அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான நலத்திட்ட பணிகளை கவனிப்பதிலேயே நேரத்தை செலவிடுவதால், பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள்.
பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகம், சீருடை, பஸ் பாஸ், சைக்கிள், லேப்-டாப், காலணி, நோட்டு, புத்தகப்பை, ஜியாமென்டரி பாக்ஸ், அட்லஸ், கலர் பென்சில், கிரையான் என 14 விதமான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கான நலத்தி ட்டங்களை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களுக்கு தனித்தனி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. லேப்-டாப் என்று எடுத்து க்கொண்டால் அந்த பொறுப்பு வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு எத்தனை லேப்-டாப் வந்துள்ளது? எத்தனை பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது? யார் யாருக்கு கிடைக்கவில்லை? என அனைத்து கணக்கு வழக்குகளையும் பார்க்க வேண்டும். இதேநிலைதான் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும்.
பாதிக்கப்படும் படிப்பு
மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நலத்திட்டங்களுக்கான கணக்குகளைப் பார்த்து பராமரிக்கவே பெரும்பாலான நேரம் சென்றுவிடுகிறது. கணக்கில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் அதிலேயே அவர்கள் மண்டையைப் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டியதுதான்.
நலத்திட்ட பணிகளை கண்காணிப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு ஆசிரியர்கள் கடும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களால் சரியாக பாடம் நடத்த முடிவதில்லை.
இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்ச்சி குறைந்தால் அதற்கும் ஆசிரியர்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
காலணிக்கு அளவு எடுக்கும் அவலம்
ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலணி வழங்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பாத அளவை எடுக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்காகவா ஆசிரியர் பயிற்சியும், பி.எட். படிப்பும் படித்துவிட்டு வந்தோம் என்று நொந்துகொள்கிறார்கள் ஆசிரி யர்கள் .
அனைத்து நலத்திட்ட பணிகள் தொடர்பான கணக்குகளை ஒருங்கிணைத்து கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டிய தலைமை ஆசிரியர்களின் நிலை இன்னும் பரிதாபம். அவர்களால் பள்ளி நிர்வாக பணிகளை சரிவர கவனிக்க முடிவதில்லை.
“கல்வி அதிகாரிகள் அனுப்பும் இ-மெயில்களுக்கு பதில் அனுப்பி அனுப்பியே நேரம் எல்லாம் போய்விடுகிறது. பள்ளி நிர்வாகத்தை எப்படி கண்காணிக்க முடியும்” என்று சென்னையில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் வேதனையுடன் கூறினார்.
“மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க, அரசு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
நலத்திட்டப் பணிகளை கவனிக்க ஒவ்வொரு பள்ளியிலும் தனியாக ஒரு அதிகாரியை நியமித்துவிட்டால், ஆசிரியர்கள் நிம்மதியாக பாடம் நடத்துவார்கள்” என்று இந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகன்.
No comments:
Post a Comment