அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டுமே நியமனம் தமிழக அரசு உத்தரவு
சென்னை,
அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இனிமேல் ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணி இடங்களில் பெண்களை மட்டுமே நியமிக்கவும், இதேபோல் ஆண்கள் பள்ளிகளில் ஆண்களை மட்டுமே நியமிக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளிகள்
கடந்த கல்வி ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் 34,871 ஆரம்பப் பள்ளிகளும், 9,969 நடுநிலைப்பள்ளிகளும், 5,167 உயர்நிலைப்பள்ளிகளும், 5,660 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் ஆகியவை அடங்கும், இந்த பள்ளிகளில் 1½ கோடி மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.
அரசு பள்ளிகள் என்று பார்த்தால் 23,522 ஆரம்பப் பள்ளிகள், 7,651 நடுநிலைப்பள்ளிகள், 3096 உயர்நிலைப்பள்ளிகள், 2,595 மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. அரசு பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் ஆசிரியர் பதவிகளில் ஆண்கள் பள்ளிகள், பெண்கள் பள்ளிகள் என்று பாகுபாடு இல்லாமல் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றனர்.
பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகள்
இந்த நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இனிமேல் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். அதேபோல், ஆண்கள் உயர்நிலைப்பள்ளிகளிலும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர். இருபாலர் (கோ–எட்) அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஆண்களும், பெண்களும் நியமிக்கப்படுவார்கள். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment