ஆசிரியர் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி ஆய்வுக்கு வந்த கல்வி அதிகாரி முற்றுகை பொதுமக்களின் போராட்டத்தால் வழுக்கம்பாறையில் பரபரப்பு
கன்னியாகுமரி
வழுக்கம்பாறையில் ஆசிரியர் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி ஆய்வுக்கு வந்த கல்வி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஆசிரியர் குறைப்பு
சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதில் ஒரு ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்ய அதிகாரிகள் முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், அந்த பகுதி பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மாணவர்களின் வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்வதற்காக உதவி தொடக்க கல்வி அதிகாரி சோபனகுமார் நேற்று வழுக்கம்பாறை அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்தார். இதுபற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மோகன் தலைமையில் பள்ளியின் முன்பு திரண்டனர்.
முற்றுகை போராட்டம்
பின்னர் அதிகாரி சோபனகுமாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த பள்ளியில் உள்ள 4 ஆசிரியர்களில் ஒருவரைக்கூட இடமாற்றம் செய்யக்கூடாது என்று அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு அதிகாரி சோபனகுமார் கூறும்போது, “30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் தற்போது நியமிக்கப்படுகின்றனர். இங்கு 90 மாணவர்களே உள்ளனர் என்பதால் 3 ஆசிரியர்கள் போதுமானதாகும்“ என்று கூறினார்.
இதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மோகன் கூறும்போது, “இங்கு 94 மாணவர்கள் படிக்கிறார்கள். எனவே, கண்டிப்பாக 4 ஆசிரியர்கள் இருக்க வேண்டும்“ என்று கூறினார். அதற்கு அந்த அதிகாரி 2 நாட்கள் பொறுத்திருந்து இதுபற்றி முடிவு எடுப்போம் என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment