அரசுத் தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வியின் துவக்க ஆண்டுகளை ஆங்கிலம் வழியாகத் தொடங்குகிறார்கள். அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் குழந்தைகளுக்கான கல்வியில் முன்பை விட அதிகமாக கவனம் செலுத்துவதாகத் தோன்றினாலும், ஆங்கிலக் கல்வி ஒன்றுதான் அந்தத் தரத்தைக் கொடுக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. விளைவு, தனியார் நடத்தும் ஆங்கிலப் பள்ளிகளை நோக்கி அனைவரும் படையெடுத்தனர். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைத் தடுக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளிலேயே பயிற்று மொழியை, ஆங்கிலமாக மாற்ற அரசு முடிவெடுத்தது. இதற்கு தமிழ் மீதும், தமிழ் வழிக் கல்வி மீதும் ஆர்வமும் அக்கறையும் கொண்ட கல்வியாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்களிடமிருந்து எதிர்ப்பும் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை தொடக்கப்பள்ளியில் இந்த ஆண்டு, முதலாம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வி வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவல் , கடந்த ஞாயிற்றுக் கிழமை 'தி இந்து' இதழில் வெளியான செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பதற்றத்துடன் நம்மைத் தொடர்புகொண்டார், தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான தங்கர்பச்சான். உடனே அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.
தமிழ்வழிக் கல்வி வகுப்பில் மாணவர்கள் சேரவில்லை என்ற செய்தி குறித்து இத்தனை பதற்றம் ஏன்?
வெளிநாடு சென்றிருந்த நான் சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினேன். கடலூர் மாவட்டப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற செய்தியைப் படித்தவுடன் மிக வருத்தமாக இருந்தது. புகைப்படத்தில் பத்திரக்கோட்டை தொடக்கப்பள்ளி என்பதை பாத்தபோது மேலும் அதிர்ந்தேன். காரணம் அது நான் படித்த பள்ளி. அந்தப் பள்ளியின் அரசமர நிழலில் 'அ' என்ற எழுத்தை எழுதி எனது கல்வியைத் தொடங்கினேன். ஆலமர இலைகளைத் தைத்து அதில் மதிய உணவுடன் கல்வியையும் சேர்த்து உண்டு வளர்ந்தவன் நான். அந்த சாதாரணப் பள்ளியில் பயின்று தான் நான் ஒரு இயக்குனராக உயர்ந்துள்ளேன். எனது முதல் படமான 'அழகி', சமூகத்தில் முன்னேறியுள்ள பலர் தாங்கள் படித்த பள்ளிகள் குறித்த நினைவுகளையும் அவற்றை தரமுயர்த்த தங்களாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்த 'பள்ளிக்கூடம்' என்ற படத்தை இயக்க எனக்கு ஆதாரமாக இருந்தது அந்தப் பள்ளிதான். இன்றுள்ள சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் அனைவரும் இதுபோன்ற பள்ளிகளில் இருந்து வந்தவர்கள் தான். மொத்தமே 3,000 பேர் இருக்கும் பத்திரக்கோட்டையில், ஒருவர் கூட தங்கள் குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லையே என்பது தான் என் பதற்றதுக்குக் காரணம்.
காரணம் ஒரு மொழியை ஒருவனிடமிருந்து பிடுங்குவது என்பது அவனது சிந்தனையைப் பிடுங்குவதற்கு சமம். மானம் என்பது ஆடையுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. ஆடையை இழந்தால் கூட, கந்தல் துணியை வைத்து மானத்தை மறைத்துக் கொள்ளலாம். மொழியை இழந்தால் எதைக் கொண்டும் அதை சரி செய்ய முடியாது. இப்போது தமிழர்கள் மானமிழந்து நிற்கிறார்கள்.தமிழ் இனமே இனத்தையே வேரறுந்துவிட்டது . தமிழர்களை, அவர்களது குழந்தைகளைப் பற்றி அக்கறை இல்லாமல் போய்விட்டது. ஏற்கனவே நாம் சிந்திக்க மறந்துவிட்டோம். தேர்தல் அரசியல் என்ற சூதாட்டத்தில் தொடர்ந்து தோற்றுக்கொண்டிருப்பது மக்கள்தானே. இப்போது நாம் யாரிடம் சென்று முறையிடப் போகிறோம்?
