ஆசிரியர்ப் பணி தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கை புறக்கணிப்பை கைவிட வேண்டும்: சிபிஎம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இரண்டு நாட்கள் (02-03.07.2013) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் தோழர்.டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில்,
தமிழ்நாடு ஆசிரியர் பணி தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது. தவறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இப்போது மீண்டும் தகுதித்தேர்விற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிகாட்டுதல் அடிப்படையிலும், இதர மாநிலங்களை பின்பற்றியும், தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதிக்கான நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டும் தமிழக அரசு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உரிய அளவில் தகுதித்தேர்வு மதிப்பெண்களை தளர்த்த நடவடிக்கை தேவையான எடுக்க வேண்டுமெனவும், பொதுப்பட்டியலை இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்பட அனைவரையும் மதிப்பெண்அடிப்படையில் நிரப்ப வேண்டுமெனவும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கடந்த தேர்வுகளில் மறுக்கப்பட்ட இடங்களை நிரப்பிடவும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பதால் தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கட்சி வலியுறுத்திகிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment