும் தங்கள் உடல் வளர்ச்சி பற்றிய ஒருவித கிளர்ச்சியும் காதல் பற்றிய ஒரு தெளிவற்ற சுயப் புரிதலும் இருக்கும். பார்ப்பவர் மீதெல்லாம் ஒரு ஈர்ப்பு வரும். நம் கல்வியாளர்கள் பன்னிரண்டு வயதுள்ள பருவத்தை plastic age எனவும் பதின்பருவத்தை Age of day dreaming என்றும் அழைப்பர்என்றும் விளக்கினேன் . மேலும் இது கல்வி பயிலும் வயது இந்த நேரத்தில் மனதை ஒரு முகப்படுத்துதல் அவசியம். அலைபாய விட்டால் வாழ்க்கை தடம் மாறிப்போகும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அறிவுறுத்தினேன். அங்கே அமர்ந்திருந்த முன் வரிசை மாணவிகளுள் மகா லட்சுமியும் ஒருத்தி!
இரண்டு மாதங்கள் சென்றிருக்கும் பள்ளி கல்வித்துறையின் ஆணையின்படி JRC (இளையோர் செஞ்சிலுவை சங்கம் )மாணவிகளை அருலிலிருக்கும் ஏதேனும் ஒரு இடத்துக்கு களப்பயணம் அழைத்து செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது. JRC பொறுப்பிலிருந்த ஆசிரியர் ஆண் என்பதால் பெண் ஆசிரியை ஒருவர் மாணவிகளுக்கு துணையாக செல்ல வேண்டும் என்று தலைமை ஆசிரியர் என்னை அனுப்பி வைத்தார்.
பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியின் பின்பக்கமாக பேருந்து நிறுத்தப்பட்டிருக்க நான் மாணவிகளுடன் உள்ளே அமர்ந்திருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்தாள் மலர்கொடி எனும் மாணவி. மிகத் தைரியமான பெண்.அவள் திடீரென (தற்போது பெண் காவலராக பணிபுரிகிறாள்) என்னை உசுப்பினாள். என்ன என்றேன். முன்பக்கமாக கைக்காட்டினாள். நிமிர்ந்து பார்த்தேன். மகா லட்சுமி பேருந்துக்குள் இருந்து வெளியில் நிற்கும் ஒரு ஆணுக்கு சைகையில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சரி யாராவது தெரிந்தவராக இருக்கும் விடு என்றேன். இல்லை மேம் என்றாள் மலர் அழுத்தமாக.
பேருந்து கிளம்பியது இறங்க வேண்டிய இடம் வந்தததும் அனைவரும் இறங்கினர் ,ஜாலியாக சுற்றி வந்தனர். நான் அவர்கள் மகிழ்வதை ரசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று எங்கிருந்தோ ஓடிவந்தாள் மலர்கொடி. மேம் இங்கே வாங்களேன் என்று அழைத்தாள் அவள் பின்னே சென்றேன். அங்கே ஒரு தனியறையில் மகாலட்சுமி சைகையில் பேசிய பையனுடன் நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும் அதிர்ந்துபோனாள். சட்டென்று முகத்தை மறைத்தபடி வெளியேறினான் அவன்.
யாரவன்? என்றேன்.
என் அண்ணன் என்றாள்
உன் அண்ணனிடம் இந்தக் காட்டில் வந்து என்ன பேசிக்கொண்டிருக்கிறாய்? ஏன் இப்படி புனிதமான உறவுகளை கொச்சைப் படுத்திறீங்க என்றேன் கோபமாய்.
சட்டென அது என் மாமா என்றாள்.
கோபம் தலைக்கேறியது எனக்கு. நாளை உன் அம்மாவை வரச்சொல் அவங்களோட நான் கொஞ்சம் பேசணும் என்றேன் வரவழைக்கப்பட்ட சாதாரண குரலில் .அன்று போனவள் தான் .மீண்டும் அவளை பார்க்கவில்லை .
ஆண்டுத் தேர்வுகள் நடந்துகொண்டிருந்த சமயம். தேர்வு பணி முடிந்து தலைமையாசிரியர் அறையிலிருந்து விடைத்தாட்களை பெற்றுக்கொண்டு ஆசிரியர் ஓய்வறையை நோக்கி நடந்துகொண்டிருந்தேன் .சட்டென ஒரு குரல் குட் ஈவினிங் மேம் என்று கூறி என்னை நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தேன் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போனேன். மஞ்சள் தடவிய முகத்துடன் கழுத்தில் புது தாலி மின்ன கால்களில் மெட்டி ஒலிக்க என்னை நோக்கி வந்தாள் மகாலட்சுகி. கண்களில் அதுவரை தெரிந்த துறுதுறுப்பும் ஆவலும் தொலைந்துபோய் அமைதி குடிகொண்டிருந்தது. நான் என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க, அவளே பேசினாள்.
எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி மேம் ! மாப்பிள்ளை என் மாமாதான். என்னை அன்பாக பார்த்துக்கறார். என்றாள் வெகுளியாக. முகத்தில் அத்தனை சந்தோஷம், பெருமிதம் !
ஆனால் அவளின் மகிழ்ச்சி என் முகத்தில் பிரதிபலிக்கவில்லை. மாறாக கோபமாய் வந்தது. என்ன பெற்றோர்கள் இவர்கள்! தங்கள் பொறுப்பை விரைவில் தட்டிக்கழித்து விட வேண்டும் என்பதில் இருக்கும் துடிப்பு இவர்களுக்கு தங்கள் குழந்தைகள் ஆயுள் முழுவதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதில் இல்லையே !இந்த பிள்ளைகளும் தான் கொஞ்சம் பெற்றவர்களிடம் பேசினால் என்ன !
எனக்கு நேற்று சந்தித்த வேல்விழியின் முகம் நினைவில் நிழலாடியது .1982 வில் தன் எட்டாம் வகுப்பை பாதியிலேயே விட்டுவிட்டு திருமணம் செய்திருந்தவர் தன்னுடைய பிறந்த தேதிக்காக மாற்று சான்றிதழ் வேண்டி வந்திருந்தார் .40 வயதுக்கு மேல் இருக்கும் அவர் தற்போது மாற்று சான்றிதழ் வாங்கி என்ன செய்யப்போகிறார் என்ற ஆர்வத்தில் அவரை விசாரித்தேன் .கட்டிய கணவன் தன்னை மணக்கவே இல்லை என்று கூறி வீட்டைவிட்டு துரத்திவிட்டார். அவர் ராணுவத்தில் பணிபுரிந்து மிலிட்டரி பென்ஷன் வாங்குகிறார். அதில் குழந்தைகளுக்கு பங்கு வேண்டும்.அதற்காக என் மாற்று சான்றிதழ் தேவைப் படுகிறது என்றார் வேதனையாக இருந்தது .
பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கின்றனர். திருமணம் என்ற ஒற்றை வார்த்தையில் எல்லாவற்றையும் மறக்க தயாராய்!எதிர்க்காலத்தைப் பற்றிய சிறு அச்சமோ பயமோ இன்றி கணவன் பின் செல்கின்றனர். நம்பியவன் கைவிடும்போதுதான் தன்னை சுற்றியுள்ள உலகத்தை கவனிக்கின்றனர். வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்று தாமதமாகவே உணரத்தொடங்குகின்றனர். கண்ணெதிரே எத்தனை பேரை பார்த்தாலும் இது போன்றவர்கள் உணர்வதில்லை. எனக்கு படிப்பு தான் முக்கியம். அதை முடித்துவிட்டு மனம் செய்துக்கொள்கிறேன் என்று எப்போது ஒரு பெண் சொல்கிறாளோ அப்போது தான் இதுபோன்ற துயரங்கள் அரங்கேறுவதை தடுக்க முடியும்.
மகாலட்சுமி இதுபோன்ற பெண்களில் ஒருத்தியாய் மாறாமல் இருக்க மனதுக்குள் பிராத்தித்து அவளிடமிருந்து விடைபெற்றேன் நான்!
D.விஜய லெட்சுமி, அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவர். அவர் தன்னிடம் படித்த மறக்க முடியாத மாணவர்களைப் பற்றி எழுதி வருகிறார்.
No comments:
Post a Comment