உயர் வகுப்புகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களைப் படிப்பதிலும், ஆங்கிலம் வழியாக நடத்தப்படும் பாடங்களுடன் ஒன்றுவதிலும் தமிழ் மாணவர்களுக்கு சிக்கல் உள்ளது. இளம் பருவத்திலேயே ஆங்கில அறிவுடன் கல்வியைத் தொடங்கினால் மேல்படிப்பில் உதவிகரமாக இருக்கும் அல்லவா?
நான் பல நாடுகளுக்குச் சென்று வந்தவன். கிராமத்தில் நான் வாழ்ந்த என் வாழ்க்கையும் நான் கற்றக் கல்வியும் தான் என்னை உருவாக்கியவை. நமது சிந்தனை தாய்மொழியில் இருந்தால் தான் அது செழுமையானதாக இருக்கும். மொழி மூலம் தான் அது கிடைக்கும். இப்போது அந்த ஊற்றுக் கண்ணே அடைக்கப்பட்டுவிட்டது. உலகின் பல நாடுகள் தாய் மொழியைப் பாதுகாக்கின்றன. சீனாவைப் பாருங்கள். அத்தனை பெரிய நாடு. அங்கு தாய்மொழிக் கல்வி இல்லையா? ஆங்கிலேயர்கள் வசிக்கும் பிரிட்டனுக்கு அருகில் தான் மற்ற ஐரோப்பிய நாடுகளும் உள்ளன. அந்த நாட்டு மக்கள் பேசும் மொழியில் ஆங்கிலக் கலப்பே இருக்காது. இவ்வளவு ஏன்? உலக சினிமாக்கள் பார்க்கிறோமே. பிரெஞ்ச், ஜப்பான், கொரியா என்று எத்தனை மொழிப் படங்கள் பார்க்கிறோம். இரண்டரை மணி நேரம் ஓடும் படங்களில் ஒரு காட்சியில் கூட அவர்கள் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதே இல்லை. அதை அவர்கள் திட்டமிட்டும் செய்வதில்லை. இயல்பாக வருவது அது. நம் படங்களைப் பாருங்கள், தமிழ் சொற்களைத் தேடவேண்டும். தமிழில் தலைப்பு வைக்கவே போராட்டமாக இருக்கிறதே! நாமெல்லாம் திருவள்ளுவரைக் கொண்டாடவே அருகதையற்றவர்கள். ஒருபக்கம் அவரைக் கொண்டாடிக்கொண்டே மறுபக்கம் தமிழ் தொடர்பான அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம். மொழியைப் பிடுங்குவது சிந்தனையைப் பிடுங்குவதற்குச் சமம். மொழியைக் கடன் வாங்கியா சிந்தனையை வளர்க்க முடியும்? சொந்த மொழியில் சிந்திப்பவனுக்கும் அவனுக்கும் வேறுபாடு இல்லையா? 11-ம் வகுப்பு வரை வேறு எந்த மொழிப் பாடமும் தேவை இல்லை. கிராமப்புற மாணவர்களில் பாதிபேர் ஆங்கில பாடத்தில் தானே தோல்வியடைகிறார்கள்?
குழந்தைகள் எந்த மொழியையும் கற்கும் திறன் பெற்றவர்கள். தொடக்கத்திலேயே அவர்கள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வது அவர்களின் உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் இல்லையா?
சரி நான் கேட்கிறேன். மேற்படிப்புப் படித்து நீங்கள் எல்லோரும் என்ன செய்துவிட்டீர்கள்? இங்கு குடிக்க தண்ணீர் இல்லை. பாட்டிலில் அல்லவா தண்ணீர் விற்கப்படுகிறது? இந்த நிலை மாற நாம் என்ன செய்துவிட்டோம். மேல்படிப்பு படித்ததால் நீங்கள் அடைந்த பயன் என்ன? நம்மிடம் நம் தொழில் இருக்கிறதா? அறிவியல், மருத்துவம் இருக்கிறதா? வாழ்க்கை இருக்கிறதா? முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றவற்றில் எதை நாம் பாதுகாத்து வைத்திருக்கிறோம்? மேல்படிப்பை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? பெரியாரும் காமராஜரும் வெறும் மூன்றாம் வகுப்பு தான் படித்தார்கள். அவர்களின் சிந்தனைக்கு இணையாக யார் இருக்கிறார்கள்? முளையிலேயே விதை வெளிவராமல் கிள்ளிப் போடுவது தானே இங்கே பிரச்சினை? என் கோரிக்கை இது தான். ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்றுக்கொடுங்கள். உயர்கல்விக்கு நீங்கள் ஆங்கிலம் பயன்படுத்துங்கள். தொடக்கத்தில் இருந்தே ஆங்கிலம் தான் என்று முடிவு செய்தால், சட்டமன்றக் கூட்டத் தொடரில், தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி ஒரு தீர்மானம் கொண்டுவாருங்கள் . தமிழில் ஒருவன் பேசினால் தானே அது தமிழ்நாடு? தமிழர்கள் ஒரு நிமிடம் வேறுமொழி கலக்காமல் தொடர்ந்து தமிழில் பேசவே திணறுகிறார்கள். அப்புறம் எதற்கு தமிழ்நாடு என்ற பெயர்?
தங்கள் குழந்தைகள் ஆங்கிலக் கல்வி பெறவேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும் பெற்றோர்களை, அரசுப் பள்ளிகளை நோக்கி திரும்பச் செய்வது தான், அரசின் இந்த புதிய உத்தரவின் நோக்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறதே?
இது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஆங்கிலப் பாடத்திட்டத்தை வைத்து மக்களை ஈர்க்கும் தனியார் பள்ளிகளும், இனி தமிழில் தான் பாடம் நடத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கினால் இந்தப் பிரச்சினையே தீர்ந்துவிடுமே? தனியார் பள்ளிகளுக்குப் போட்டியாக அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலப்படம் என்று கொண்டு வருவது எப்படி சரியான தீர்வாகும் என்று தெரியவில்லை. பள்ளிகளுக்கு அருகிலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. குடித்துவிட்டு தள்ளாடி வருபவர்களை காண நேரும் இளம் மாணவர்கள் மனதில் பாதிப்பு ஏற்படாதா? முதலில் இதுபோன்ற விஷயங்களைத் தான் சரிசெய்ய வேண்டும். இந்தியர்கள் பிச்சை எடுக்கவில்லை. தெளிவுடன் இருந்திருக்கிறார்கள். ஆங்கிலக் கல்வி கொடுத்து தான் அவர்களை ஈர்க்க வேண்டும் என்று மெக்காலே பிரபு எழுதி வைத்திருக்கிறார். நான் இன்று இருக்கும் அரசை மட்டும் குறை சொல்லவில்லை. கடந்த 45 ஆண்டுகளாக நம் மண்ணை ஆண்ட கட்சிகள் தான் இவற்றுக்குப் பொறுப்பு. அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு தாய்மொழி குறித்த அக்கறை மற்ற தலைவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற நிலை இல்லை. மேல்படிப்பு படித்தவர்கள் அனைவரையும் நான் குறை சொல்லவில்லை. என்றாலும் கல்வியறிவு அதிகம் உள்ள சமூகம் என்று சொல்லப்படுபவர்களால் தான் இயற்கை வளங்கள் அழிந்தன. இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தவர்களிடம் போய், படித்தவர்கள் உரங்களை பயன்படுத்த அறிவுரை சொன்னார்கள். இப்போது நிலைமை என்ன? உரங்கள் என்ற பெயரில் நிலங்கள் அனைத்தும் விஷமேறி கிடக்கும் நேரத்தில் அதே விவசாயியிடம் போய் ''இயற்கை விவசாயம் செய்யுங்கள் , ஆர்கானிக் முறையில் பயிர் செய்யுங்கள்" என்று பாடம் எடுக்கிறார்கள். இதைத் தான் நான் இப்போதும் சொல்கிறேன். இப்போது ஆங்கிலக் கல்வி வேண்டும் என்று சொல்பவர்கள் இன்னும் சில ஆண்டுகளில், எல்லாம் சீரழிந்த பிறகு, தமிழில் தான் கல்வி வேண்டும் என்று சொல்வார்கள். அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்.
இதுகுறித்து கல்வியாளர்களிடம் பேசியிருக்கிறீர்களா?
நான் மிகவும் மதிக்கும் அறிஞர் அருளியார், கி.த. பச்சையப்பன் போன்ற பலரிடம் பேசியிருக்கிறேன். பொதுவாக கல்வியாளர்கள், ஆரம்பக் கல்வியில் ஆங்கிலம் திணிக்கப் படுவதை ஏற்கவில்லை. தமிழ் வழியில் படித்து அப்துல் கலாம் முதல் மயில்சாமி அண்ணாத்துரை வரை எவ்வளவோ உதாரணங்களை என்னால் காட்டமுடியும். ஏனென்றால் தாய்மொழியில் கல்வி பயில்பவர்களால் தான் சிறப்பாக சிந்திக்க முடியும். ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்களிடம் முதலில் பொது அறிவு இருக்குமா என்று சோதித்துப் பாருங்கள். படைப்புத்திறனோ, மற்ற திறன்களோ சுத்தமாக இவர்களிடம் இல்லை என்ற உண்மை உங்களுக்குப் புரியும்.
இதற்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கவில்லை என்கிறீர்களா?
அப்படித்தான் சொல்ல வேண்டும். இன்று இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது, இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று போராடும் அமைப்புகள் தாய் மொழிக்கு எதிரான அரசின் முடிவை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு எதிராக மக்கள் நேரடியாகப் போராடாததைக் குறிப்பிட விரும்புகிறேன். பிரபாகரன் இறந்த செய்தி வெளியான அன்று தமிழகத்தில் மக்கள் யாரும் போராட்டத்தில் இறங்கவில்லை. தொலைகாட்சி தொடர்களில் தான் அவர்கள் மூழ்கியிருந்தனர். அமைப்புகளும், கட்சிகளும் தான் போராடின. காரணம், தமிழ் என்ற உணர்வை மக்களிடம் விதைக்கத் தவறிவிட்டோம். அப்படி நடந்திருந்தால் மக்களே நேரடியாக போராடியிருப்பார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் நம் மொழி மீது நமக்கு அக்கறை இல்லை என்பது தான். இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அரசு திட்டமிட்டோ அல்லது அறியாமலோ செய்யும் இந்தத் தவறால் நம் வருங்காலத் தலைமுறையினர் பாதிப்படைவது மட்டும் நிச்சயம். இதுபோன்ற கொள்கை முடிவுகளை எடுக்கும் உயரதிகாரிகள் தமிழர்களாக இருப்பார்களா என்ற சந்தேகம்கூட உள்ளது. நம் அரசு திருவள்ளுவரின் ஆட்சி குறித்து எழுதிய அதிகாரத்தை முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஆங்கில கல்வி முறை குறித்த என் கருத்து கோபவசத்தால் எழுந்ததல்ல, தமிழினத்தை அடகுவைக்கும் இந்தப் போக்கு மாற நாம் அனைவருமே குரல்கொடுக்கவேண்டும். சரியான முடிவை எடுக்க அரசுக்கு நாம் துணை நிற்க வேண்டும்.
தங்கர்பச்சானின் இந்தக் குமுறல் ஒற்றைக் குரலல்ல. பலர் மனதில் உறைந்திருக்கும் விஷயம் தான். தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதால், தமிழ் மீதான ஆர்வம் இளம் தலைமுறையினருக்கு இல்லாமல் போய்விடும் என்று கருதுபவர்களும், ஆங்கிலம் கற்பதால் பல நன்மைகள் உண்டு என்ற கருத்து உள்ளவர்களும் நம்மிடையே உள்ளனர். வாசகர்கள் இந்த விஷயம் மீதான தங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்பலாம். இதை ஒரு விவாதமாகத் தொடர 'தி இந்து' தயாராக உள்ளது.
No comments:
Post a Comment