கல்லூரி மாணவர்கள் உள் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்: முதல்வர் ஜெ., அறிவிப்பு
கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் "மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், இதனால், அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும்' என, நூதனமாக ஒரு காரணத்தைக் கூறி, வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் முதல், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, தமிழில் எழுதக் கூடாது; ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். அரசின் உத்தரவை அடுத்து, இது குறித்த அறிவிப்புகள், கல்லூரிகளில் வெளியிடப்பட்டு உள்ளன.மாணவ, மாணவியரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்தாலும், இது, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த முடிவுக்கு அரசு தரப்பிலும், கல்வியாளர்கள் தரப்பிலும், புதிய முடிவு வரவேற்கப்பட்டாலும், கல்லூரி ஆசிரியர்கள் தரப்பிலும், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தரப்பிலும், எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அரசின் முடிவால், தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வதுடன், படிப்பை பாதியில் விடும் மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும் என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.
இதற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தலைமைச்செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்தேர்வுகளை தமிழ் அல்லது ஆங்கிலத்திலும் எழுதலாம். தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தங்களது தேர்வை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தங்கள் விருப்பப்படி, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதலாம். ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற உயர்கல்வி மன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உயர்கல்வி மன்றத்தின் ஆணை தமது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என கூறியுள்ளார்
No comments:
Post a Comment