- பாரதி தம்பி
ஓவியம்: ஹாசிப்கான்
அது ஒரு பள்ளிக்கூட வகுப்பறை. ஐந்தாம் வகுப்பு. சுமார் 60 மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களில் பள்ளிக் கட்டணத்தை முழுமையாகக் கட்டாத நான்கு பேர் மட்டும் வகுப்பறையின் ஓரமாகத் தனித்து அமர வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர், திருத்திய விடைத்தாள்களை எல்லோருக்கும் தருகிறார்; அவர்களுக்கு மட்டும் தரவில்லை. வருகைப் பதிவேட்டுக்காக ஒவ்வொருவரின் பெயராக அழைக்கிறார். ''பிரசன்ட் சார்'' என்று சொல்லக் காத்திருந்த அந்த நால்வரின் பெயர்கள் மட்டும் இறுதிவரையிலும் அழைக்கப்படவில்லை. நடத்திய பாடத்தில் இருந்து எல்லா மாணவர்களிடமும் கேள்வி கேட்கப்படுகிறது. அந்த நால்வரிடமும் மட்டும் எதுவும் கேட்கப்படவில்லை. வழக்கமாக பள்ளி முடியும் நேரம் 4.30 மணி என்றால், அந்த நான்கு பேர் மட்டும் 3.30 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
- இங்கு ஒரு பள்ளி வகுப்பறை சேரி ஆகிறது.
எல்.கே.ஜி. சீட்டுக்கு 50 ஆயிரம் கொடுத்தாலும் அனுமதி கிடைக்காத புகழ்பெற்ற பள்ளி அது. போட்டி போட்டுக்கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்த்தனர். பள்ளியின் கொள்ளளவைவிட மூன்று மடங்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஒரே நேரத்தில் எல்லா மாணவர் களையும் அமரவைத்து வகுப்பெடுக்க வகுப்பறைகள் போதாது. என்ன செய்யலாம்? காலை 8 மணிக்கு துவங்கி ஒரு ஷிஃப்ட்; 11 மணிக்கு துவங்கி ஒரு ஷிஃப்ட் என பள்ளிக்கூட நேரம் பிரிக்கப்பட்டது.
- இங்கு பள்ளிக்கூட வகுப்பறை, ஒரு தொழிற் சாலை ஆகிறது.
முந்தையது நடந்தது கடலூர் மாவட்டத்தில். பிந்தையது நடப்பது சென்னை நகரத்தில். ஒரு பள்ளி மாணவனை வகுப்பறையிலேயே ஒதுக்கிவைத்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் இத்தகைய தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்குத்தான், பெற்றோர்கள் தவமாய் தவமிருக்கின்றனர். ஒரு தொழிற்சாலையின் உதிரி பாகத்தைப் போலக் குழந்தைகளை வைத்து ஷிஃப்ட் முறையில் சம்பாதிக்கும் இவர்களுக்கு கொட்டிக் கொடுக்கத்தான் உயிரைக் கொடுத்து உழைக்கிறது நடுத்தர வர்க்கம். ஆசை ஆசையாகப் பெற்று வளர்த்து, பள்ளிக்கு அனுப்பி, குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் அடகுவைத்துப் பணம் கட்டினால், இவர்கள் நம் பிள்ளைகளைப் பணயக் கைதிகளைப் போலப் பிடித்து வைத்துக்கொண்டு பணம் பறிக்கிறார்கள்.
''தனியார் பள்ளிகளில் இன்ன வகுப்புக்கு இவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நீதியரசர் சிங்காரவேலர் கமிட்டி ஒரு வரையறை வகுத்துள்ளது. ஆனால், அதைத் தனியார் பள்ளிகள் கழிவறை காகிதமாகக்கூட மதிப்பது இல்லை. எல்.கே.ஜி-க்கு பில் போட்டு 6 ஆயிரம் என்றால், பில் போடாமல் இன்னொரு 6 ஆயிரம் கொடுத்தால்தான் சீட் கிடைக் கும். 'அரசு நிர்ணயித்த கட்டணத்தை வாங்கு’ என்று சொன்னால், 'அரசுக் கட்ட ணம்னா, அரசாங்க ஸ்கூலுக்குப் போ’ என்று திமிராகப் பதில் சொல்கிறார்கள்.
எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், யாருக்கும் அச்சப்படாமல் பகல்கொள்ளை அடிக்கிறார்கள். கண்காணித்து, தண்டித்து, முறைப்படுத்த வேண்டிய அரசாங்கமோ இந்த கல்விக் கொள்ளையர்களைக் கண்டுகொள்வது இல்லை. ஆனால், நாங்கள் அப்படிச் சும்மா விடுவதாக இல்லை. இடைவிடாமல் போராடுவோம். அப்படிப் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறோம்'' என்கிறார் வெங்கடேசன். கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கிவரும் 'மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின்’ கடலூர் மாவட்டத் தலைவர் இவர்.
'அரசுக் கட்டணத்தைத்தான் செலுத்துவோம்’ என இவர்கள் நடத்திய பல போராட்டங்கள் மூலமாக, இன்று அந்தப் பகுதிகளில் பல பள்ளிகள் வேறுவழியே இல்லாமல் அரசுக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கின்றன. ஆனால், அவை வெகு சில பள்ளிகள்தான். இன்னும் பல நூறு பள்ளிக்கூடங்களில் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. ஓர் உதாரணத்துக்கு திருச்சி நகரில் உள்ள ஒரு சுமாரான பள்ளியில் 2,500 மாணவர்கள் படிக்கிறார்கள். ஒரு மாணவனுக்கு மிகக் குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் சுமார் 2.75 கோடி ரூபாய் வருகிறது. எனில் அந்த நகரில் உள்ள மொத்தப் பள்ளிகளையும் கணக்கிட்டால் எவ்வளவு வரும்? ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை கோடி? சென்னையில் எவ்வளவு? மொத்தத் தமிழ்நாட்டிலும் ஒரு ஆண்டில் புழங்கும் பணம் எவ்வளவு? ஸ்பெக்ட்ரம்ஊழ லுக்கு நிகரான கொள்ளையல்லவா இது!
''தனியார் பள்ளி முதலாளிகள் முதலீடு போட்டுத் துவங்கியிருக்கும் தொழில் இது. பெற்றோர்களாகிய நீங்கள், பணம் கொடுத்து அவர்களிடம் ஒரு சேவையைப் பெறுகிறீர்கள். வாடிக்கையாளராகிய உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டியது அவர்களது கடமை. ரெண்டு ரூபாய்க்குப் பச்சைமிளகாய் வாங்கினாலும் மளிகைக் கடை அண்ணாச்சி மரியாதையாகத் தான் நடத்துகிறார். நீங்கள் மட்டும் 50 ஆயிரத் தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு ஏன் பிரின்சிபல் ரூம் வாசலில் கூனிக் குறுகி நிற்க வேண்டும்? எதிர்த்துக் கேள்வி கேளுங்கள். 'படிப்பு விஷயம் சார்... நாம ஏதாச்சும் எதிர்த்துப் பேசி, பசங்களோட எதிர்காலம் ஸ்பாயில் ஆயிடக்கூடாதுல்ல.?’ என்று இதற்குப் பதில் சொல்வார்கள். என்றால், உங்கள் பிள்ளைகள் என்ன பணயக் கைதிகளா? இப்படிப்பட்ட அடிப் படை ஒழுக்கத்தைப் பின்பற்றாத பள்ளியில் படித்தால்தான் உங்கள் பிள்ளையின் எதிர்காலம் கெட்டுப்போகும். மாணவர்களுக்காகத்தான் பள்ளிக்கூடமே தவிர, பள்ளிக்கூடத்துக்காக மாணவர்கள் இல்லை.
முதலில் ஒவ்வொரு வகுப்புக்கும் எவ்வளவு கட்டணம் என்பதைப் பள்ளிக் கூடங் களின் நோட்டீஸ் போர்டில் எழுதி ஒட்ட வேண்டும். இது அரசு விதி. ஆனால் 'ஒட்ட முடியாது’ என்று திமிராகச் சொல்கிறார்கள். வாங்கும் காசுக்கு ரசீது தர வேண்டும். இதுவும் விதி. ஆனால், இவை எதுவுமே கடைபிடிக்கப்படுவதில்லை. பல பள்ளிகளின் தாளாளர்களுக்கு அரசியல் பின்புலம் இருப் பதால் தனியரு பெற்றோராக அவர்களை எதிர்ப்பது சிரமமாக இருக்கும். ஆனால், நாம் சங்கமாக ஒன்று சேர்ந்து போராடினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படிப் போராடாமல் இவர்களை எதுவும் செய்ய முடியாது. வேறு எதற்கும் இவர்கள் அஞ்சவும் மாட்டார்கள். பெற்றோர்களாகிய நாம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் திரண்டு பள்ளிக்கூடம் முன்பு உட்கார்ந்தால் அதிகாரிகள் தேடி வருவார்கள்; வர வைக்க வேண்டும். மற்றபடி மனு கொடுத்தோ, வழக்குப் போட்டோ இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது!'' என்கிறார் இந்த சங்கத்தின் ஆலோசகரான வழக்கறிஞர் ராஜூ.
பல பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்ட ணத்தை மட்டுமே செலுத்திய மாணவர்கள் டி.சி. கொடுத்து அனுப்பப்படுகின்றனர். யாரிடம் இதற்கு முறையிடுவது என்றுகூடப் பெற்றோர்களுக்குத் தெரியவில்லை. மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனு போடலாம்; சிங்காரவேலர் கமிட்டியிடம் முறையிடலாம்; நீதிமன்றத்துக்குப் போகலாம்... இதெல்லாம் இருக்கும் வாய்ப்புகள். ஆனால், தனியரு பெற்றோருக்கு இது நடைமுறைச் சாத்தியம் இல்லாதது. பெற்றோர்கள் கூட்டாகத் திரண்டுவந்து தட்டிக் கேட்க வேண்டும். அப்போதுதான் பள்ளிக்கூட உரிமை யாளர்கள், 'பெயர் கெட்டுப்போய்விடும்’ என்று பயப்படுவார்கள். 'பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடக் கூடாது’ என்ற அவர்களின் அச்சம்தான் பெற்றோர்கள் சுதாரிக்க வேண்டிய இடம். 'இந்தப் பள்ளியின் உண்மையான கட்டணம் இவ்வளவுதான்’ எனப் பெற்றோர் சங்கம், போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். இப்படிச் செயல்பட்டால் கொடுத்த டி.சி-யைத் தானாகவே வாங்கி பள்ளியில் சேர்ப்பார்கள். இப்படிப் பல இடங்களில் நடக்கவும் செய்திருக்கிறது. முக்கிய மானது, இதைத் தனி ஒருவரால் செய்ய முடியாது. சங்கமாகத் திரண்டால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும்!
- ஆனந்த விகடன்
No comments:
Post a Comment