பள்ளி சேர்க்கைக்கு மாணவர்களை தேடும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்ஜூன் 01,2013,11:34 IST
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் மாணவர்களை சேர்க்க, கிராமம் கிராமமாக மாணவர்களை தேடி அலைகின்றனர்.
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில், அரசு துவக்கப்பள்ளிகள், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் என 85 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கைக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை தேடி அலைகின்றனர். போட்டி போட்டு ஆசிரியர்கள் வருவதால், மாணவர்களுக்கு கடும் "கிராக்கி" ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மே மாத துவக்கத்திலேயே, பல குழுக்களாக பிரிந்து, வீடு வீடாக சென்று, தங்கள் பள்ளியில் மாணவனை சேர்த்தால், என்ன வசதிகள் கிடைக்கும் என பெற்றோர்களுக்கு விளக்கம் தருகின்றனர். அரசு தரும் நல திட்ட உதவிகள், கூடுதலாக புத்தக பை, இலவச டூர், இலவச பஸ் வசதி போன்றவைகளை கூறி, பெற்றோர்களுக்கு ஒரு தொகையும் கொடுத்துமாணவனை தங்கள் பள்ளியில் சேர்க்க படாதபாடு படுகின்றனர்.
மேலும், மாணவர் வேறு பள்ளிக்கு சென்று விடாமல் இருக்க, பள்ளி திறக்கும் வரை அவ்வப்போது சென்று கண்காணிக்க வேண்டிய நிலையில், ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் இதை, அரசு துவக்கபள்ளி ஆசிரியர்கள் செய்வதில்லை.
மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தாலும் இவர்களுக்கு கேள்வி இல்லை. பெரும்பாலான அரசு பள்ளிகளில் 10க்கு குறைவான மாணவர்களே உள்ளனர். இவர்களுக்கு 3 ஆசிரியர்களே உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
தனியார் பள்ளி செயலர் ஒருவர் கூறுகையில், "அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான், மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் அலைய வேண்டியுள்ளது. மாணவர்களை எண்ணிக்கை குறைந்து போனால், கூடுதலாக ஆசிரியர்கள் உள்ளனர் என கூறி, அவரை மாற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு பயந்து, மாணவர்கள் சேர்க்கையை கூட்டவும், குறையாமலும் பார்த்து கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால், அரசு துவக்க பள்ளிகளுக்கு எதுவும் இல்லை. 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் இருந்தாலும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அரசு பள்ளிகளுக்கு தான், அரசு அதிக அக்கறை எடுத்துகொள்கிறது," என்றார்.
No comments:
Post a Comment