முப்பருவ கல்வி முறையில் முதல் பருவத்துக்கான இலவச பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகம் 3–ந் தேதி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
முப்பருவ கல்வி முறையில் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ள
முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளான 3–ந் தேதி
மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
முப்பருவ கல்வி
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் (2012–13) 1–ம் வகுப்பு முதல் 8–ம்
வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முப்பருவ கல்வி(செமஸ்டர் முறை) என்ற
புதிய கல்வி முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த கல்வி முறையில் பாடங்கள் 3 பருவங்களாக நடத்தப்பட்டன. மாணவர்கள்,
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த
கல்வி முறை வருகிற கல்வி ஆண்டில் 9–ம் வகுப்புக்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இலவச பாடப்புத்தகங்கள்
இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு உள்ள
தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில்
உள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் 1–ம் வகுப்பு முதல் 5–ம்
வகுப்பு வரை படிக்க உள்ள மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல்,
சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு உரிய முதல் பருவத்துக்கான இலவச
பாடப்புத்தகங்கள் அனைத்தும் திருச்சி ரோட்டில் உள்ள மாநகராட்சி
நடுநிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது.
3–ந் தேதி வினியோகம்
இவ்வாறு வரப்பெற்ற முதல் பருவத்துக்கான இலவச பாடப்புத்தகங்கள்
பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அந்தந்த ஒன்றியங்களில்
உள்ள பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் அல்லது அவரது அனுமதி பெற்ற
ஆசிரியர்கள் இலவச பாடப்புத்தகம் வினியோகம் செய்யும் இடமான திருச்சி
ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நேரில் வந்து புத்தகம்
வினியோகம் செய்யும் கல்வி அலுவலக பணியாளரிடம் தங்களது பள்ளிக்கு தேவையான
பாடப்புத்தகம் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை அடங்கிய பட்டியலை காண்பித்து
புத்தகங்களை பெற்றுச் சென்றனர்.
இவ்வாறு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வரும் இலவச
பாடப்புத்தகங்கள் கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளான அடுத்த
மாதம் (ஜூன்) 3–ந் தேதி மாணவர்களுக்கு வகுப்பு ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட
உள்ளது.
No comments:
Post a Comment