By நாகப்பட்டினம்,
First Published : 09 August 2013 03:55 AM IST
தமிழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் செப். 25 முதல் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பர் என்றார் ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய பொதுச் செயலர் சு. ஈஸ்வரன்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடர் மறியல் போராட்ட ஆயத்தக் கூட்டத்தில் அவர் பேசியது :
தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி, கடந்த 2006 முதல் ஊதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக முதல்வர் ஊதியக் குழு பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.
இதுகுறித்த அறிவிப்பு தமிழக அரசின் நிதி அறிக்கையில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ஆசிரியர்களுக்கு இதுவரை ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, உடனடியாக ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப். 25-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஊர்வலம், தொடர் மறியல் போராட்டத்தில் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பர்.
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தும் ஆசிரியர்களை வீதியில் இறங்கி போராடச் செய்யும் நிலையை ஏற்படுத்தாமல், மறியலுக்கு முன்பாகவே தீர்வு காண அரசு முன் வர வேண்டும் என்றார் சு. ஈஸ்வரன்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் இரா. முத்துகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், பொதுக் குழு உறுப்பினர்கள் சி. பிரபா, தங்க. மோகன், பி. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலர் ந. ரெங்கராஜன், மாநிலத் தலைவர் காமராஜ், பொருளாளர் அ. சேவியர், திருவாரூர் மாவட்டச் செயலர் ந. மதிவாணன், முன்னாள் மாநிலத் தலைவர் வீ.மா. பெரியசாமி ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலர் மு. லெட்சுமிநாராயணன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ப. ஜோதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment