இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2 அரசுப் பள்ளிகளில் மேகவழிக்கல்வி முறை (கிளவுட் கம்ப்யூட்டிங்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேகவழிக்கல்வி முறை

தமிழ்நாட்டில் 2 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேகவழிக் கல்வி முறை திட்டத்தை செயல்படுத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு அதற்காக லேர்னிங் லிங் பவுண்டேஷன் என்ற நிறுவனம் மற்றும் டெல் கணினி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
2 அரசு பள்ளிகளில் அறிமுகம்
இதைத்தொடர்ந்து, சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மேற்கண்ட இரு நிறுவனங்களும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 11 மடிக்கணினிகள், 13 கையடக்க கணினிகள் ஆகியவற்றை இரு அரசு பள்ளிகளுக்கு வழங்க முன்வந்தன. அதுமட்டுமல்லாமல் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு தொழில்நுட்ப உதவியாளரையும் பணியமர்த்தின.
இந்தியாவில் முதல்முறை
இந்த நிலையில், மேகவழிக்கல்வி முறையை சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மடிக்கணினிகளையும், கையடக்க கணினிகளையும், சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
பள்ளியில் மேகவழிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.சபீதா, பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment