ஐந்தாம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர்: கல்வித்தரம் பாதிப்பதாக மக்கள் புகார்ஜூலை 15,2013,11:11 IST
வேதாரண்யம்: "பழமையான தொடக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையுள்ள, 26 மாணவ, மாணவியருக்கு ஒரே ஆசிரியர் பாடம் எடுப்பதால், கல்வித்தரம் பாதிக்கிறது. அதனால், போதிய ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனத்தில் கொத்தங்காடு பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த, 1961ம் ஆண்டு ஆக., 11ம் தேதி துவங்கப்பட்டது. இப்பள்ளியில் துவக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் படித்து வந்தனர். பள்ளியில், 1ம் வகுப்பில் ஒருவரும், 2ம் வகுப்பில், 5 பேரும், மூன்றாம் வகுப்பில், 10 பேரும், 4ம் வகுப்பில், 6 பேரும், 5ம் வகுப்பில், 4 பேரும் என மொத்தம், 26 பேர் மட்டுமே படிக்கின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் தலைமையாசிரியர், உதவி ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர் என, ஐந்து பேர் பணியாற்றி வந்தனர். ஆசிரியர் சிங்காரவேலு மீது போலீஸ் வழக்கு இருந்ததால், கடந்த மார்ச் மாதம், பணிநீக்கம் செய்யப்பட்டார். தலைமையாசிரியராக பணியாற்றிய தனலட்சுமி கடந்தாண்டு ஜூன் மாதம் கத்திரிப்புலம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சத்துணவு அமைப்பாளர் மாரியப்பன் ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்நிலையில் தற்போது பள்ளியில் தலைமையாசிரியர் மகேந்திரன், சமையலராக வசந்தா மட்டுமே பணியாற்றி வருகிறார். ஆசிரியர் பணியில் ஒருவரே உள்ளதால், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, அனைத்து வகுப்பு மாணவ, மாணவியரையும் ஒரே அறையில் அமர வைத்து, தலைமையாசிரியர் மகேந்திரன் பாடம் எடுத்து வருகிறார்.
போதிய ஆசிரியர்கள் பணியில் இல்லாததால், ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்வித்தரம் அடியோடு பாதிக்கிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கொத்தாங்காடு பகுதி மக்கள் கூறுகையில், "கொத்தங்காடு பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளியில், வெறும் 26 மாணவ, மாணவியர் மட்டுமே சேர்ந்து படிக்கின்றனர்.
ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். அவரும் தலைமையாசிரியர் பொறுப்பு வகித்து கொண்டு, பாடம் எடுப்பதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அதனால் போதிய அளவில் கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்," என்றனர்.
No comments:
Post a Comment