கன்னியாகுமரி மாவட்டம் கீழ் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் சூசைமகேஷ். இவர் அங்கிருந்த செயிண்ட் மேரீஸ் தொடக்கப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியராக 2005–ம் ஆண்டில் வேலையில் சேர்ந்தார்.
இந்த நிலையில் 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தப் பள்ளி மூடப்பட்டது. எனவே சூசைமகேஷை செண்பகராமன்பட்டத்துறையில் உள்ள பள்ளியில் சேர்க்கும்படி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டார். ஆனால் அந்தப்பள்ளியில் காலியிடம் இல்லை என்பதால், அங்கு அவரை அந்தப்பள்ளி நிர்வாகம் சேர்க்க மறுத்துவிட்டது.
எனவே அவரை காலியிடம் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிக்கு, கன்னியாகுமரி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் ஐகோர்ட்டில் சூசைமகேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பள்ளிக்கூடம் மூடப்பட் டதில் இருந்து இதுவரை எனக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் தரப்படவில்லை. அவற்றை தருவதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். ஆசிரியர் சூசைமகேசுக்கு இன்னும் 4 வாரங்களுக்குள் பாக்கிச்சம்பளம் மற்றும் சலுகை ஆகியவற்றை வழங்க வேண்டும். அவர் அடுத்த பள்ளியில் வேலைக்கு சேரும்வரை மாதாமாதம் அவருக்குள்ள சம்பளத்தை பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment