ஆசிரியர் தகுதி தேர்விலும் இடஒதுக்கீட்டை அமலாக்குக! சென்னை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்!
ஆசிரியர் தகுதி தேர்விலும், அதன் அடிப்படையிலான ஆசிரியர் பணி நியமனத்திலும் இடஒதுக்கீட்டை அமலாக்காத தமிழக அரசை கண்டித்து சனிக்கிழமையன்று (06.07.2013) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த தேசிய ஆசிரியர் கல்வி வாரியம் வழங்கிய வழிகாட்டுதலில் மாநில அரசுகள் தங்களின் இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்றவாறு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வை வழங்கலாம் என்று கூறி உள்ளது.
ஆகவே, தமிழக அரசு அரசாணை 181ஐ திருத்தி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மதிப்பெண் தளர்வை ஒவ்வொரு இட ஒதுக்கீடு பிரிவினருக்கும் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.
தேசிய ஆசிரியர் கல்வி வாரியம் அறிவித்துள்ளபடி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதியாக அறிவிக்க வேண்டும். கணினி அறிவியல் பட்டத்துடன் கல்வியியல் பட்டம் பெற்றவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும். வணிகவியல் பட்டத்தையும், கல்வியியலுடன் பிஏ, பிஎஸ்சி பட்டம் பெற்றவர்களையும் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
2013 ஆகஸ்ட் 17,18 தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்.
அரசாணை 252ன் படி பட்டம், பட்டயம் மற்றும் +2 வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் வழங்கும் முறையை கைவிட வேண்டும். அரசணை 252ஐ ரத்து செய்ய வேண்டும்.
பிடி, எஸ்ஜிடி ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு அடிப்படையில் இடஒதுக்கீடு பிரிவினருக்கேற்ப தகுதி மதிப்பெண் வழங்குக வேண்டும், டிசம்பர் 2012ல் பிடி, எஸ்ஜிடி ஆசிரியர் பணி நியமனத்தின் போது ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆள் எடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தின. அதன் ஒரு பகுதியாக சென்னையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.சிவா தலைமை தாங்கினர். வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்டச் செயலாளர்கள் விஜயகுமார் (வடசென்னை), எம்.தாமு (தென்சென்னை), தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் த.நீதிராஜன் மற்றும் ஏ.வி.சண்முகம் (தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம்), சி.முருகேசன் (தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்), பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப்பள்ளிக்கான மாநில மேடை) உள்ளிட்டோர் பேசினர்.
No comments:
Post a Comment