செப்டம்பர் 2-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
சென்னை, ஆக.18-
தலைமை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்காத ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் மீது சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் வரும் செப்டம்பர் 2-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சேலத்தில் நடத்தும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் செல்வம். இவர், 31-10-2009 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இதற்கிடையில், அவர் மீது சில குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர் 30-10-2009 அன்று ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செல்வம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தலைமை ஆசிரியர் செல்வம் மீதான குற்றச்சாட்டை 3 மாதங்களுக்குள் விசாரித்து, இறுதி உத்தரவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குனர் பிறப்பிக்க வேண்டும்’ என்று 14-7-2010 அன்று உத்தரவிட்டார்.
விசாரிக்கவில்லை
ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் செல்வம் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கவில்லை. இதையடுத்து, தன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்யவும், தன்னை பணியில் இருந்து ஓய்வுபெற அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் ஐகோர்ட்டில் செல்வம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரரான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
நேரில் ஆஜராக உத்தரவு
இதையடுத்து செல்வம் மீதான குற்றச்சாட்டை விசாரித்து, 2 வாரங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், அந்த இறுதி உத்தரவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அரிபரந்தாமன் கடந்த ஜூலை 10-ந் தேதி உத்தரவிட்டார்.
ஆனால், 2 வாரங்கள் முடிந்து பல நாட்களாகியும் விசாரணை நடத்தவில்லை. இதையடுத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குனர் மீது, நீதிபதி அரிபரந்தாமன், தாமாக முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார். ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அவமதிக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் வரும் செப்டம்பர் 2-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment