மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தோரின் பள்ளிக்கே சிறப்பு குழு நேரில் சென்று ஆய்வு செய்யும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தேவராஜன் ரிவித்தார்.மதுரையில் நேற்று பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி தலைமை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேவராஜன் பேசியதாவது: பள்ளிகளில் விளையாட்டு விழாக்களை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும். இதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதேபோல் அறிவியல் கண்காட்சிகளும் மிகச் சிறப்பாக நடத்தப்பட வேண்டும். வியக்க வைக்கும் நவீன கண்டுபிடிப்புகளுடன் மிகப்பெரிய அளவிலான விழாக்களாக இவை இருக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்களை ஒவ்வொரு பள்ளிக்கும் நேரடியாக வழங்கவும், தலைமையாசிரியர்கள் குறிப்பிட்ட மையத்திற்கு சென்று விலையில்லா பொருட்களை பெற்று வருவதில் செலவும், சிரமமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவு அறிவிக்கப்படும்.
மாநில நல்லாசிரியர் விருதுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான ஆசிரியருக்கு விருது கிடைக்கவும், தவறுகள் நடக்காமல் இருக்கவும் தமிழகத்தில் இந்த ஆண்டு புதிய நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி மாவட்டம் தோறும் முதன்மைக்கல்வி அதிகாரி, கல்வி மாவட்ட அதிகாரி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் 2 தலைமையாசிரியர்கள் கொண்ட சிறப்பு குழு ஏற்படுத்தப்படும். மாநில விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர் பணியாற்றும் பள்ளிக்கே இக்குழுவினர் நேரில் செல்வர். அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் பணித்திறன், சமூகப்பணி ஈடுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து, அறிக்கை வழங்குவர். இதில் தேர்வானோரை கல்வித்துறை இணை இயக்குநர் நேர்காணல் நடத்தி தகுதியான ஆசிரியரை தேர்வு செய்வார். இவ்வாறு அவர் பேசினார்
.
No comments:
Post a Comment