அனுமதியின்றி சுற்றுலா செல்லும் பள்ளிகளுக்கு "பாடம்': காற்றில் பறக்கவிடப்படும் விதிமுறைகள்
மதுரை :மதுரை மாவட்டத்தில், கல்வி சுற்றுலா செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை, என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விளைவே, 4 மாணவர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
புத்தகங்களில் படிக்கும் பண்பாடு, கலாசாரம் மற்றும் வரலாறு சார்ந்த இடங்களுக்கு, மாணவர்களை நேரடியாக அழைத்துச் சென்று, ஆசிரியர்கள் விளக்கும்போது, அவை மாணவர்களின் மனதில் பதியும். மேலும், வகுப்புச் சூழலில் இருந்து மாறுதல் கிடைக்க, மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.ஆனால், இதில் "ரிஸ்க்' அதிகம் என கருதும் கல்வி அதிகாரிகள், 3 ஆண்டுகளாக எந்த பள்ளிக்கும் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால், அதிகாரி அனுமதி இல்லாமல் சுற்றுலா செல்வது தொடர்கிறது.
விதிமுறைகள் என்ன:
சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், தொடக்க பள்ளிகள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமும், அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலர் அல்லது முதன்மை கல்வி அலுவலரிடமும், மெட்ரிக் பள்ளிகள், மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடமும் எழுத்துப் பூர்வ அனுமதி பெறவேண்டும்.பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் ஆசிரியர்கள் உடன் செல்ல வேண்டும். நீர் நிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல, சிறப்பு அனுமதி (பெரும்பாலும் இதற்கு அனுமதி அளிப்பதில்லை) பெறவேண்டும். இப்பகுதிக்கு செல்லும்போது ஆசிரியர்களில் ஒருவர், கட்டாயம் நீச்சல் தெரிந்தவராக இருக்கவேண்டும். சுற்றுலா பகுதிக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட சுற்றுலா அலுவலரிடமும் அனுமதி பெற வேண்டும். மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள், பதிவெண்கள், செல்லும் வழிகள் போன்ற அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
சுற்றுலா செல்ல, அரசு பள்ளிகளுக்கு எழுத்துப் பூர்வ அனுமதி வழங்கப்படுவதில்லை. வாய்மொழியாக ""உங்கள் "ரிஸ்க்' பார்த்து கூட்டிட்டு போயிட்டு வாங்க,'' என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், பல மெட்ரிக் பள்ளிகள் இதுபோன்ற அனுமதியை கூட பெறுவதில்லை.
முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி கூறுகையில், ""சுனாமிக்கு பின், கடற்கரை பகுதிக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதியை பின்பற்றியிருந்தால், நான்கு மாணவர்களின் உயிர் தூத்துக்குடி கடலில் பிரிந்திருக்காது,'' என்றார்.கல்விச் சுற்றுலா செல்வதற்கான வரைமுறைகளை பின்பற்றி, செயல்படுத்துவதில், பள்ளி நிர்வாகமும், அதிகாரிகளும் இனியாவது உரிய கவனம் செலுத்தவேண்டும்.
No comments:
Post a Comment