விலையில்லா பொருள்களுக்கான சரக்கு போக்குவரத்து செலவை வழங்கக் கோரிக்கை
By நாகப்பட்டினம்
First Published : 01 July 2013 02:59 AM IST
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா பொருள்களை பள்ளிக்கு கொண்டு செல்வதற்கான செலவுத் தொகையை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நிர்வாகம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி. பன்னீர்செல்வம், சி. பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைச் செயலர் இரா. நீலா புவனேஸ்வரி, ஓய்வு பெற்றோர் பிரிவு மாவட்டச் செயலர் மு. கருணாநிதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டித் தந்த தமிழக அரசு நன்றி தெரிவித்துக் கொள்வது. வேதாரண்யம் ஒன்றிய தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள சேம நல நிதி கணக்கீட்டுத் தாளை உடனடியாக வழங்கக் கோருவது.
வேதாரண்யம் ஒன்றியம் புஷ்பவனம் கொத்தங்காடு பள்ளி கடந்த 2 ஆண்டுகளாக ஓராசிரியர் பள்ளியாக இயங்குவதைக் கருத்தில் கொண்டு, அந்தப் பள்ளிக்கு உடனடியாக ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்ய மாவட்டக் கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் உள்ள சார்நிலை கருவூலம் மூலம் மாத ஊதியம் வழங்கப்படுவதால், திருமருகல் ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணப் பயன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, நாகை சார்நிலை கருவூலம் மூலம் மாத ஊதியம் வழங்கக் கோருவது.
தமிழக அரசு மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருள்களை பள்ளிகளுக்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளப்படும் சரக்குப் போக்குவரத்து செலவுத் தொகையை, ஆசிரியர்களுக்கு வழங்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் மா. சித்தார்த்தன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment