தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் எவை?
பட்டியல் வெளியாவதில் தாமதம், அட்மிஷனுக்கு மாணவர்கள் தவிப்பு
கருத்துகள்

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 150 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பள்ளிகள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே மேல் கல்விக்கு தயாராக உள்ள மாணவர்கள் எங்கு சேர்வது என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கு 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்தார். ஆனால் இதுவரை தரம் உயரும் பள்ளிகளின் பெயர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. ஆனால் 2 மாதத்துக்கு முன்பே தங்கள் மாவட்டத்தில் தரம் உயர்த்த தகுதி உள்ள பட்டியல்கள் விபரங்களை மாவட்ட கல்வித்துறை மாநில கல்வித்துறைக்கு அனுப்பினர். மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த தகுதியான பள்ளிகள் என 260 பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இருந்து 100 பள்ளிகளை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும். இது போல் மேல் நிலைப்பள்ளிகளாக மாற்றப்பட உள்ள நடுநிலைப்பள்ளிகள் பட்டிய லும் பரிசீலனைக்காக முன்னரே அனுப்பப்பட்டன. வரும் 20ம் தேதி எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. மேலும் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை தனியார் பள்ளிகளில் மும்முரமாக நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு 10ம் வகுப்பில் இதுவரை இல்லாத அளவு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதால் 11ம் வகுப்பிற்கு சேர அனைத்து பள்ளிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் 10ம் வகுப்பு வரை உள்ள அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பிளஸ் 1ல் சேர்வதற்கு எங்கு செல்வது என்று அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள பள்ளிகளின் விபரங்களை உடனடியாக வெளியிட்டால் அப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து பயில இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும் என பெற்றோர் கருதுகின்றனர். எனவே சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் விபரங்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும் என மாண வர்களும் பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்

No comments:
Post a Comment