தமிழகத்தில் மாதிரி பள்ளித் திட்டத்தை தடுக்க ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில் மாதிரி பள்ளித் திட்டத்தை தடுக்க வேண்டும் என பா.ம.க.
நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாதிரி பள்ளி திட்டத்தை அனுமதிப்பது கல்வியை
தனியாருக்கு தாரை வார்க்கும் விதமாக அமைந்து விடும். ஏற்கெனவே, அனைத்து
குழந்தைகளுக்கும் தரமான, சுமையில்லாத பள்ளிக்கல்வியை இலவசமாக வழங்க வேண்டிய மாநில
அரசு கடமையில் இருந்து தவறி கல்வியில் தனியார் பள்ளிகளை அனுமதித்ததன் விளைவு தான்
இன்று கல்வி கடைச் சரக்காகி இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கல்வியில்
பின்தங்கிய பகுதி அல்லாத ஒன்றியங்களில் தலா ஒரு தேசிய மாதிரி பள்ளியை தொடங்க மத்திய
அரசு முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ள 2500 பள்ளிகளில் 356
பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு மற்றும்
கல்வித்தரத்துடன் கூடிய இத்தகைய பள்ளிகள் தொடங்கப்பட வேண்டியது வரவேற்கத்தக்கது
தான். ஆனால், இந்த பள்ளிகளை தனியார் துறையினருடன் இணைந்து தொடங்க மத்திய அரசு
முடிவு செய்திருப்பது தான் மிகுந்த கவலை அளிக்கிறது.
அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சுமையில்லாத பள்ளிக்கல்வியை இலவசமாக
வழங்க வேண்டியது அரசுகளின் கடமை ஆகும். இக்கடமையிலிருந்து தவறிய அரசுகள் தனியார்
பள்ளிகளை அனுமதித்ததன் விளைவு தான் கல்வி இன்று கடைச் சரக்காகி விட்டது. இந்த
நிலையில் தனியார் பங்களிப்புடன் பள்ளிகளைத் தொடங்குவது மோசமான விளைவுகளை
ஏற்படுத்தும்.
தேசிய மாதிரி பள்ளிகளைத் தொடங்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
வகுத்துள்ள விதிமுறைகள் அனைத்தும் தனியாருக்கு சாதகமாகவே உள்ளன.
இதற்கெல்லாம் மேலாக, இப்பள்ளிகளுக்கு தேவையான நிலம் வழங்குதல்,
பத்தாண்டுகளுக்குப் பிறகு விருப்பமிருந்தால் நிதி உதவி வழங்குதல் ஆகியவற்றைத் தவிர
இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை.
இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல் என்பது மட்டுமின்றி,
மாநில அரசின் அதிகாரத்தையே பறிக்கும் செயலாகும். இத்திட்டம் தொடர்பான கருத்துக்களை
மாநில அரசுகள் தெரிவிப்பதற்கான அவகாசம் முடிவடைந்துவிட்ட நிலையில் தமிழக அரசு
எத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது தெரியவில்லை.
மாநிலங்களின் அதிகாரத்தில் குறுக்கிடும் வகையிலும், கல்வியை தனியார்
மயமாக்கும் வகையிலும் அமைந்துள்ள இத்திட்டத்தை தமிழ்நாட்டில் மாநில அரசு
அனுமதிக்கக்கூடாது. இதற்கு முன் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் இத்தகைய மாதிரி
பள்ளிகளை மத்திய அரசு அறிவித்தபோது, தனியாரை அனுமதிக்காமல் தமிழக அரசே அந்த
பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறது.
அதேபோல் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 356 மாதிரி பள்ளிகளையும் தமிழக
அரசே தொடங்கி நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment