ஆசிரியர் தேர்வில் சமூகநீதிக்கு சவக்குழி!
|
Posted Date : 07:07 (05/07/2013)Last updated : 07:07 (05/07/2013)
ஆசிரியர்கள் வாழ்க்கையில் பல தப்புக் கணக்குகளைப் போட்டு தமிழக அரசு விளையாடுவதாகக் கொதிக்கிறார்கள் கல்வியாளர்கள். தமிழக அரசு கடந்தமுறை நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைய சலசலப்புகளையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
ஆசிரியர் தேர்வு வாரியம் 2012-ம் ஆண்டு ஜூலை 12-ல் நடத்திய தகுதித் தேர்வில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 ஆசிரியர்கள் தேர்வு எழுதி, 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றது, அதிர்ச்சி அலையை எழுப்பியது. இரண்டாவது முறையாக அக்டோபர் மாதத்தில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றனர். அவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படுவதில் பல குழப்பங்கள் தொடர்வதுதான் வேதனையின் உச்சம்.
இந்த நிலையில் மூன்றாம் முறையாக நடத்தப்படும் தேர்வை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்ப்பதால், 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதுகுறித்து, களப்பணியில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸிடம் பேசினோம். ''தமிழ்நாட்டில்
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியக் கல்விக் கழக நெறிமுறைகளின் 9-ம் விதிமுறைப்படி ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். 'நலிந்த பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து நிர்ணயிக்கலாம்’ என்று தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் சொல்லியும் தமிழக அரசு மட்டும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இது, இடஒதுக்கீட்டுக்கு எதிரானது.
ஆந்திராவில் முற்பட்ட வகுப்பினருக்கு 60 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம், தாழ்த்தப்பட்டவர்கள் - பழங்குடியினர் - மாற்றுத் திறனாளிகளுக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்ற இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுகின்றனர். தமிழகத்திலும் இதைப் பின்பற்றியிருந்தால், சுமார் 3 லட்சம் பேர் தகுதி பெற்றிருப்பார்கள். 36 ஆயிரம் காலிப் பணி இடங்களும் நிரப்பப்பட்டிருக்கும். அதாவது 19 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட்டது போக, கூடுதலாக 17 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். வேலை கிடைத்த ஆசிரியர்கள் போக, மீதமுள்ளோர் ஆசிரியப் பணிக்குத் தகுதி பெற்றவர்களாக ஏற்று, அடுத்து காலிப் பணியிடங்கள் வரும்போதெல்லாம் அவர்களைப் பணியில் சேர்த்துக்கொள்ளலாம். சத்தீஸ்கர், மணிப்பூர், ஒடிசா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், பீகார், அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களில் 20 சதவிகிதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இனியும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இந்த விவகாரத்தை நீதிமன்றம் தன்னிச்சையாகக் கவனத்தில் ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வெறும் இடஒதுக்கீடு மோசடி மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பும்கூட. ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் சௌத்ரியை சஸ்பெண்ட் செய்து விசாரிக்க வேண்டும்'' என்றார்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் பி.எட். படித்தவர்களுக்கும் ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது பட்டப் படிப்பு, தகுதித் தேர்வு ஆகியவற்றை சேர்த்து வெயிட்டேஜ் மதிப்பெண் 100 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ப்ளஸ் டூ-வில் 50 சதவிகிதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு பூஜ்யம் மதிப்பெண்தான் வெயிட்டேஜ் ஆக நிர்ணயிக்கப்படுகிறது. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கும் பல பள்ளிகளில் ஆசிரியர், நூலகம், கட்டமைப்பு வசதிகள் இருந்திருக்காது. அதனால் ப்ளஸ் டூ-வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றாலும் அதற்குப் பிறகான அறிவுத் தேடலில் ஆசிரியப் பயிற்சியிலோ, பட்டப்படிப்பிலோ நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பர். வெயிட்டேஜ் முறையைப் பின்பற்றினால் சமூகரீதியாகப் பின்தங் கியவர்கள் ஆசிரியர்களாகத் தேர்வுபெற முடியாத சூழல் உருவாகும்'' என்கிறார். ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் சௌத்ரி, ''அரசு உத்தரவைப் பின்பற்றுகிறோம். இதற்குமேல் கருத்துத் தெரிவிக்க இயலாது'' என்று முடித்துக்கொண்டார்.ஆசிரியர்களுக்கு சட்டப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
- க.நாகப்பன், நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: வ.விஷ்ணு
|
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Sunday, July 07, 2013
TET RESERVATION PRO ARTICLE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment