பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகும் "பிசி" யாக செயல்படும் பள்ளிகளை கண்டு கொள்ளாத கல்வித் துறையால் சமூக விரோத செயல்கள் தொடருவதாக ஆசிரிய சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண கொள்ளை வசூல் முடிந்த நிலையில் தற்போது வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு போட்டியாக பல்வேறு அரசு பள்ளிகளிலும் கட்டண கொள்ளை நடந்து வந்த நிலையில் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கியுள்ளன. ஒரு சில வகுப்புகளுக்கு தொடர்ந்து "அட்மிஷன்" நடந்து வருகிறது.
ஆனால் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படாத நிலையில் இப்பள்ளிகளில் சேர முடியாத நிலையில் தனியார் பள்ளிகளை நாடி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.
இதே போல், முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்கள் உட்பட பல்வேறு அதிகாரிகளின் காலி பணியிடங்கள் நீடிப்பதால் கல்வித் துறையில் பணிகள் தேக்கம் அடைந்துள்ளதோடு மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் பாதிக்கப்பட்டுள்னர்.
இதற்கிடையில் மாவட்டத்தில் கல்வித் துறை அறிவித்த கால அட்டவணையை மீறி மாலையில் கூடுதல் நேரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சில பள்ளிகளில் பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகு பள்ளி வளர்ச்சி குழுவினர் என்ற பெயரில் சிலர் தினமும் பள்ளிகளுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தினமும் பள்ளி "வசூல்" கணக்குகளை "ஆய்வு" செய்வதோடு பள்ளி வளாகத்தை "ஆக்ரமித்து" பல சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக ஆசிரிய சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.
இரவு காவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஒரு சில ஆசிரியர்கள் இந்த "ஆய்வு" பணியில் பங்கேற்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் இரவு காவலர்கள் இல்லாத நிலையில் நள்ளிரவு வரை விரும்பத்தகாத சம்பவங்கள் நீடிக்கிறது. பள்ளி வளாகத்தில் பாட்டில்கள், "பலான" பொருட்களை விட்டு செல்வதால் மறுநாள் காலையில் பள்ளி வரும் மாணவிகள், பெண் ஆசிரியைகள் பாதிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததல் மாணவ, மாணவிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, மாவட்டத்தில் பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகும் "பிசி"யாக செயல்படும் பள்ளிகளையும், பள்ளி வளாகத்தில் இரவு வரை இருக்கும் சமூக விரோத கும்பல்களையும், இதற்கு உடந்தையாக இருக்கும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை கண்காணித்து கல்வித் துறை மற்றும் போலீஸ் துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரிய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
No comments:
Post a Comment